சர்கார் படங்களின் வரிசையில் அதன் மூன்றாம் பாகமாக அமிதாப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தான் சர்கார்-3. இப்படம் ரசிகர்களை மகிழ்வித்ததா...? என்று பார்ப்போம்.
படத்தின் ஒட்டுமொத்த கதையும் சுபாஷ் நகரே எனும் அமிதாப் பச்சனை சுற்றி தான் நகருகிறது. மும்பையில் செல்வாக்கு மிக்க பெரிய மனிதர் அமிதாப். மக்களும் அவர் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள். இது அங்குள்ள அரசியல்வாதியான கோவிந்த் தேஷ்பாண்டே எனும் மனோஜ் பாஜ்பாய்க்கு பிடிக்கவில்லை. மக்களை அமிதாப்பிற்கு எதிராக திருப்பிவிட்டு, அவரது இடத்தை பிடிக்க வேண்டும் என்று துடிக்கிறார். இதற்கு தொழிலதிபர் மைக்கல் எனும் ஜாக்கி ஷெரப்பும் உதவுகிறார்.
இதுஒருபுறம் இருக்க தன் தந்தையை கொன்ற அமிதாப்பை பழிவாங்க வேண்டும் களம் இறங்குகிறார் அனு கர்காரே எனும் யாமி கவுதம். இதற்காக அவர் தேர்ந்தெடுத்த ஆயுதம் அமிதாப்பின் பேரனான சிவாஜி நகரே எனும் அமித் சாதுவை காதல் வலையில் விழ வைத்து அதன்மூலம் பழிவாங்க துடிக்கிறார்.
தாத்தாவை போலவே தாமும் பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கும் அமித் சில காரியங்களை செய்கிறார். இது நீண்டகாலமாக அமிதாப் உடன் இருக்கும் கோகுல் சாத்மா எனும் ரோனித் ராய்யிற்கு பிடிக்கவில்லை. இதனால் அமிதாப்பை அமித்திற்கு எதிராக திருப்பி விட, அமிதாப்பும், அமித்தை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். அதன்பிறகு அமிதாப்-அமித் இடையே நேரடியாக பிரச்னை வருகிறது.
இப்படி தன்னை பழிவாங்க துடிக்கும் பேரன் அமித், யாமி கவுதம், அரசியல்வாதி மனோஜ் பாஜ்பாய் மற்றும் தொழிலதிபர் ஜாக்கி ஷெரப் ஆகிய அனைவரையும் அமிதாப் தனி ஆளாய் எப்படி எதிர்கொள்கிறார். அதில் அவருக்கு வெற்றி கிடைத்ததா... இல்லை இதில் அவர் மாண்டு போனாரா...? என்பது சர்கார் 3 படத்தின் பரபரப்பான மீதிக்கதை.
நடிப்பில் தான் என்றும் கிங் தான் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் அமிதாப் பச்சன். இத்தனை வயதிலும் அவ்வளவு பிரமாதமாக நடித்திருக்கிறார். உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் சரி, கோபமான காட்சிகளிலும் சரி அத்தனையிலும் அவரது நடிப்பு மிளிர்கிறது.
மனோஜ் பாஜ்பாய், ஜாக்கி ஷெரப், யாமி கவுதம், ரோனித் ராய், அமித் சாத்... என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் இவர்களில் மனோஜ் பாஜ்பாயின் நடிப்பு தான் சிறப்பாக இருக்கிறது. ஜாக்கி ஷெரப்பின் நடிப்பு காமெடியாக தெரிகிறது. யாமி கவுதம் ஏதோ படத்தில் வந்தோம், போனோம் என்று இருக்கிறார்.
ரவி சங்கர், ரோகன் விநாயக் என இரண்டு பேர் இசையமைத்துள்ளனர். பின்னணி இசை சிறப்பாக இருந்தளவுக்கு பாடல்கள் இசை இதமாக இல்லை.
அமல் ரத்தோடின் ஒளிப்பதிவு ஓவியமாக இல்லாவிட்டாலும் ஒளிர்கிறது. அன்வர் அலியின் படத்தொகுப்பு இன்னும் பட்டை தீட்டியிருக்கலாம்.
சர்கார் 3 படத்தை ராம் கோபால் வர்மா இயக்கியிருக்கிறார். இயக்கத்தில் குறையேதும் இல்லை. படத்திற்கு பெரும்பலமாக வசனம் தெறிக்கிறது. முன்பாதி சற்று மெதுவாகவும், பின்பாதி விறுவிறுப்பாக நகருகிறது. ஆனால் கதையின் சுவாரஸ்யம் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருந்தால் சர்கார் 3 மேலும் சிறப்பாக இருந்திருக்கும். அவ்வாறு இல்லாதது படத்திற்கு பலவீனம்.
மொத்தத்தில், சர்கார்-3, அமிதாப் என்ற ஒற்றை மனிதருக்காக வேண்டுமானால் ஒருமுறை பார்க்கலாம், ரசிக்கலாம்.