ரிபு தாஸ்குப்தா இயக்கத்தில், அமிதாப்பச்சன், வித்யாபாலன், நவாசுதீன் சித்திக் ஆகியோரது நடிப்பில் வெளியாகியுள்ள திரில்லர் கிரைம் படம் தான் ‛‛டீன் (TE3N)''. இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்துள்ளது என்று இனி பார்ப்போம்...
கதைப்படி, 74வயதான ஜான் பிஸ்வாஸ் எனும் அமிதாப் பச்சனுக்கு ஏஞ்சலா என்ற 8-வயது பேத்தி இருக்கிறார். மர்ம நபர்கள் சிலரால் இந்த சிறுமி கடத்தப்பட்டு கொல்லப்பட, கொலையாளிகளை கண்டுபிடிக்க களமிறங்குகிறார் ஜான். அதேசமயம் போலீஸ் அதிகாரியான சரிதா சர்கார் எனும் வித்யாபாலனிடம் புகார் அளித்து நியாயம் கேட்கிறார். இதுஒருபுறம் இருக்க மற்றொருபுறம் முன்னாள் போலீஸ் அதிகாரியும், பாதிரியாருமான மார்ட்டின் தாஸ் எனும் நவாசுதீன் சித்திக்கிடமும் உதவி கேட்கிறார். பல கோரிக்கைக்கு பின்னர் ஜானுக்கு உதவ மார்டின் சம்மதம் சொல்கிறார். இந்தச்சூழலில் மீண்டும் ஒரு சிறுமி அதே மர்மநபர்களால் கடத்தப்படுகிறார். அது யார் என்று கண்டுபிடிக்க ஜான் களமிறங்குகிறார். கடத்தல்காரரை ஜான், சரிதா, மார்ட்டின் இவர்கள் மூவரில் யார் கண்டுபிடித்தார்கள்?, அவர்களுக்கு தண்டனை கிடைத்ததா? என்பது ‛‛டீன் (TE3N)'' விறுவிறுப்பான மீதிக்கதை.
ஜான் பிஸ்வாஸாக வரும் அமிதாப் பச்சன் இந்த வயதிலும் அவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிறார். நடிப்பில் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அப்படி ஒரு நடிப்பு அமிதாப்பிடம் வெளிப்படுகிறது.
அமிதாப்போலவே சிறப்பு தோற்றம் என்று படம் முழுக்க பயணிக்கும் சரிதா சர்காராக வரும் வித்யாபாலன், போலீஸ் வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார். இவர்கள் இருவரை போல நவாசுதீன் சித்திக்கின் நடிப்பும் சூப்பர்.
துசார் கன்டியின் ஒளிப்பதிவு மின்னுகிறது, ஆனால் அந்த ஒளிப்பதிவுக்கு ஏற்ற படத்தொகுப்பு படத்தில் சிறப்பாக இல்லை. படத்தின் இசையும் சுமார் ரகம் தான். இந்த கிரைம் கலந்த த்ரில்லர் கதையை எவ்வளவுக்கு எவ்வளவு சிறப்பாக கொடுக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு சிறப்பாக கொடுக்க முயற்சித்து அதில் பாதி மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் ரிபுதாஸ் குப்தா. படத்தின் முதல்பாதியில் இருக்கும் விறுவிறுப்பு, இரண்டாம் பாதியில் இல்லாதது பலவீனம். அத்துடன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை இன்னும் கொஞ்சம் வேறு மாதிரி எடுத்திருக்கலாம் இயக்குநர்.
பெரிய எதிர்பார்ப்போடு படம் பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு இந்தப்படம் சற்று ஏமாற்றத்தை தான் தரும் இருந்தாலும் அமிதாப்பச்சனின் நடிப்பிற்காகவே ‛‛டீன் (TE3N)'' படத்தை ஒரு முறை பார்க்கலாம்.