நடிகர்கள் : அமீர்கான், ஜைரா வாசிம், ராஜ் அர்ஜூன், மெஹர்
இயக்கம் : அத்வைத் சந்தன்
தயாரிப்பு : அமீர்கான்
அமீர்கான் கான் தயாரித்து, சிறப்பு தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் படம் தான் சீக்ரெட் சூப்பர்ஸ்டார். இப்படம் ரசிகர்களை சூப்பர் என சொல்ல வைத்ததா என்று பார்ப்போம்...
கதைப்படி, 15 வயதே ஆன இனிஷியா எனும் ஜைரா வாசிம், வதோராவில் உள்ள பள்ளி ஒன்றில் 10வது படித்து வருகிறார். அவரின் கனவே பெரிய பாடகியாக வேண்டும் என்பது தான். ஆனால் இதற்கு ஜைராவின் தந்தையான பரூக் எனும் ராஜ் அர்ஜூன் எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனால் ஜைராவின் தாயான நஜ்மா எனும் மெஹர், அவரின் கனவை நிறைவேற்றும் ஆசையில் உள்ளார். ஒருநாள் ஜைரா யூடியூப்பில் புதிய கணக்கு ஒன்றை தொடங்கி, தன் பாடிய நிறைய பாடல்களை பதிவேற்றம் செய்கிறார். இதை பார்த்து அசந்து போன சினிமாவில் புறக்கணிக்கப்பட்ட, தடை செய்யப்பட்ட சக்தி குமார் எனும் அமீர்கான், தன்னுடைய ஒரு படத்தில் பாட வைக்க வேண்டும் என்று எண்ணுகிறார். அமீரின் எண்ணத்தை ஜைரா நிறைவேற்றினாரா?, ஜைராவின் பாடகி கனவு நிறைவேறியதா? என்பது படத்தின் மீதிக்கதை.
படம் மொத்தமும் ஜைரா கானை சுற்றி தான் நகருகிறது. தங்கல் படத்திற்கு பிறகு கொஞ்சம் மெச்சூரிட்டியான வேடத்தில் அசத்தியிருக்கிறார்.
அமீர்கான் சிறப்பு தோற்றம் என்றாலும் அவரும், ஒரு வித்தியாசமான ரோலில் நடித்து அனைவரின் கை தட்டல்களை வாங்குகிறார்.
இவர்களை மாதிரியே ஜைராவின் பெற்றோர்களாக வரும் மெஹர், ராஜ் அர்ஜூன் உள்ளிட்டவர்களும் கச்சிதமான நடிப்பு.
இசை சம்பந்தப்பட்ட படம் என்பதாலே அமித் திரிவேதியின் இசை படத்திற்கு பக்க பலமாய் அமைந்திருக்கிறது. அனில் மேத்தாவின் ஒளிப்பதிவும் ரம்மியம்.
அறிமுக இயக்குநர் அத்வைத் சந்தன், தான் ஒரு அறிமுக இயக்குநர் என்று தெரியாத அளவுக்கு அவ்வளவு நேர்த்தியாக படத்தை இயக்கியிருக்கிறார். குறிப்பாக திரைக்கதையின் ஓட்டம் சிறப்பாக இருக்கிறது. மெஸேஜ் படம் என்றாலும் அதை ரசிகர்களுக்கு எப்படி கொடுக்க முடியுமோ அப்படி வழங்கியிருக்கிறார் இயக்குநர். அதோடு உணர்வுப்பூர்வமான காட்சிகளில் ரசிகர்களை உருகவும் வைத்திருக்கிறார்.
அமீர்கான் படங்கள் என்றாலே படத்தில் ஏதாவது மெஸேஜ் இருக்கும். சீக்ரெட் சூப்பர்ஸ்டாரிலும் அது தொடர்ந்திருக்கிறது. கனவு காண்பது நல்ல விஷயம் தான் அதை வெறும் கனவோடு நிறுத்தி கொள்ளாமல் அதை அடைய கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை சீக்ரெட்டாக இல்லாமல் உரக்க சொல்லியிருக்கிறது இந்த சீக்ரெட் சூப்பர்ஸ்டார்.