ஏக்தா டைகர் படத்தின் இரண்டாம் பாகமாக, சல்மான் கான், கத்ரீனா கைப் நடிப்பில், அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் வெளியாகி உள்ள ஆக்ஷ்ன் படம் தான் டைகர் ஜிந்தா ஹே. இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்று இனி பார்ப்போம்...!
முதல்பாகம் எங்கு முடிந்ததோ அங்கிருந்து தொடங்குகிறது கதை. இந்திய உளவாளியான டைகர் எனும் சல்மான் கானும், பாகிஸ்தான் உளவாளியான ஜோயா எனும் கத்ரீனா கைப்பும் திருமணம், குழந்தை என ஆஸ்திரியாவில் வாழ்கிறார்கள். இந்தச்சூழலில் ஈராக்கில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 25 இந்திய நர்ஸ்களையும், 15 பாகிஸ்தான் நர்ஸ்களையும் காப்பாற்றும் பொறுப்பு சல்மான் - கத்ரீனாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. சல்மான், கத்ரீனா இருவரும் ஈராக்கிற்கு சென்று பயங்கரவாத தலைவன் அபு உஸ்மான் எனும் சஜத் டெப்ரூஸிடமிருந்து நர்ஸ்களை மீட்டார்களா... இல்லையா... என்பது டைகர் ஜிந்தா ஹே படத்தின் ஆக்ஷ்ன், பரபரப்பு நிறைந்த மீதிக்கதை.
உளவாளியாக சல்மான் கான் சிறப்பாக நடத்திருக்கிறார். குறிப்பாக ஆக்ஷ்ன் காட்சியில் அதிக மெனகெட்டு, ஆக்ஷ்ன் பிரியர்களை குஷிப்படுத்துகிறார்.
கத்ரீனா கைப்பும் தன் பங்கிற்கும் ஆக்ஷ்ன் மற்றும் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.
பரேஷ் ராவல், குமுத் மிஸ்ரா, அங்கத் பேடி, சுதீப், கிரிஷ் கர்னாத், வில்லன் கம் பயங்கரவாதி சஜத் டெப்ரூஸ் என எல்லோரும் தங்கள் பங்கிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
விஷால் சேகரின் பாடல்களும், ஜூலிஸின் பின்னணியும் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளன. கூடவே மார்கின் ஒளிப்பதிவு மிளிர்கிறது.
ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது அலி அப்பாஸ் ஜாபர் இயக்குநராக தன் ரோலை சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால், படத்தில் கதை என்று பெரிதாக இல்லை. ஏற்கனவே பல படங்களில் பார்த்த பயங்கரவாதிகளிடமிடருந்து மக்களை காப்பாற்றும் ஹீரோயிசம் கதை என்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. ஆயினும் அந்த பலவீனத்தையும் ஆக்ஷ்னில் அதிகப்படுத்தி விறுவிறுப்பாக்க முயன்று அதில் பாதி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர். கதையில் அடுத்தடுத்து என்ன நடக்க போகிறது என ரசிகர்கள் முன்கூட்டியே கணிக்க முடிவதையும், படத்தின் நீளத்தையும் இயக்குநர் முடிந்திருந்தால் தவிர்த்திருக்கலாம்.
மொத்தத்தில், டைகர் ஜிந்தா ஹே - ஆக்ஷ்ன் பிரியர்களுக்கும், சல்மானின் தீவிர ரசிகர்களுக்கும் நல்ல விருந்து...! மற்றவர்களுக்கு...?