வல்லவன் வகுத்ததடா,Vallavan Vaguthadhada
Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - போகஸ் ஸ்டுடியோஸ்
இயக்கம் - விநாயக் துரை
இசை - சகிஷ்னா சேவியர்
நடிப்பு - தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலசந்திரன், அனன்யா மணி, ஸ்வாதி மீனாட்சி
வெளியான தேதி - 19 ஏப்ரல் 2024
நேரம் - 1 மணி நேரம் 44 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

சினிமாவில் கதை என்பது ஒரு வரியில் சொல்லக் கூடியதாக இருந்தாலும், அதன் திரைக்கதை அமைக்கப்படும் விதம்தான் அப்படத்திற்குரிய ரசனையாக அமையும். திரைக்கதையால் மட்டுமேதான் ஒரு படத்தின் விறுவிறுப்பையும் கூட்ட முடியும். அந்த விதத்தில் இந்தப் படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. இயக்குனர் விநாயக் துரை அதை நம்பி இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

இப்படத்தில் முக்கியமான சில கதாபாத்திரங்கள் அவர்களது பணத் தேவைக்காக என்ன செய்கிறார்கள் என்பதை தனித்தனியாகச் சொல்லி, அதை கடைசியில் ஒரு முடிச்சில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்.

பணத்திற்காக காதலிப்பது போல ஏமாற்றுபவர் அனன்யா மணி, எதற்கெடுத்தாலும் லஞ்சம் வாங்கும் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாலச்சந்திரன், நண்பனுடன் சேர்ந்து திருடுவதைத் தொழிலாகக் கொண்டவர் தேஜ் சரண்ராஜ், அப்பாவின் ஆபரேஷனுக்காக பணத்திற்கு அலையும் ஸ்வாதி மீனாட்சி, உடல் உறுப்புகளைப் பெறுவதற்காகவே கடன் கொடுக்கும் விக்ரம் ஆதித்யா. பணத்தைத் தேடி ஓடும், இவர்களது வாழ்க்கையில் நடைபெறும் அடுத்தடுத்த சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பாகி எப்படி முடிவுக்கு வருகிறது என்பதுதான் படத்தின் கதை.

திரைக்கதையில் திருப்பத்தையும், சுவாரசியத்தையும் நிறையவே சேர்த்திருக்கிறார் இயக்குனர். பணத் தேவை ஒவ்வொருவருக்கும் எப்படி அமைகிறது, அதற்காக அவர்கள் எப்படியெல்லாம் அலைகிறார்கள் என்பதைக் காட்டியிருக்கிறார்.

அடுத்தடுத்து பல ஆண்களை காதலிப்பது போல நடித்து பணம் பறித்து ஏமாற்றுபவர் அனன்யா மணி. கடைசியில் ஒரு முக்கிய சிக்கலில் அவரே பணத்தைப் பறி கொடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். லஞ்சம் வாங்குவதை அசால்ட்டாக செய்யும் இன்ஸ்பெக்டராக ராஜேஷ் பாலசந்திரன். அவருடைய சிரிப்பும், வசனமும் எரிச்சலைத்தான் தருகிறது. ஒரு முறை செய்தால் பரவாயில்லை, படம் முழுவதும் அப்படியே வருகிறார்.

மற்ற கதாபாத்திரங்களின் முக்கியத்துவத்தில் கொஞ்சம் காணாமல் போகிறார் தேஜ் சரண்ராஜ். வட்டிக்காகத்தான் பணம் கொடுப்பார்கள். ஆனால், இப்படத்தில் வட்டிக்கு பணம் கொடுக்கும் விக்ரம் ஆதித்யா, கடன் வாங்குபவர்களின் உடல் உறுப்புகளுக்காக வட்டி கொடுக்கிறார். பார்ப்பதற்கு நடிகர் பிரஷாந்த் அண்ணன் போல இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைத்துமே பணத்திற்காக என்னென்னமோ செய்ய அப்பாவின் மருத்துவ செலவிற்காக பணத்தைத் தேடி அலையும் அப்பாவிப் பெண்ணாக ஸ்வாதி மீனாட்சி.

இம்மாதிரியான படங்களில் டெக்னிக்கலாக கூடுதல் தரத்தைக் கொடுக்க முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் மேக்கிங்கிற்காகவும் படம் பேசப்படக் கூடும். இசையமைப்பாளர் சேவியர், ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து அவர்களால் முயன்றதை செய்திருக்கிறார்கள்.

வித்தியாசமான படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற முயற்சி பாராட்டுக்குரியது. இருந்தாலும் இது போன்ற திரைக்கதையை அமைக்கும் போது சாதாரண ரசிகர்களுக்கும் புரியும் விதத்தில் அமைக்க வேண்டும். அடுத்தடுத்த தொடர்புகளை நாம் யோசித்து யோசித்து பார்க்க வேண்டி உள்ளது.

வல்லவன் வகுத்ததடா - மனக்கணக்கு…

 

பட குழுவினர்

வல்லவன் வகுத்ததடா

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓