அனிருத் ராய் சவுத்ரி இயக்கத்தில், அமிதாப் பச்சன், டாப்சி ஆகியோர் லீடு ரோலில் நடிக்க, பெண்கள் பாதுகாப்பை பற்றியும், பெண்களுக்கு சமூகத்தில் நடக்கும் அவலங்கள் பற்றியும், இந்த சமூகத்திற்கு ஒரு ப(பா)டமாக சொல்லியிருக்கும் படம் தான் ‛பிங்க்'.
கதைப்படி, மினல்(டாப்சி), பலாக்(கிர்த்தி குல்ஹரி), ஆண்ட்ரியா(ஆண்ட்ரியா தரியாங்) எனும் மூன்று பெண்களும், ஒரு நாள் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு நள்ளிரவில் வீடு திரும்புகின்றனர். வரும் வழியில் ராஜ்வீர்(அங்கத் பேடி) மினலிடத்தில் தவறாக நடக்க முயல, தன்னை காத்து கொள்ள கையில் கிடைத்த பாட்டிலை எடுத்து ராஜ்வீர் தலையில் ஓங்கி அடித்துவிட்டு தப்புகிறார். ஆனால் ராஜ்வீர் தனது நண்பர்கள் உதவியுடன் மினல் உள்ளிட்ட மூன்று பெண்களையும் பழிவாங்கும் நோக்கத்தில் மினல் தன்னை கொலை செய்ய முயன்றுவதாகவும், மூன்று பெண்களும் பாலியல் தொழில் செய்வதாகவும் பொய்யான குற்றச்சாட்டை சொல்ல, போலீஸ் மூவரையும் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைக்க, அங்கு என்ட்ரியாகிறார் ஓய்வு பெற்ற வக்கில் தீபக் செகால்(அமிதாப்). தன்னுடைய வாதத்தால் தீபக் மூன்று பெண்களையும் காப்பாற்றினாரா...? என்பது கோர்ட்டில் நடக்கும் பரபர விறுவிறுப்பான மீதிக்கதை.
அமிதாப் பச்சனை பற்றிய சொல்லவே வேண்டாம். வக்கில் தீபக்காக கோர்ட்டில் அவர் ஆக்ரோஷசமாக வாதாடும் காட்சிகள் மிரட்டல்.
டாப்சி, முன்பு நடித்த படங்களை விட இந்தப்படத்தில் ஒருபடி மேலேயே நன்றாக நடித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணாக கோர்ட்டில் அவரின் உணர்வுகள், உணர்ச்சிகள் உருக வைக்கிறது.
டாப்சி மாதிரியே கிருத்தி, ஆண்ட்ரியா, அங்கத் பேடி உள்ளிட்டவர்களும் தங்கள் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.
அனிருத் ராய் சவுத்ரி இயக்கத்தில் வெளியாகியுள்ள பிங்க் படம் குறையோன்றும் இல்லை எனும் அளவில் பரபரப்பாக நகருகிறது கதையோட்டம். குறிப்பாக கோர்ட் அறையில் நடக்கும் காட்சிகள் ரசிகனை சீட்டின் நுணியில் நுட்கார வைக்கிறது.
படத்தில் காரி காரி ரெய்னா எனும் ஒரே பாடல் தான், அதுவும் கதையின் ஓட்டத்துடன் அழகாக படமாக்கப்பட்டுள்ளது. இசை போன்றே ஒளிப்பதிவு, படத்தொகுப்பும் பக்காவாக பொருந்தியிருக்கிறது.
பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளையும், பாகுபாடுகளையும் உரக்க எடுத்து சொல்லியிருப்பதுடன், பெண்களின் பாதுகாப்பு ரொம்ப முக்கியம் எனும் உயரிய கருத்தை இந்த சமூகத்திற்கு எடுத்து சொல்லும் ப(பா)டமாக வெளிவந்திருக்கும் ‛பிங்க்' படத்தை அனைவரும் ஒருமுறை பார்க்கலாம்.