அன்பிற்கினியாள்,Anbirkiniyal

அன்பிற்கினியாள் - பட காட்சிகள் ↓

Advertisement
3.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன்
தயாரிப்பு - எ & பி குரூப்ஸ்
இயக்கம் - கோகுல்
இசை - ஜாவித் ரியாஸ்
வெளியான தேதி - 5 மார்ச் 2021
நேரம் - 2 மணி நேரம் 5 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5

மலையாளத்தில் 2019ம் ஆண்டு வெளிவந்த ஹெலன் படத்தை தமிழில் அன்பிற்கினியாள் ஆக ரீமேக் செய்துள்ளார்கள். எந்த மொழிக்கும் பொருந்தக் கூடிய ஒரு கதை, அதை ஒரிஜனலைப் போல எந்த சேதாரமும் இல்லாமல் கொடுத்திருக்கிறார்கள்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய், காஷ்மோரா படங்களை இயக்கிய கோகுல் தான் படத்தின் இயக்குனர். ரீமேக் படம் என்பதால் அவருக்கு சவாலான வேலை எதுவுமில்லை. ஒரிஜனலில் உள்ளதைப் போலவே, அந்த பரபரப்பையும், உணர்வையும் கொண்டு வந்ததில் இயக்குனராக அவருடைய கடமையைச் செய்துவிட்டார்.

அப்பா அருண்பாண்டியன், எல்ஐசி ஏஜன்டாக இருப்பவர். மகள் கீர்த்தி பாண்டியன், கனடாவுக்குச் சென்று நர்ஸ் வேலை செய்து, அப்பாவின் கடனை அடைக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். ஒரு மாலில் உள்ள ரெஸ்டாரென்டில் வேலை செய்கிறார். கனடாவுக்குச் செல்ல IELTS தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வேலையும் உறுதியாகிறது. இந்நிலையில் ஒரு நாள் ரெஸ்டாரென்டில் உள்ள சிக்கன்களை வைக்கும் ப்ரீசர் ரூமில் சிக்கிக் கொள்கிறார். மகளைக் காணாமல் தேடுகிறார் அப்பா அருண் பாண்டியன். போலீஸ், அப்பா, காதலன் ஆகியோர் காணாமல் போன கீர்த்தியைத் தேட ஆரம்பிக்கிறார்கள். கீர்த்தி சிக்கிய விவகாரம் அவர்களுக்கு எப்படித் தெரிகிறது, கீர்த்தி தப்பித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார் அருண் பாண்டியன். ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அப்பாவாக இயல்பாக நடித்திருக்கிறார். நிஜ வாழ்வில் அப்பா, மகளாக இருப்பவர்களே திரையில் அப்பா, மகளாக நடிப்பதால் அவர்களது பாசமும், நடிப்பும் இயல்பாய் அமைந்திருக்கிறது.

கீர்த்தி பாண்டியன் இதற்கு முன் தும்பா என்ற படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் அவருக்கு சரியான கதாபாத்திரம் அமையவில்லை. இந்தப் படத்தில் நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரமாக அமைந்துவிட்டது. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அப்பாவிடம் பாசத்தைக் கொட்டுவதிலும், காதலனுடன் செல்லச் சண்டை போடுவதிலும், உறைய வைக்கும் குளிரில் சிக்கித் தவிப்பதிலும் ரசிகர்களின் அன்பைப் பெறும் அளவிற்கு நடித்திருக்கிறார் கீர்த்தி.

கீர்த்தி பாண்டியன் காதலனாக பிரவீன் ராஜா. அதிக வேலையில்லை என்றாலும் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் திமிர் பிடித்த சப் இன்ஸ்பெக்டராக ரவீந்திர விஜய். இவரைத் தேடி இனி பல போலீஸ் கதாபாத்திரங்கள் வரலாம். ஏட்டாக நடித்திருக்கும் அடிநாட் சசி, நல்ல உள்ளம் படைத்த போலீஸ்காராக பாராட்டு பெறுகிறார்.

இம்மாதிரியான பரபரப்பான திரைக்கதை கொண்ட படத்திற்கு பின்னணி இசை முக்கியம். அதை உணர்ந்து இசையமைத்திருக்கிறார் ஜாவித் ரியாஸ். ப்ரீசர் அறைக்குள்தான் ஒரு மணி நேரப் படம் நகர்கிறது. அதை வடிவமைப்பதில் கலை இயக்குனர் ஜெயசந்திரன், படமாக்குவதில் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி முக்கியப் பங்கு வகித்துள்ளார்கள்.

கதாபாத்திர வடிவமைப்பும், அதற்கான நட்சத்திரத் தேர்வும் தான் இந்தப் படத்தை ரசிக்க வைக்கும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது. மலையாள ஹெலன் படத்துடன் ஒப்பிடும் போது ஒரிஜனலுக்கு குறையில்லாமல் கொடுத்திருக்கிறார்கள். வித்தியாசமான படங்களைப் பார்க்க விரும்பும் ரசிகர்கள் தாராளமாகப் பார்க்கலாம்.

அன்பிற்கினியாள் - இனியவள்

 

அன்பிற்கினியாள் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

அன்பிற்கினியாள்

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓