
பிரின்ஸ் அண்ட் பேமிலி (மலையாளம்)
விமர்சனம்
தயாரிப்பு : மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன்
இயக்கம் : பின்டோ ஸ்டீபன்
இசை : சனல் தேவ்
நடிப்பு : திலீப், ரனியா ராணா, ஜானி ஆண்டனி, தியன் சீனிவாசன், சித்திக், ஊர்வசி, பிந்து பணிக்கர்
வெளியான தேதி : 09 மே, 2025
நேரம் : 2 மணி 14 நிமிடங்கள்
ரேட்டிங் : 2.75/5
கதைக்களம்
மலையாளத்தில் ஜனப்பிரிய நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் திலீப்பின் 150வது படமாக வெளியாகி உள்ளது இந்த படம். ஒவ்வொரு நடிகருக்கும் 100வது படம், 150வது படம் போன்றவை முக்கியமான மைல்கல் படங்கள் ஆகும். அந்த வகையில் இந்த 150வது திரைப்படம் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் திலீப்புக்கு கை கொடுத்துள்ளதா? பார்க்கலாம்.
மணப்பெண் உடை மற்றும் அலங்காரம் போன்றவற்றை செய்து கொடுக்கும் நிறுவனத்தை நடத்தி வருபவர் திலீப். திருமணத்திற்காக தனக்கு பார்க்கும் பெண்களின் குறை நிறைகளை கண்டுபிடித்துக் கொண்டு அவர் தாமதம் செய்து வருவதால், அவரது இளைய சகோதரர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி குழந்தைகளும் பிறந்து விடுகின்றன. ஒரு கட்டத்தில் அவரது கடைக்கு எதிரே உள்ள வங்கியில் மேனேஜராக பொறுப்புக்கு வரும் பெண் திலீப்புடன் நட்பாக பழகுகிறார். திலீப்பும் அந்தப்பெண்ணை விரும்பத் தொடங்க, அந்த பெண்ணோ அவருக்கு டுவிஸ்ட் கொடுக்கும் விதமாக தனது தாயை திலீப்புக்கு திருமணம் செய்து வைக்க விரும்பியே பழகி இருக்கிறார் என்பது பின்னர் தெரிய வருகிறது.
ஆனாலும் ஒரு வழியாக மேட்ரிமோனி மூலம் இன்னொரு பெண் திலீப்புக்கு கிடைக்கிறார். சோசியல் மீடியாவில் விளம்பரப் பிரியையான அவருக்கு திலீப்பை பிடித்து விடுகிறது. திலீப்புக்கும் இதை விட்டால் வேறு வழி இல்லை என அவரை திருமணம் செய்து கொள்கிறார். தனது திருமண நிச்சயதார்த்தம், திருமணம் போன்றவற்றையே ரீல்ஸ் வீடியோக்களாக எடுத்து யூடியூபில் வெளியிடும் அளவிற்கு விளம்பர மோகம் கொண்ட அந்த பெண்ணுடன் திலீப்பின் திருமண வாழ்க்கை எப்படி போகிறது? இதனால் என்னென்ன பிரச்னைகளை அவர் எதிர்கொள்கிறார்? எப்படி சமாளிக்கிறார் என்பது மீதிக்கதை.
பொதுவாக பிரபல ஹீரோக்கள் தங்களது 100வது, 150வது படங்களை கமர்சியல் பாணியில் ஆக்சன் படங்களாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள், அதையும் பிரபல இயக்குனர்கள் இயக்க வேண்டும் என விரும்புவார்கள். ஆனால் நடிகர் திலீப் ஒரு அறிமுக இயக்குனரை வைத்து தனது 150வது படத்தை இயக்க வைத்திருப்பது ஒரு ஆச்சரியம் என்றால், மாஸ் ஆக்சன், பஞ்ச் டயலாக் என எதுவும் இல்லாமல் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் ஈகோ மோதலை மையமாக வைத்து இந்த படத்தில் நடித்திருப்பது இன்னொரு ஆச்சரியம் தான்.
திலீப்பை குடும்ப ரசிகர்கள் எப்படி பார்க்க விரும்புவார்களோ அதேபோன்று வழக்கமான பாணியில் தான் நடித்திருக்கிறார். முதல் பாதியில் காமெடி, இரண்டாவது பாதியில் எமோஷன் என இரண்டு விதமான உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக இரண்டாம் பாதி முழுவதும் இளம்பெண்ணும் அதுவும் விளம்பர மோகம் கொண்ட மனைவியிடம் சிக்கிக் கொண்டு அவர் படும் அவஸ்தைகள் ஒரு கட்டத்தில் அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான காட்சிகளில் எகிறி அடிக்காமல், அண்டர்பிளே செய்தே நடித்துள்ளார் திலீப்.
திலீப்பின் மனைவியாக சிஞ்சு என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரனியா ராணா இடைவேளைக்கு சற்று முன்புதான் என்ட்ரி கொடுத்தாலும் வந்த நேரத்தில் இருந்து கிளைமாக்ஸுக்கு முன்பு வரை அதிரடி காட்டிக் கொண்டே இருக்கிறார். சோசியல் மீடியா மூலம் பிரபலமாகும் இளம்பெண்கள் பலரின் திருமண வாழ்க்கை இப்படித்தான் இருக்குமோ என்கிற ஒரு பயத்தையும் தனது கதாபாத்திரம மூலமாக ஏற்படுத்தி விடுகிறார்.
பெண் பார்க்கும் வைபவம், திருமண நிகழ்வு, முதல் இரவு, ஹனிமூன் என அனைத்தையுமே ரீல்ஸ் வீடியோக்களாக மாற்றி லைக்குகளையும் சப்ஸ்கிரைப்கர்களையும் மட்டுமே குறிவைத்து, குடும்ப வாழ்க்கையை கவனிக்காமல் விளம்பர மோகத்தில் திரியும் ஒரு இளம்பெண்ணின் கதாபாத்திரத்தை படு யதார்த்தமாக பிரதிபலித்துள்ளார். போகப்போக அவரது கதாபாத்திரத்தின் மேல் படம் பார்ப்பவர்களுக்கு கோபம் அதிகரித்துக் கொண்டே செல்லும் விதமாக அவரது நடிப்பு பாஸ் மார்க் அல்ல, பர்ஸ்ட் மார்க்கே பெற்றுள்ளது.. இவருக்கு இது முதல் படம் என்றால் நம்ப முடியவில்லை. மெதுவாக நகரும் படத்தை விறுவிறுப்பாக்குவதும் இவர்தான்.
திலீப்புடன் நட்பாக பழகி, திடீரென தனது அம்மாவை அவருக்கு திருமணம் செய்து வைக்கும் டுவிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மீனாட்சியின் அழகு நம்மை வசீகரிக்கிறது. திலீப்பின் நண்பராக சில நேரங்களில் அவரை எசகு பிசகாக சிக்கலில் மாட்டி விடுவதும், அதே சமயம் திலீப்புக்கு தக்க சமயத்தில் ஆலோசனை கூறி அவரை சாந்தப்படுத்துவதும் என முக்கிய நண்பராக இயக்குனர் ஜானி ஆண்டனி வழக்கம்போல தனது பங்கை செவ்வனே செய்திருக்கிறார்.
திலீப்பின் அப்பாவாக சித்திக், அம்மாவாக பிந்து பணிக்கர் இருவரும் வழக்கம் போல கலாட்டா தம்பதி. திலீப்பின் தம்பியாக வரும் தியான் சீனிவாசன் பெரிதாக ஏதாவது செய்வார் என்றால் பத்தோடு பதினொன்றாக கூட்டத்தில் கலந்து போய் ஏமாற்றம் தருகிறார். திலீப்பின் நலம் விரும்பியாக உடன்பிறவா சகோதரி போல நடித்திருக்கும் மஞ்சு பிள்ளை கதாபாத்திரம் படத்திற்கு இன்னொரு வலுவான தூண் போல. பாத்திரம் அறிந்து பிரகாசித்திருக்கிறார். கிளைமாக்ஸில் கலெக்டர் கதாபாத்திரத்தில் ஒரு காட்சியில் மட்டுமே என்ட்ரி கொடுத்து சோஷியல் மீடியா என்பது ஆபத்தான ஒரு மாயை என கருத்து சொல்லி போகிறார் ஊர்வசி
இடைவேளைக்குப் பிறகு ஒரு குதூகல மனநிலைக்கு ரசிகர்களை அழைத்து செல்வதில் சனல் தேவின் இசைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அதேபோல ஒளிப்பதிவாளர் ரணதீவுக்கும் இடைவேளை வரை பெரிய வேலை இல்லை. இடைவேளைக்குப்பின் பரபரவென அவரது கேமரா சுழன்றுள்ளது.
பிளஸ் & மைனஸ்
திலீப்புக்கு சமீப காலமாக ஆக்சன் படங்கள் கை கொடுக்காத நிலையில் இந்த குடும்பப் பாங்கான படத்தின் மூலம் மீண்டும் தனது குடும்ப ரசிகர்களை தக்க வைக்க முயற்சித்து இருக்கிறார். அவரது கதாபாத்திரத்திற்கு ஓரளவு வெற்றி கிடைத்து இருக்கிறது. அதே சமயம் இடைவேளைக்கு முன்பு வரை வழக்கமான பாணியில் திருமணம் ஆகாத ஒரு இளைஞரின் குடும்பத்தில் என்ன நடக்குமோ அது எல்லாமே எந்தவித திருப்பமும் இல்லாமல் நடப்பது அலுப்பை தருகிறது. திலீப்பின் திருமண வாழ்வில் ஏதாவது டுவிஸ்ட் நடக்காதா என்று எதிர்பார்க்கும் சமயத்தில் அவரது ஜோடியாக நடித்துள்ள ரனியாவின் என்ட்ரி உண்மையிலேயே படத்திற்கு பலம் தான்.
சோசியல் மீடியாவை எந்த அளவிற்கு பயன்படுத்த வேண்டும், அது மட்டுமே வாழ்க்கை அல்ல என்கிற ஒரு கருத்தை வலியுறுத்தும் விதமாக இந்த படத்தை கொடுத்துள்ளார் அறிமுக இயக்குனர் பின்டோ ஜோசப். ஆனால் படம் முடிந்து வெளியே வரும்போது திலீப்பின் 150வது படத்தை அவர் இன்னும் கொஞ்சம் பெட்டராக கொடுத்திருக்கலாமோ என்கிற எண்ணம் படம் பார்த்தவர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் தவறாமல் எழும்.
பிரின்ஸ் அண்ட் பேமிலி - கனவு மனிதர்கள்
பட குழுவினர்
பிரின்ஸ் அண்ட் பேமிலி (மலையாளம்)
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்