கண்ணகி,Kannagi

கண்ணகி - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட், இ5 என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - யஷ்வந்த் கிஷோர்
இசை - ஷான் ரகுமான்
நடிப்பு - கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா
வெளியான தேதி - 15 டிசம்பர் 2023
நேரம் - 2 மணி நேரம் 38 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

கதாநாயகிகளை மையப்படுத்திய படங்களாக வரும் ஒரு சில படங்களும், பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை மையப்படுத்திய படங்களாக வருவதில்லை. ஒரு சில படங்கள் மட்டுமே அப்படி வருகின்றன. ஆனால், இந்தப் படத்தில் நான்கு விதமான பெண்கள் அவர்கள் வாழ்க்கையில் எதிர்நோக்கும் பிரச்சனைகளை முடிந்தவரையில் யதார்த்தமாய் பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார் இயக்குனர் யஷ்வந்த் கிஷோர்.

பொருளாதாரப் பின்னணி, குடும்பப் பின்னணி ஆகியவற்றின் அடிப்படையில் பெண்களின் வாழ்வியலும் மாறுபடுகிறது. அப்படிப்பட்ட நான்கு விதமான மாறுபட்ட பெண்களின் வாழ்க்கைதான் இந்த 'கண்ணகி'.

லிவிங் டு கெதர் ஆக உதவி இயக்குனர் யஷ்வந்த் கிஷோருடன் வசிக்கிறார் கீர்த்தி பாண்டியன். தனது கர்ப்பத்தைக் கலைக்க முயற்சிக்கிறார். கிராமத்தில் வசிக்கும் அம்மு அபிராமிக்கு பலர் வந்து பெண் பார்த்துவிட்டுப் போனாலும் திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. விவாகரத்து கேட்கும் கணவன் குடும்பத்தாரின் வழக்கை எதிர்கொள்பவராக வித்யா பிரதீப். திருமணமே செய்து கொள்ளாமல் தன் விருப்பப்படி வாழ நினைக்கும் மாடர்ன் பெண்ணாக ஷாலின் சோயா. இந்த நான்கு பெண்களின் வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

நான்கு பெண்களின் கதை என்றாலும் அம்மு அபிராமி சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் அதிகம் இடம் பெற்றுள்ளது போல் தெரிகிறது. அம்முவின் கதாபாத்திரம், நடிப்பு, அவரது அம்மாவாக மௌனிகா, அப்பாவாக மயில்சாமி இருவரது கதாபாத்திரம், நடிப்பு ஆகியவை மற்ற மூன்று பெண்களின் கதைகளிலிருந்து மிகவும் யதார்த்தமாக அமைந்துள்ளது.

உதவி இயக்குனராக இருக்கும் யஷ்வந்த் கிஷோர், அவரது காதலி கர்ப்பமாக இருக்கும் கீர்த்தி பாண்டியன் அதற்குள் குழந்தை வேண்டாமென கருவைக் கலைக்க அலையோ அலை என அலைகிறார்கள். எங்காவது ஓரிடத்தில் அவர்கள் அந்த 'கருக்கொலை'யைத் தவிர்ப்பார்கள் என நம்மை நினைக்க வைத்து ஏமாற்றியிருக்கிறார் இயக்குனர்.

கணவன் குடும்பத்தார் கேட்கும் விவாகரத்தைக் கொடுக்காமல் அவருடன் சேர்ந்து வாழ நினைத்து ஏமாற்றத்தையே சந்திக்கிறார் வித்யா பிரதீப். பின்னர், அவருடைய வழக்கை நடத்தும் வெற்றியையே காதலிக்கவும் ஆரம்பிக்கிறார். விவாகரத்தான ஒரு பெண்ணை இந்த சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதை இந்தக் கதைப் பகுதியின் மூலம் உணர்த்துகிறார் இயக்குனர்.

2 கே காலத்தில் சுயமாக சம்பாதிக்கும் ஒரு சில பெண்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது ஷாலின் சோயா கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நிஜத்திலும் இப்படி சிலர் இருக்கிறார்கள் என்றாலும் குடி, புகை, உறவு என அவரது கதாபாத்திர வடிவமைப்பு கொஞ்சம் பயமுறுத்தவும் வைக்கிறது. அந்த பயமுறுத்தலுக்குக் காரணம் கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்துள்ள ஷாலின் நடிப்பு.

வித்யா பிரதீப் காதலனாக வெற்றி, ஷாலின் காதலனாக ஆதேஷ் சுதாகர், கீர்த்தியின் காதலனாக யஷ்வந்த் கிஷோர், அவர்களுக்கான காட்சிகளில் தங்களது இருப்பைப் பதிவு செய்கிறார்கள்.

ஷான் ரகுமான் பின்னணி இசை, ராம்ஜியின் ஒளிப்பதிவு நான்கு விதமான கதைகள், அதனதன் கதாபாத்திரங்கள் என அவற்றின் வேறுபாட்டை அழுத்தமாய் பதிய வைத்திருக்கிறது.

கதையாக ஆரம்பித்து சிக்கலை நோக்கி நகர்ந்து தீர்வுக்கும் நகர்கிறது படம். ஆனால், கிளைமாக்சில் அதெல்லாம் ஒரு கதை என முடித்து, அந்த நான்கு பெண்களின் கதாபாத்திரங்களிலும் கீர்த்தியையும் நடிக்க வைத்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறார் இயக்குனர். அதுவரையில் படத்தை அழுத்தமாக நகர்த்திவிட்டு முடிவில் இப்படி குழப்பத்தை ஏற்படுத்தி படத்தின் தரத்தை கீழிறக்கிவிடுகிறார்கள்.

கண்ணகி - கதையாகி…

 

கண்ணகி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

கண்ணகி

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓