பவி கேர்டேக்கர் (மலையாளம்)
விமர்சனம்
தயாரிப்பு ; திலீப்
இயக்கம் ; வினீத் குமார்
இசை ; மிதுன் முகுந்தன்
நடிப்பு ; திலீப், ராதிகா சரத்குமார், ஸ்வாதி கொண்டே, ஜானி ஆண்டனி,
வெளியான தேதி ; 26 ஏப்ரல் 2024
நேரம் ; 2 மணி 33 நிமிடங்கள்
ரேட்டிங் 2.75/5
தொடர்ந்து ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு எட்டாவது ஆக வெளியாகி இருக்கும் இந்த 'பவி கேர்டேக்கர்' படத்தை தான் நடிகர் திலீப் பெரிதும் நம்பி இருக்கும் நிலையில் இந்த படம் அவருக்கு கை கொடுத்ததா ? பார்க்கலாம்.
ஒண்டிக்கட்டையான திலீப், ஒரு மிகப்பெரிய அப்பார்ட்மெண்ட் ஒன்றில் மதியம் முதல் இரவு வரை கேர்டேக்கர் ஆகவும், இரவு முழுவதும் செக்யூரிட்டியாகவும் இரட்டை பணி செய்கிறார். அதேசமயம் அபார்ட்மென்ட்டில் தங்காமல் தனியாக வசிக்கும் ரிட்டையர்டு போலீஸ் அதிகாரி ராதிகாவின் வீட்டு மாடி போர்ஷனில் வசிக்கும் திலீப் சரியாக வாடகை கொடுக்காமல் இழுத்தடிப்பதால் அவருடைய அறைக்கு இன்னொரு நபரையும் சேர்த்து வாடகைக்கு குடியமர்த்துகிறார் ராதிகா. இது திலீப்புக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. தான் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது அந்த நபர் வேலைக்கு சென்று விடுவதால் அவரை வீட்டை விட்டு துரத்தும் விதமாக காகித குறிப்புகளில் பல நிபந்தனைகளை விதித்து ஆங்காங்கே ஒட்டிவைத்து அவரை வெறுப்பேற்றி வெளியேற்ற முயற்சிக்கிறார் திலீப்.
ஆனால் அவை எதுவும் ஒர்க் அவுட் ஆகாத நிலையில் சில நாட்களுக்கு பிறகு தான் தனது அறையில் குடியிருப்பது ஒரு இளம்பெண் என்று தெரிய வர, அடுத்தடுத்து தனது செயல்பாடுகளில் அப்படியே டீசன்டாக மாற்றிக் கொள்கிறார் திலீப். அதற்கு அந்தப்பெண் நன்றி குறிப்பு எழுதி வைத்துவிட்டு செல்கிறார். அதன்பிறகு திலீப் செய்யும் விஷயங்களுக்கும் அந்த பெண்ணிடம் இருந்து பாராட்டு குறிப்புகள் கிடைக்கின்றன. திலீப்புக்காக அந்தப்பெண் சமைத்து வைத்து விட்டு செல்லும் அளவிற்கு நேரில் பார்க்காமல் பேசாமல் காகித குறிப்புகள் மூலமாகவே இருவருக்கும் ஒரு நட்பு உருவாகிறது. முகம் பார்க்காமலேயே அந்தப் பெண் மீது திலீப்புக்கு ஒரு ஈடுபாடு வருகிறது. அது காதலாகவும் மாறுகிறது.
அதே சமயம் இளம்பெண் குடியிருப்பதால் எக்காரணம் கொண்டும் திலீப் இரவு நேரங்களில் வீட்டுக்கு வரக்கூடாது என நிபந்தனை விதிக்கிறார் ராதிகா. அதையெல்லாம் மீறி எப்படியும் அந்த பெண் யார் என்று பார்த்து விட வேண்டும் என திலீப் சிலமுறை முயற்சி எடுக்க அவை எல்லாமே காமெடி கலாட்டாவாக மாறி தோல்வியில் முடிவடைகின்றன. ஒரு கட்டத்தில் அந்தப்பெண் நாம் இருவரும் ஏற்கனவே ஒருவரையொருவர் பார்த்து இருக்கிறோம் என்று ஒரு க்ளூ கொடுக்கிறார்.
அதை வைத்து ஏற்கனவே தான் பார்த்த ஒரு பெண்ணை ஞாபகப்படுத்தி நீ தானே என்று கேட்கிறார் திலீப். ஆனால் அடுத்த நாளே அந்த பெண் வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் காலி செய்துவிட்டு போய்விட, பித்து பிடித்தது போல ஆகிறார் திலீப். ஒரு நாள் அந்த பெண்ணுக்கும் வேறு ஒருவருக்கும் திருமணம் என திலீப்புக்கு அழைப்பிதழ் வர திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்காக செல்கிறார் திலீப். அங்கே அவருக்கு எதிர்பாராத இன்னொரு அதிர்ச்சி காத்திருக்கிறது.
அவர் அந்தப்பெண்ணின் திருமணத்தை தடுத்து நிறுத்தினாரா? திலீப் பார்க்காமலே காதலித்த பெண் அவள் தானா? இல்லை திலீப்பை காதலித்த பெண் வேறொருவரா? அப்படி என்றால் அது யார் என பல கேள்விகளுக்கு அந்த திருமண மண்டப கிளைமாக்ஸ் விடை சொல்கிறது.
கடந்த சில படங்களாகவே சீரியசான ஆக்சன் ரோல்களில் திலீப்பை பார்த்து சலித்த ரசிகர்களுக்கு இதில் மீண்டும் ஜனப்பிரிய நாயகனான ஒரிஜினல் திலீப்பாக காட்சி கொடுத்திருக்கிறார். வழக்கமான அவரது காமெடி, நையாண்டி, மென் சோகம், தன்னைத்தானே அட்டாக் செய்து நகைச்சுவை உருவாக்கும் பாணி என அனைத்து விதமான உணர்வுகளையும் கலந்து அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் திலீப். குறிப்பாக பாடிகார்ட் படத்திற்குப் பிறகு மீண்டும் அதே போன்று ஒரு திலீப்பையும் அந்த நடிப்பையும் இந்த படத்தில் பார்க்க முடிகிறது.
படத்தின் கதாநாயகி யார் என யூகிக்க முடியாதபடி கிட்டத்தட்ட ஐந்து பேர் குறுக்கும் நெடுக்குமாக படம் முழுக்க வந்து போகிறார்கள். திலீப்புடன் முகம் காட்டாமல் நட்புடன் பழகும் பெண் இவராக இருக்குமோ, அவராக இருக்குமோ என்று நம்மை படம் முடியும் வரை பலவாறாக யோசிக்க வைக்கும் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். கடைசியில் திலீப்பை இந்த அளவிற்கு ஆட்டுவித்தது யார் என்று தெரிய வரும்போது அட என்கிற ஒரு ஆச்சரியம் ஏற்படுகிறது. இந்த 5 பேரில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஈரமான ரோஜாவே சீரியல் புகழ் ஸ்வாதி கொண்டே.
வீட்டு ஓனராக காமெடி கலந்த வேடத்தில் ராதிகா சரத்குமார். ராம்லீலா படத்தில் திலீப்புக்கு அம்மாவாக நடித்தவர் பல வருடங்களுக்குப் பிறகு இதில் மீண்டும் திலீப்புடன் இணைந்து காமெடி காட்சிகளில் களை கட்டி உள்ளார். வாட்ச்மேன் ஆக வரும் ஜானி ஆண்டனி, திலீப்பின் உணர்வுகளுக்கு வடிகாலாக அமையும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். திலீப்புடன் கூடவே சுற்றித்திரியும் அப்பிராணியான 'ப்ரோ' என்கிற நாய் படத்தில் துவங்கி வைத்து க்ளைமாக்ஸில் முடித்து வைக்கும் அளவுக்கு அலப்பறை கிளப்புகிறது.
திலீப் வேலை பார்க்கும் அப்பார்ட்மெண்ட், அவர் வசிக்கும் ராதிகாவின் மேல் மாடி என இரண்டு இடங்களில் மட்டுமே கதை அதிக அளவு பயணித்தாலும் அது போரடிக்காதவாறு சுவாரசியமாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் வினீத் குமார். அதற்கு சானு தாகிரின் ஒளிப்பதிவு, மிகுன் முகுந்தனின் இசையும் ஒத்திசைந்து பயணித்திருக்கின்றன. படம் துவங்கிய அரை மணி நேரம் வரை இது எந்த பாதையில் பயணிக்கும் என யூகிக்க முடியாத ஒரு குழப்பம் நிலவினாலும் அதன்பிறகு ஏற்கனவே திலீப் நடித்த பாடிகார்ட் படத்தின் ரூட்டில் பயணிக்க துவங்கியதும் திரும்பவுமா என்று ஒரு கேள்வி எழுந்தாலும் கூடவே சுவாரசியமும் சேர்ந்து கொள்வதை மறுப்பதற்கு இல்லை.
திலீப்பும் அந்தப் பெண்ணும் எப்படியாவது இணைந்து விட வேண்டும் என்று நினைக்கும் நாம் ஒரு கட்டத்தில் திலீப்பாகவே மாறி மன அழுத்தத்திற்கு ஆளாகும் அளவிற்கு நம்மை படத்துடன் ஒன்ற வைத்து விடுகிறார் இயக்குனர் வினீத் குமார். அன்புக்காக ஏங்கும் உள்ளம் ஒன்று உங்கள் அருகிலேயே கூட இருக்கலாம். அதை கவனிக்க தவறி விடாதீர்கள் என்கிற அழகான மெசேஜையும் இதில் சொல்லி இருக்கிறார்.
சமீப நாட்களில் வெளியான திலீப் படங்களில் அவருக்கு கிடைத்த சரிவையும் நமக்கு கிடைத்த அலுப்பு உணர்வையும் மாற்றி நீண்ட நாளைக்கு பிறகு ஒரு வழக்கமான திலீப் படத்தை பார்த்த திருப்தியை இந்த பவி கேர்டேக்கர் படம் கொடுக்கிறது.
பவி கேர்டேக்கர் ; பாடிகார்ட் பார்ட்-2
பட குழுவினர்
பவி கேர்டேக்கர் (மலையாளம்)
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்