யாதும் ஊரே யாவரும் கேளிர்
விமர்சனம்
தயாரிப்பு - சந்திரா ஆர்ட்ஸ்
இயக்கம் - வெங்கட கிருஷ்ண ரோகந்த்
இசை - நிவாஸ் கே பிரசன்னா
நடிப்பு - விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ்திருமேனி
வெளியான தேதி - 19 மே 2023
நேரம் - 2 மணி நேரம் 18 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
இலங்கைத் தமிழர்கள், இலங்கை அகதிகள் பற்றிய திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் அதிகம் வந்ததில்லை. எப்போதோ ஒரு முறை ஓரிரு படங்கள் வந்து போகின்றன. அவையும் அவர்களது பிரச்சினைகளை முழுமையாகச் சொல்லாத படங்களாகவே இருக்கின்றன. இந்தப் படம் ஒரு இலங்கை அகதியைப் பற்றிய படம். அந்த அகதிக்கு லட்சியம் ஒன்று இருக்கிறது, அந்த லட்சியத்தை அவர் அடைந்தாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை.
இந்த உலகத்தில் நடக்கும் போர், அதனால் பாதிப்படையும் அப்பாவி மக்கள், போருக்குப் பிறகு தங்கள் வாழ்க்கையை இழக்கும் மக்கள், வாழ வழி தேடி அகதிகளாகப் பயணிக்கும் மக்கள் என போரால் பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவரது வாழ்க்கைப் பயணத்தை மட்டும் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகந்த்.
லண்டனுக்குச் சென்று இசைக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இலங்கையில் இருந்து சிறுவனாகக் கிளம்பும் புனிதன் (விஜய் சேதுபதி), ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சில வருடங்கள் தண்டனை அனுபவித்து ஒரு இளைஞனாக கள்ளத் தோணி ஏறி இந்தியாவிற்கு வருகிறார் புனிதன். கேரளாவில் சில வருடங்கள் தங்கியிருந்து முறையான இசையைப் பயின்று லண்டனில் நடக்கும் ஒரு இசைப் போட்டியில் கலந்து கொள்ள முயற்சிக்கிறார். ஆனால், எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரத்தை அவரால் வழங்க முடியாமல் போகிறது. மற்றொருவரது உதவியால் 'கிருபாநதி' என வேறொருவர் பெயரில் இலங்கை அகதி என்ற அடையாளத்தைப் பெற கொடைக்கானல் செல்கிறார். அங்கு அதற்கான சான்றிதழை அவர் பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் மையக் கதை என்பது மேலே குறிப்பிட்டதுதான். ஆனால், இதில் கிளைக்கதைகளாக விஜய் சேதுபதி மீது மேகா ஆகாஷ் காதல், விஜய் சேதுபதியைப் பழி வாங்கத் துடிக்கும் காவல் துறை அதிகாரி மகிழ் திருமேனி என அவற்றிற்கும் இயக்குனர் முக்கியத்துவம் கொடுத்துள்ளதால் உணர்வுபூர்வமான கதை தடம் மாறி கமர்ஷியல் சினிமாவாக மாறிவிட்டது.
கிருபாநதி என்கிற புனிதன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி. அவ்வப்போது இலங்கைத் தமிழ் பேசுவதால் அவரை இலங்கைத் தமிழர் என கொஞ்சம் ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால், அவருடைய தோற்றத்திற்குப் பொருத்தமில்லாத ஒரு 'விக்' எதற்கு என்று தெரியவில்லை. இசைக் கலைஞர் என்று தெரிய வேண்டுமென்றால் நீளமான முடி இருக்க வேண்டுமா என்ன ?. மேக்கப் டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்துவிட்ட காலத்தில் இப்படி ஒரு கெட்அப் அவருக்கு. இருப்பினும் தன் கதாபாத்திரத்தில் எப்போதுமே மிகவும் ஈடுபாட்டோடு நடிக்கும் விஜய் சேதுபதியை இந்தப் படத்தில் அப்படிப் பார்க்க முடியவில்லை. ஏதோ கடமைக்கு நடித்துக் கொடுத்தது போல நடித்திருக்கிறார். இருப்பினும் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதி பேசும் வசனம் உருக்கம்.
விஜய் சேதுபதியுடன் மோதலில் ஆரம்பமாகும் சந்திப்பு மேகா ஆகாஷுக்கு பின்னர் காதலாக மாறிவிடுகிறது. காதல் காட்சிகள் இல்லை என்றாலும் காதல் ஜோடி பொருத்தமாக இல்லையே. காவல் துறை அதிகாரியாக மகிழ் திருமேனி, இலங்கை அகதியாக கனிகா, சர்ச் பாதர் ஆக மறைந்த நடிகர் விவேக் மற்ற கதாபாத்திரங்களில் கொஞ்சம் கவனிக்க வைக்கிறார்கள்.
ஒரு சில உணர்வுபூர்வமான காட்சிகளில் பின்னணி இசையில் கூடுதல் அழுத்தம் சேர்க்கிறார் நிவாஸ் கே பிரசன்னா. இசைக் கலைஞர் பற்றிய படம் என்பதால் பாடல்கள் சிலவற்றை சிறப்பாகக் கொடுத்திருக்கலாம்.
ஒரு எமோஷனலான கதை, ஆங்காங்கே எமோஷனலாகவும், மீதி காட்சிகளில் வேறு விதமாகவும் என தடம் மாறிய திரைக்கதையால் படத்தில் ஒன்ற முடியவில்லை. முறைகேடு செய்து முன்னேறத் துடிக்கும் நாயகன் எப்படி ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார் என்ற கேள்வியும் வருகிறது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் - அடையாளத்தைத் தேடி…
யாதும் ஊரே யாவரும் கேளிர் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்