தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் (ஹிந்தி)
விமர்சனம்
நடிப்பு - அமிதாப்பச்சன், ஆமீர்கான், பாத்திமா சனா ஷேக், காத்ரினா கைப் மற்றும் பலர்
தயாரிப்பு - யாஷ்ராஜ் பிலிம்ஸ்
இயக்கம் - விஜய் கிருஷ்ண ஆச்சார்யா
இசை - அஜய் - அதுல்
வெளியான தேதி - 8 நவம்பர் 2018
நேரம் - 2 மணி நேரம் 45 நிமிடம்
ரேட்டிங் - 2/5
ஹிந்தித் திரையுலகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு படம் தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான். சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் முதல் முறையாக அமிதாப்பச்சன், ஆமீர்கான் இருவரும் இணைந்து நடிப்பதாலும் எதிர்பார்ப்புகளை எகிற வைத்தது. ஆனால், படத்தில் எந்த விதமான அழுத்தமான கதையும், விறுவிறுப்பான திரைக்கதையும் இல்லாதது ரசிகர்களை மிகப் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாக்கிவிட்டது.
பாகுபலி 2 படத்தின் வசூலையே இந்தப் படம் மிஞ்சும் என்றெல்லாம் ஜோதிடம் சொன்னார்கள். படத்தின் டிரைலர் வேறு 8 கோடி பார்வைகளைக் கடந்தது. தமிழ், தெலுங்கிலும் படத்தை டப்பிங் செய்து வெளியிடுவதாலும் இந்திய அளவிலும், உலக அளவிலும் புதிய சாதனைகளைப் படைக்கும் என்றார்கள். ஆனால், அனைத்துமே வீணாகப் போய்விட்டது.
பாகுபலியைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட படமாகத்தான் தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் அமைந்துவிட்டது.
1795ம் ஆண்டு, இந்தியாவில் வணிகம் செய்ய வந்த கிழக்கிந்தியக் கம்பெனியர் கொஞ்சம் கொஞ்சமாக பல ராஜ்ஜியங்களைக் கைப்பற்றி அவர்களது ஆட்சி அதிகாரத்தை பரவலாக்கி மக்களை அடிமைப்படுத்தி வந்தார்கள். அப்படி ஆங்கிலேயரிடம் அடிமைப்படாமல் இருந்த குறுநில ராஜ்ஜியம் ரோனக்பூர். அந்த நாட்டிற்கு படையெடுக்கும் ஆங்கிலேய அரசை, இங்கு நடத்திக் கொண்டிருக்கும் கிளைவ், ரோனக்பூர் மன்னர், ராணி, அவர்களது மகன் ஆகியோரைக் கொன்று ரோனக்பூரைப் பிடிக்கிறார். மன்னரின் மகளைக் கொல்லும் சமயம் புரட்சியாளரான ஆசாத் வந்து அந்த சிறுமியைக் காப்பாற்றிக் கொண்டு சென்றுவிடுகிறார்.
11 வருடங்கள் கழித்து ஆசாத், மன்னரின் மகளை வீரமங்கையாக வளர்த்து ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட வைக்கிறார். ஆசாத் தலைமையிலான புரட்சிக் கூட்டம் மறைவாக வாழ்ந்து ஆங்கிலேயர்களின் கப்பல்களைத் தாக்கி அவற்றைக் கைப்பற்றுகிறார்கள். ஆசாத்தால் தடுமாறும் ஆங்கிலேயே கவர்னர் கிளைவ், இந்திய உளவாளியான பிராங்கிமல்லாவை வைத்து ஆசாத்தைப் பிடிக்க நினைக்கிறார். அதில் ஆங்கிலேயே கவர்னர் கிளைவ் வெற்றி பெறுகிறாரா அல்லது கிளைவ்வைக் கொல்லத் துடிக்கும் ஆசாத் வெற்றி பெறுகிறாரா என்பதுதான் படத்தின் கதை.
புரட்சியாளர் குதாபட்ச்ஷ் ஆசாத் ஆக அமிதாப்பச்சன். பாகுபலி படத்தின் சத்யராஜ் கதாபாத்திரத்தை ஞாபகப்படுத்தும் ஒரு கதாபாத்திரம். அமிதாப்பச்சன் இது போன்ற தோற்றத்தில் ஏற்கெனவே சில படங்களில் நடித்திருக்கிறார். முகத்தில் அதிகப்படியான சுருக்கத்தை மேக்கப் மூலம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். வயதானலும் அவரது வாள்வீச்சும், சுறுசுறுப்பும் வியக்க வைக்கிறது. அமிதாப்புக்கு தமிழ் நடிகர் நிழல்கள் ரவி பொருத்தமான தமிழ் டப்பிங்கைக் கொடுத்திருக்கிறார்.
பணம், பொருள், சொத்துக்காக ஆங்கிலேயருக்கு உளவு சொல்லும் உளவாளி பிராங்கிமல்லா-ஆக ஆமீர்கான். படத்தின் கலகலப்புக்கு இவர்தான் காரணம். இவருக்கான தமிழ் வசனங்களும், டப்பிங்கும் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. மூக்குத்தி, கலைந்த தலை, அழுக்கான உடைகள் என வித்தியாசமான தோற்றத்தில் ஆமீர்கான். ஆங்கிலேயருக்கு தான் ஒரு அடிமை என அவர் பேசும் காட்சிகளில் அப்படி ஒரு உடல்மொழி. எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதற்குப் பொருத்தமான தன்னை மாற்றிக் கொள்வதில் அவருக்கு நிகர் அவரே.
இளவரசியாக இருந்து புரட்சிக்காரராக மாறும் சபீரா பெய்க் கதாபாத்திரத்தில் பாத்திமா சனா ஷேக். எப்போதுமே ஒரு வெறுப்புப் பார்வையுடன் இருக்கிறார். ஆங்கிலேயர்களை எதிர்த்து சர்வசாதாரணமாக வாள் வீசுகிறார். பறந்து பறந்து தாக்குகிறார். தமிழில் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நாயகி நித்யா மேனன் தோழி கதாபாத்திரத்தில் நடித்தவராம் இவர்.
காத்ரினா கைப் இரண்டு கவர்ச்சி நடனப் பாடல்களுக்கு மட்டும் பயன்பட்டிருக்கிறார். ஆங்கிலேயர்களை தன் அழகாலும், கவர்ச்சியாலும் கவர்ந்திழுக்கும் கதாபாத்திரம். காத்ரினா இவ்வளவு இறங்கி வந்து நடித்திருக்கிறாரே என ஆச்சரியப்பட வைக்கிறார்.
கிளைவ் ஆக லாயிட் ஓவன், அந்த ஆங்கிலேய ஆதிக்கத் திமிரை தன் பார்வையிலேயே காட்டிவிடுகிறார். ஆமீர்கான் நண்பர் சனீஸ்வரன் ஆக முகம்மது சஷான் அயூப், வரும் காட்சிகளில் எல்லாம் சிரிக்க வைக்கிறார். ஆங்கிலேயரைப் பார்த்தாலே வீரம் வந்துவிடும் என்று பேசும் காட்சியில் கைத்தட்டல் பெறுகிறார்.
மனுஷ் நந்தன் ஒளிப்பதிவில் திரையில் பிரம்மாண்டம் விரிகிறது. காத்ரினா கைப் நடனமாடும் பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. அவற்றை பிரம்மாண்டமான அரங்கில் தனி அழகுடன் படமாக்கியிருக்கிறார்கள்.
தமிழில் வசனம் எழுதியவரைப் பாராட்ட வேண்டும். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கேற்றபடியும், உதட்டசைவுக்கு முடிந்த அளவிற்குப் பொருத்தமான தமிழ் வசனங்களை எழுதியிருக்கிறார்.
பல காட்சிகளைப் பார்ப்பதற்கு பைரேட்ஸ் ஆப் கரிபியன் படத்தைப் பார்ப்பது போலவே உள்ளது. அமிதாப் தலைமையிலான புரட்சிக் கூட்டம் கடலும் மலையும் சார்ந்த இடத்தில் பதுங்கியிருப்பது தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளது. அவை அவதார் காட்சிகளை ஞாபகப்படுத்துகின்றன. கதைக்கு சம்பந்தமில்லாத இடமாக அவை இருக்கின்றன.
300 கோடி ரூபாய் செலவு, பிரம்மாண்டம் மட்டுமே ஒரு படத்தை ஓட வைத்துவிடாது. அதில் அழுத்தமான கதையும் இருக்க வேண்டும் என்று ஹிந்தித் திரையுலகத்திற்கு தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் நன்றாகவே புரிய வைத்திருக்கும்.
தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் - தடுமாற்றம்
பட குழுவினர்
தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் (ஹிந்தி)
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்
அமீர் கான்
பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கான். தயாரிப்பாளர் தாகிர் ஹூசைன்-ஜீனத் ஹூசைனின் மகனான அமீர்கான், 1965ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பிறந்தார். 8 வயதிலேயே சிறுவனாக சினிமாவில் தோன்றினார் அமீர்கான். அதன்பின்னர் வளர்ந்து இளைஞன் ஆனதும் அமீருக்கு சினிமாவில் தான் ஆர்வம் இருந்தது. ஆனால் அவரது பெற்றோருக்கு இது பிடிக்கவில்லை. பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி சினிமாவில் நடிக்க களமிறங்கினார். 1984ம் ஆண்டு ஹோலி என்ற படத்தில் நடித்தார். ஆனால் அதன்பின்னர் அவர் நடித்த கயாமத் சே கயாமத் தக் படம் தான் அவரை அடையாளம் காட்டியது. தொடர்ந்து 90களில் பல கமர்ஷியல் வெற்றி படங்களில் நடித்து பாலிவுட்டின் முன்னணி நடிகராக உயர்ந்தார்.