Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,Idharukuthane Aasaipattai Balakumara
09 அக், 2013 - 17:44 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

  

தினமலர் விமர்சனம்


ஹாலிவுட் படங்களை அப்பட்டமாய் காப்பியடித்துவிட்டு அப்படி ஒரு ஹாலிவுட் படம் வந்ததா.?! நான் பார்க்‌கவே இல்லையே... என உலகறிந்த உண்மையின் மேல், முழு போஸ்டர் ஒட்டி மூடிக்கொண்டுத் திரியும் நம்மூர் இயக்குநர்களுக்கு மத்தியில், நம்மூர் மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் காதல் கதையை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ‘ரெளத்திரம்’ கோகுல்! அவருக்கு அதற்காக ஒரு ‘ஹேட்ஸ் ஆப்’ சொல்லியே ஆக வேண்டும்! வித்தியாசம் என்றால் விஜய்சேதுபதியா? விஜய்சேதுபதி என்றால் வித்தியாசமா.?! என தனது அடுத்தடுத்த படங்களின் மூலம் தொடர்ந்து கேட்க வைத்து வரும் விஜய்சேதுபதி, இந்தப்படத்திலும் அதுமாதிரி ஒரு பெரும் முயற்சிக்காக, இயக்குநர் கோகுலின் பக்கபலமாக நின்று பக்கா படமாக ‘‘இதற்குத்தா‌னே ஆசைப்பட்டாய் பாலகுமாரா...’’ படத்தை கொண்டு வந்திருப்பதற்காக விஜய்க்கும் ஒரு டஜன் ‘ஹேட்ஸ் ஆப்’ சொல்லலாம்! இனி கதைக்கு வருவோம்!

ஒரு குறைந்த வருவாய் பிரிவினருக்கான அரசு குடியிருப்பில் எதிர் எதிர் வீட்டில் குடியிருப்பவர்கள் சுமார் மூஞ்சி குமார் - விஜய் சேதுபதியும், குமுதா எனும் ‘அட்டக்கத்தி’ நந்திதாவும். சின்னவயது முதலே தெரியும் என்பதால் சுமார் மூஞ்சி குமாருக்கு, குமுதா மீது லவ் என்றால் லவ் அப்படி ஒரு ஒன்சைடு லவ்! ஆனாலும் சுமார் மூஞ்சி விஜய்சேதுபதியின் குடியாத, விடியாத தருணங்களால், குமாரை பார்த்தாலே குமுதாவிற்கு குமட்டிக் கொண்டு வருகிறது. அதனால் தன் அப்பா பட்டிமன்றம் ராஜாவிடம் சொல்லி, அண்ணாச்சி பசுபதியிடம் பஞ்சாயத்திற்கு சுமார் மூஞ்சி குமாரை அனுப்பி வைக்கிறார் குமுதா. அங்கு தன் கலாட்டா காதலை ப்ளாஷ் பேக்காக சொல்லி செம மாத்து வாங்கும் விஜய் சேதுபதி, அந்த துக்கத்தை மறக்க ஆப் தேடி நட்ட நடுராத்திரியில் நண்பருடன் அலைகிறார்.

இது ஒரு பக்கமென்றால் இன்னொரு பக்கம் மார்கெட்டிங் இளைஞர் பாலா எனும் அஸ்வினுக்கும், தனியார் நிறுவன ஹெச்.ஆர்., ரேணு எனும் ‘சுப்புரமணியபுரம்’ சுவாதிக்கும் காதல். அடிக்கடி செல்ல சண்டை போட்டுக் கொள்ளும் இருவரையும் சேரவிடாமல் தடுப்பது பாலா எனும் அஸ்வினின் குடிப்பழக்கம்! மார்கெட்டிங் ஹெட்டின் டார்ச்சர், காதலியின் டார்ச்சர் இந்த இரண்டாலுமே அடிக்கடி குடிக்கும் பாலா, ஒருநாள் குடிபோதையில் ஒரு கர்ப்பிணியின் மீது தன் வண்டியை ஏற்றிவிட, அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு அவரது கணவரின் வருகைக்காக அஸ்வினும், அவரது காதலி சுவாதியும் காத்திருக்கின்றனர். அந்த கர்ப்பிணியின் கணவரும் ஒரு டாஸ்மாக்கில் மது அருந்தி கொண்டு இருக்கும்போது, அதே டாஸ்மாக்கில் சற்றுமுன் நடந்த ஒரு கொலைக்காக போலீஸ் விசாரணைக்கு போக, கர்ப்பிணி பிழைக்க வேண்டுமென்றால், ஒரு அரிய வகை இரத்தம் தேவை. அந்த வகை இரத்தம் சுமார் மூஞ்சி குமாருக்கு மட்டுமே அந்தப்பகுதியில் அப்போதைக்கு இருக்கிறது!

அப்புறம்.? அப்புறமென்ன? இரத்த வங்கி வழிகாட்டுதல் படி அந்த அரிய வகை இரத்தமுள்ள சுமார் மூஞ்சி குமார் - விஜய் சேதுபதியைத் தேடி அஸ்வினும், நண்பர்களும் அலைகின்றனர். விஜய்சேதுபதியோ, நண்பருடன் ஆப் சரக்கைத் ‌தேடி அலைகிறார். சுமார் மூஞ்சி குமார்-விஜய்சேதுபதியின் கையில் ஆப் கிடைப்பதற்கு முன், அஸ்வின்பாலா, அவரைத் தேடிப்பிடித்து மருத்துவமனையில் சேர்த்து அடிபட்ட கர்ப்பிணிக்கு இரத்தம் வாங்கி கொடுத்தாரா? , கர்ப்பிணி உயிர் பிழைத்தாரா? இந்த நல்ல காரியத்தால் காதலி குமுதா, சுமார் மூஞ்சி குமாருக்கு கிடைத்தாளா? டாஸ்மாக் கொலையை செய்தது யார்? எதற்காக செய்தார்கள்? கர்ப்பிணியின் கணவர் மீண்டாரா? அஸ்வின்-சுவாதி ஜோடி இணைந்ததா இல்லையா? என்பது உள்ளிட்ட இன்னும் பல சீரியஸ் கேள்விகளுக்கு காமெடியாக பதில் சொல்கிறது ‘‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’’ திரைப்படம்!

விஜய் சேதுபதி, அஸ்வின், சுவாதி, நந்திதா, பசுபதி, பரோட்டா சூரி, வி.எஸ்.ராகவன், எம்.எஸ்.பாஸ்கர், பட்டிமன்றம் ராஜா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே ‘பளிச்’ சென நடித்து பாலகுமாராவை தூக்கி நிறுத்துகிறது. அதிலும் விஜய் சேதுபதி இப்படி எல்லாம் நடிக்க எப்படி ஒப்புக் கொள்கிறார்? எனும் ஆச்சர்யத்தை தருகிறது அவரது பாத்திர படைப்பு! பரோட்டா சூரி, எம்.எஸ்.பாஸ்கர் மட்டுமல்ல... இயக்குநர் கோகுல் உள்ளிட்ட எல்லோருமே காமெடியாக படத்தில் நிறைய மெ‌ஸேஜ் சொல்லி இருக்கிறார்கள்!

மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு, சித்தார்த் விபினின் இசை, லியேர் ஜான்பாலின் படத்தொகுப்பு, கோகுல், கார்க்கியின் வசனங்கள், மதன்‌கார்க்கியின் பாடல்கள் எல்லாமே பாலகுமாரா படத்திற்கு பெரும்பலம்! குடி, குடி என குடியை காட்டி, குடிக்காதே எனும் மெஸேஜையும், இரத்த தானம் செய்யுங்கள் எனும் அட்வைஸையும் காமெடியாக, அதேநேரத்தில் கருத்தாழத்துடன் சொல்லியிருக்கும் விதத்தில் இப்படத்தை எழுதி இயக்கிய கோகுல் வெற்றி பெற்றிருக்கிறார்!

ஆகமொத்தத்தில், ‘‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’’ - ‘‘ஏகப்பட்ட விருதுகளுக்கு ஆசைப்பட்டிருக்கிறது!’’



------------------------------------------------------------------------------



 நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகு‌தியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com


ஹீரோ, நெம்பர்-1 அஸ்வின் பிரைவேட் பேங்க்ல மார்க்கெட்டிங் ஸ்டாஃப். ஃபிரண்ட்ஸ் கூட சேர்ந்து சரக்கு அடிச்ச நேரம் போக ஆஃபீஸ் ஒர்க் பண்ணுவாரு, அது போக மிச்சம் இருக்கும் நேரத்தில் ஸ்வாதியை லவ்வுவாரு. காதலி கிட்டே வாய்க்கு வந்த படி பொய் பேசுவாரு. இவர் ஒரு சந்தர்ப்பத்துல சரக்கு அடிச்சுட்டு ஒரு விபத்துக்கு காரணகர்த்தா ஆகிடறாரு. அடிபட்ட பொண்ணுக்கு அரிதான ரத்த வகை இப்போ தேவை. அஸ்வின் தான் பொறுப்பு. இது  ஒரு டிராக்.

ஹீரோ நெம்பர்-2 விஜய் சேதுபதி. இவரும் சரியான சரக்கு பார்ட்டி. எதிர் வீட்டு நந்திதாவை சின்ன வயசுல இருந்தே லவ்வுறாரு. உள்ளுர வெறுக்க ஆரம்பிக்கும்  நந்திதா  ஒரு கட்டத்தில் ஒரு உயிரைக்காப்பாற்ற  அவர்  ரத்தம் தேவை  என்றதும்  உதவ தூண்டுகிறார், இது  இன்னொரு டிராக்

ஒரு பேட்டை  ரவுடி, அவனோட சம்சாரம்  செம கில்மா பார்ட்டி, குமுதா  டீச்சர்  மாதிரி அது என்ன பண்ணுது, புருஷன்  இல்லாம வேற  2 பேரை அட்டர் டைம்ல வெச்சிருக்கு. தன் கள்ளக்காதலர்கள் 2 பேரையும்  தூண்டி  விட்டு  தன்  புருஷனையே கொலை பண்ண வெச்சிடுது. கொலையாளிங்க   2 பேரும்   சைக்கிள்ல அலைஞ்சிட்டு  இருக்காங்க , இது 3 வது  டிராக். மேலே  சொன்ன  3 டிராக்  கதையையும்   ஆய்த எழுத்து  மணி ரத்னம்  மாதிரி  எப்படி  இணைச்சு  கதை  சொல்றார் இயக்குநர்  என்பதே  மிச்சக்கதை .

ஜீவாவை வைத்து  ரவுத்திரம் என்ற   சுமாரான ஆக்சன்  படம்  கொடுத்த  இயக்குநர்   முழுக்க முழுக்க காமெடியில்  கலக்கி  இருக்கிறார் . அவருக்கு  ஒரு ஷொட்டு . திரைக்கதைக்கு  ரொம்பவே  மெனக்கெட்டு  இருக்கிறார் . பாராட்டுக்கள்

அஸ்வின்  தான்  ஹீரோ . ஆள்  படு ஸ்மார்ட் . காலேஜ்  பெண்கள்  , டீன் ஏஜ் பெண்கள் அனைவருக்கும், பிடிச்ச முகம் . நடிப்பும்  நல்லா  வருது .  காமெடி டயலாக் டெலிவரி  , டைமிங்க் சென்ஸ்  , லவ்வருடன் ஊடல் என   எல்லா ஏரியாக்களிலும்  இவர் பாஸ் மார்க்கைத்தாண்டி வாங்கி விடுகிறார் சர்வ சாதாரண்மாக .. சபாஷ்

விஜய் சேதுபதி  இதில்  செகண்ட்  ஹீரோ தான் . தொடர்ந்து  4 வெற்றிப்படங்கள்  கொடுத்து  கோடியில் சம்பளம் வாங்கும்  ஹீரோ இது போல தனக்கு  அதிக முக்கியத்துவம்  இல்லாத  கேரக்டர் என்றாலும்  தயங்காமல் ஒத்துக்கொண்ட   மனசுக்கு  ஒரு சலாம் . மனிதர் பின்னிப்பெடல் எடுத்து  விட்டார் .

ஓப்பனிங்க்கில் பசுபதியுடன் பஞ்சாயத்து பேசும் காட்சியில், நந்திதாவை  கலாட்டா  செய்வது, பட்டிமன்ற  ராஜாவுடன் மல்லுக்கு நிற்பது  என  இவர் திரும்பிய பக்கம் எல்லாம் சிக்சர்களாக அடித்துத்தள்ளுகிறார். வளர்ந்து  வரும்  ஹீரோக்கள், வளர்ந்த ஹீரோக்கள் இவரிடம் கற்க வேண்டியவை ஏராளம்.

நந்திதாவுக்கு சேதுபதியை வெறுப்பது, பின்  உள்ளூர விரும்புவது என காதல் பறவை கேரக்டர். ஓக்கே, பாஸ் மார்க்  வாங்கி  விடுகிறார்.

ஸ்வாதி  பளிச்  முகத்துக்கும், அழகிய  உதட்டுக்கும்  இவர்  ஒரு  முன் உதாரணம். அலைபாயும்  கூந்தலுடன், மிக கண்ணியமான ஆடைகளுடன் இவர் வரும் காட்சிகள் எல்லாமே அருமை. காதலருடன்  ஊடல்  கொள்ளும் காட்சிகள் காதலர்களை கவரும்.

மும்பை எக்ஸ்பிரசில் காமெடியில் கலக்கிய  பசுபதிக்கு  இதில்  தாதா கேரக்டர், சுகர் பேஷண்ட்டான இவர் அந்த காதல் பஞ்சாயத்து காட்சியில் தியேட்டர்  சிரிச்சு மாளலை.

அந்த கில்மா லேடி  சோ க்யூட். அவர் வரும் காட்சிகள் எல்லாம் பின்னணியில் பழைய பாட்டு  இசை பி.ஜி எம்மாக வருவது  செம காமெடி. அவரது கள்ளக்காதலர்கள் இருவரும் பண்ணும் கூத்துகள்செம  கலக்கல்  ரகம். விழுந்து  விழுந்து  சிரிக்க வைக்கிறது.  


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. என் வீட்டில் நான் இருந்தேனா? எதிர் வீட்டில் அவள் இருந்தாளா பாட்டு, ஏன் என்றால் உன்  பிறந்த நாள்  என  2 பாட்டுக்கள் செம  ஹிட் ரகம் . மீதி  2 பாட்டும்   ஓக்கே  ரகம். குறிப்பா  அந்த   குடி பாட்டு  தியேட்டரில்  செம அப்ளாஸ் வாங்குகிறது . (ஓக்கே ஓக்கே படத்துக்குபின் இப்போதெல்லாம் டாஸ்மாக்கில்  சரக்கு அடிச்சுட்டு புலம்பல் காதல் பாட்டு ஃபேஷன் ஆகி வருது)

2.  பேங்க்  மேனஜராக  வரும் எம்.எஸ்.பாஸ்கர்  ஆஃபீஸ் மார்க்கெட்டிங்க் ஸ்டாஃப்க்கு ஃபோன்  அடிப்பதும் , கான்ஃபெரென்ஸ்  கால் போட்டு அவர்களை லைனுக்கு கொண்டு வருவதும் , அவர்கள் எல்லாரும்  ஒரே  ரூமில் சரக்கு அடிச்சுட்டு  இருப்பதை மறைக்க  நாடகம் ஆடுவதும்   கலக்கல் காமெடி. எம்.எஸ்.பாஸ்கர்   அஸ்வினிடம் சிடு சிடுப்பவர், அருகில் அமர்ந்திருக்கும்  லேடி ஸ்டாஃபிடம் சிரிப்பது செம ஃபாஸ்ட்  ரீ-ஆக்‌ஷன்.

3.  ஸ்வாதி   ஊடல்  கொண்டு  ஆட்டோவில்  ஏறி  தன் பின்னால்  காதலன் ஃபாலோ பண்ணி வருவான் என எதிர்பார்த்து ஏமாறுவது  பின்  அவனுக்கே ஃபோன் பண்ணி ஏண்டா என்னை ஃபாலோ பண்ணலை? என  உரிமையாய் கேட்பது  லவ்லி சீன்.

4  நடுவுல  கொஞ்சம் பக்கத்தைக்கணோம் படத்தில் அந்த  ரிப்பீட்  டயலாக் ஹிட் ஆனதால்  அதே சாயலில்  இதிலும்  ஒரு ரிப்பிட்  டயலாக் வருது. செம காமெடி . கொஞ்ச நாட்கள்  டி வி காமெடி ஷோக்களீல் வந்து  போகும்

5  வ குவாட்டர் கட்டிங்க் கை நினைவுபடுத்துவது போல்  இருந்தாலும்  விஜய் சேதுபதி  ஒரு ஆஃப்க்காக அலையோ அலை என அலைவது செம காமெடி

6.  க்ளைமாக்ஸில் எல்லாரும் அவ்வளவு  சீரியசாக   ஹாஸ்பிடலில்  ரத்த தானத்துக்கு வெயிட்ட  விஜய் சேதுபதி எல்லார் முன்னிலையிலும் நந்திதாவிடம் ரொமான்ஸ் பண்ணும் காட்சி தியேட்டரையே குலுங்க வைத்த கலக்கல் காமெடி.

7. அந்த கில்மா லேடி  - கள்ளக்காதலர்கள் டெலி ஃபோன் உரையாடல்கள் செம கலக்கல் காமெடி. கதையின்  சீரியஸ்னெஸ்சையே தொலைத்து விட்டாலும் இந்த காமெடி  டிராக் ரொமப் புதுசு  (வடிவேல் என்கவுண்ட்டர் ஏகாம்பரமாய் வரும் போலீஸ் ஸ்டேஷன் கள்ளக்காதல் காமெடியை  நினைவுபடுத்தினாலும்)

8. கொலை செய்யப்பட்ட  ரவுடியின்  தம்பியாக வரும் புரோட்டா சூரி  தன் அண்ணியை கையும் களவுமாக பிடிப்பதும் , பின் அவர் காதல் வலையில்  விழுவதும்  கொஞ்சம்  முகம்  சுளிக்க வைத்தாலும், சி செண்ட்டர் ஆடியன்ச் இடம் அப்ளாஸ் அள்ளும்.

9. சித்தார்த் விபின்  இசை அருமை, பின்னணி இசையிலும் ஸ்கோர் பண்ணிடறார். நந்திதாவின் பாய் ஃபிரண்டாக  ஒரு கேரக்டரிலும் இயற்கையான நடிப்பை வழங்கி  இருக்கார். குட்!


இயக்குநரிடம்  சில  கேள்விகள்

1.  படத்தின்   முன் பாதியில்   மிகத்தெளிவாக  இரு காதல்  கதைகளை காமெடியோடு  சொன்ன  இயக்குநர்   பின் பாதியில்  தடுமாறியது ஏனோ ?  எல்லா கதை டிராக்கையும்  எப்படி இணைப்பது   என்ற   இடியாப்பசிக்கலில் இயக்குநர்  தடுமாறி விட்டாரே.

2. எப்போ பார்த்தாலும்  சரக்கு சாப்பிடும்   ஒரு ஆள்  ரத்த தானம் செய்ய தகுந்த ஆளா?  ரத்ததான விதிப்படி  ரத்த தானம்  கொடுக்கும்  முன் அவன் குடிச்சிருக்கக்கூடாது என்ற விதியை  ஃபாலோ  செய்த இயக்குநர்  ஒரு செயின் ட்ரிங்க்கர்  ரத்த தானம் செய்ய முடியாது என்ற விதியை மறந்தது ஏனோ ?

3  டேமேஜர் ஸ்டாஃபிடம்  கிராஸ் செக் செய்ய எதுக்கு கான்ஃபிரன்ஸ் கால் போடனும் ? நீ எங்கெப்பா   இருக்க? கஸ்டம்ர்  வீட்டு லேண்ட் லைன்  நெம்பர் சொல்லு என கேட்டு அந்த நம்பருக்கு கூப்பிட்டால் மேட்டர்  ஓவர். 

4  எதிர்  வீட்டில்   லவ் டார்ச்சர் செய்யும்  விஜய் சேதுபதியிடம் இருந்து  தப்பிக்க பட்டிமன்ற  ராஜா குடும்பம்  ராத்திரியோட ராத்திரியா  வீட்டை காலி பண்ணிட்டுப்போய்ட்டா விஷயம்  ஈசியா  முடிஞ்சிடும். ஏன்  பல வருசமா அங்கே இருக்கனும் ? சொந்த  வீடா  இருந்தாத்தான்  சிக்கல் , வாடகை  வீடுதானே  ? காலி பண்ணிடலாமே?

5  அஸ்வினை மேனஜரிடம்  போட்டுக்குடுக்கும்  துரோகியாக  ஒரு மலையாளியைக்காட்டியது உள்  நோக்கம் கொண்டது. இதே படம் மலையாளத்தில்  டப் செய்யப்பட்டால் சங்கடம் தானே ?  எனவே முடிந்த வரை இந்த மாதிரி துரோகி கேரக்டர் என்ன இனம்? என்ன ஜாதி என்பதை  டீட்டெய்லாக சொல்லாமல்  விடுவதே நல்லது.


மனம் கவர்ந்த வசனங்கள்

1. டேய்.உன் செல்போன் இன்பாக்ஸ் எப்பவும் க்ளீனா இருக்கே எப்டி? அது என்ன டாய்லெட்டா? அடிக்கடி க்ளீன் பண்ண? உன் கிட்டே ஏதோ தப்பு இருக்கு.

2. வாழ்வை சுவராஸ்யம் ஆக்க ரெண்டே வழி.

* அழகான பொண்ணை லவ் பண்ணுவது

* மார்க்கெட்டிங் லைன்ல ஜாப்

3. துப்பட்டாவை சரி பண்ணிக்கோன்னு சொன்னவனுக்கு தாங்க்ஸ் சொன்னேன். அது தப்பா. டேய் என்னை நல்லாப்பாரு.நான் துப்பட்டாவே போடலை.

4. என்னை அதிகமா அழ வெச்சதும் நீ தான். அதிக முறை சிரிக்க வெச்சதும் நீ தாண்டா

5. மேனஜர்-நீ கஸ்டமர் ப்ளேஸ்ல தான் இருக்கேனு நான் எப்படி நம்ப? அவர் கிட்டே போனை குடு. சாரி சார், அவருக்கு நாக்குல பிராக்சர்.

6. தாதா - நான் தான் அண்ணாச்சி பேசறேன். நந்திதா - அம்மா போன் உனக்குத்தான். நம்ம மளிகைக்கடை அண்ணாச்சி பேசறார்.

7. லவ் மேட்டரு. பீல் ஆகிட்டாப்ல. ஆப் சரக்கு அடிச்சா கூல் ஆகிடுவாப்ல. சூப்பர் ஹிட் ஆகப்போகும் ரிப்பீட் டயலாக்.

8. இன்னொரு  வீட்டில் வாழப்போற பொண்ணு அது நோ நோ ஸ்ட்ரைட்டா என் வீட்டுக்குத்தான் வரப்போகுது.

9. ஸ்வேதா - என்னைப்பத்தி எந்த டீட்டெய்லும்  உனக்குத்தெரியலைடா, உன்னைப்பற்றி சொல்லட்டா, நீ செஸ்ட் முடியை ட்ரிம் பண்ணி இருக்கே, போதுமா?

10. ஆமா , தாத்தா  ஃபோட்டோ வெச்சியே , அதுக்கு பொட்டு வெச்சியா? டேய் , தாத்தாவை  விடு , நீ என்னை மதி போதும் உன் ஃபோட்டோவுக்கு பொட்டு வெச்சிடவா?


சி.பி.கமெண்ட் -
இ ஆ பா - முன் பாதி கலக்கல் காமெடி. பின் பாதி மொக்கை காமெடி. ஏ சென்ட்டரில் ஹிட்.  வித்தியாசமான   காமெடி படங்களை ரசித்துப்பார்ப்பவர்கள், விஜய் சேதுபதி ரசிகர்கள் ரசிச்சுப்பார்ப்பாங்க. பெண்களும் விரும்பிப்பார்க்கும்படி தான் இருக்கு.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in