3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : மெர்ரிலேண்ட் சினிமாஸ்
இயக்கம் : வினீத் சீனிவாசன்
இசை : அம்ரித் ராம்நாத்
நடிப்பு : பிரணவ் மோகன்லால், நிவின்பாலி, தியான் சீனிவாசன், கல்யாணி பிரியதர்ஷன், அஜு வர்கீஸ், ஒய் ஜி மகேந்திரன்
வெளியான தேதி : 11 ஏப்ரல் 2024
நேரம் : 2 மணி 47 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5

எழுபதுகளின் காலகட்டத்தில் கேரள கிராமத்திலிருந்து இயக்குனராகும் ஆசையில் தியான் சீனிவாசனும், இசையமைப்பாளராகும் ஆசையில் பிரணவ் மோகன்லாலும் ஒன்றாக சென்னைக்கு கிளம்பி வருகின்றனர். தியான் சீனிவாசன் சின்னச்சின்ன வேலைகளை செய்து உதவி இயக்குனராக மாறுகிறார். பிரணவ் இசையமைப்பாளர் குழுவில் வயலின் வாசிப்பாளராக சேருகிறார். அப்படி அவர் பணியாற்றிய ஒரு தயாரிப்பாளரின் படம் பிளாப் ஆகிறது. அவரிடம் நெருக்கமாகும் பிரணவ், தியான் சீனிவாசன் நல்ல கதை வைத்திருப்பதாக கூறி அழைத்துச்சென்று அவரை இயக்குனராக மாற்றுகிறார்.

தன்னுடைய முதல் படத்திற்கு பிரணவை இசையமைக்குமாறு கேட்கிறார் தியான். ஆனால் தான் பணியாற்றிய பிரபல இசை அமைப்பாளர் இறங்கு முகத்தில் இருப்பதால், தான் எழுதிய இசைக்குறிப்புகளை அவருக்கு கொடுத்து தியானின் படத்தில் அவரை பணியாற்றுமாறு கேட்டுக் கொள்கிறார். படம் வெளியாவதற்கு முன்பே பாடல்கள் ஹிட் ஆகின்றன. இதற்குள் கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கு அடிமை ஆகும் பிரணவ், தான் எவ்வளவு பெரிய வாய்ப்பை இழந்திருக்கிறோம் என்பதை நினைத்து விரக்தி அடைகிறார். உடனே நண்பன் தியானிடம் சென்று அவரது முதல் படத்திற்கு தன்னுடைய இசைக்குறிப்பை தான் கொடுத்தேன் என உண்மையை கூறி அவரது அடுத்த படத்திற்கு வாய்ப்பு கேட்கிறார். ஆனால் அதை நம்பாத தியான் சீனிவாசன் அவரை விட்டு விலகி செல்கிறார். பின்னர் உண்மை தெரிந்து அவரை தேடி வரும்போது பிரணவ் அந்த ஊரைவிட்டே கிளம்பி சென்று விடுகிறார்.

காலம் உருண்டோட ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் மார்க்கெட் இழக்கிறார் தியான் சீனிவாசன். ஒரு நாள் ஏதேச்சையாக பிரணவை சந்திக்கும்போது தனது தவறுக்காக கண் கலங்குகிறார் தியான். இந்த சமயத்தில் பிரணவின் முன்னாள் காதலி கல்யாணி பிரியதர்ஷன் கணவர் மூலமாக ஒரு புதிய தயாரிப்பாளர் கிடைக்க, மீண்டும் டைரக்ஷனில் இறங்குகிறார் தியான். இந்த முறை பிரணவ் இசை அமைக்க துவங்குகிறார். வயதான இந்த இருவரால் இந்த தலைமுறைக்கு ஏற்றபடி படத்தை கொடுக்க முடியுமா என சலசலப்பு ஏற்படுகிறது. மேலும் எதிர்பாராத சில பிரச்சனைகள் காரணமாக படம் பாதியிலேயே நிற்கும் சூழல் உருவாகிறது. இதையெல்லாம் தாண்டி படத்தை முடித்தார்களா? தியான் சீனிவாசன் மட்டுமல்ல பிரணவும் கூட தனது இசைத்திறமையை மீட்டெடுத்து தங்களை நிரூபித்தார்களா என்பது மீதிக்கதை

மலையாளத்தில் சினிமா பின்னணியை கொண்டு எப்போதாவது சில படங்கள் உருவானாலும் அவை பெரும்பாலும் வெற்றிப் படங்களாகவே அமைந்துள்ளன. அந்த நம்பிக்கையில் மீண்டும் ஒரு முயற்சியை கையில் எடுத்துள்ளார் இயக்குனர் வினீத் சீனிவாசன். இவர் தான் ஹீரோ என்று சொல்ல முடியாதபடி பிரணவ், தியான் சீனிவாசன் என இருவருக்குமே சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இடைவேளைக்கு பின்னர் நடிகர் நிவின்பாலியும் சேர்ந்து கொள்கிறார் என்பதால் இதை மூன்று ஹீரோ சப்ஜெக்ட் என்று கூட சொல்லலாம்.

ஒரு இசையமைப்பாளருக்கான தோற்றம் மற்றும் உடல் மொழி என கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் பிரணவ் மோகன்லால். இசையமைப்பாளராக முடிவு செய்து சென்னைக்கு வந்துவிட்டு, பின்னர் பாம்பே சென்று கஜல் மியூசிக்கில் பெரிய ஆளாகப் போகிறேன் என கூறுவதும் ஆனால் தான் கொடுத்து உதவிய இசையை வேறொருவர் பயன்படுத்தி அதன் மூலம் மிகப்பெரிய புகழை பெறுவதை பார்த்ததும் கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டு விட்டோமே என குமுறும்போதும் ஒரு சராசரி கலைஞனின் மனநிலையை அழகாக பிரதிபலித்துள்ளார்.

இடைவேளைக்குப் பிறகு வயதான கெட்டப்பில் வந்தாலும் இவருக்கு மட்டுமல்ல, தியான் சீனிவாசனுக்கும் கூட அந்த கெட்டப் நன்றாகவே பொருந்தி இருக்கிறது. இயக்குனராவதற்கான போராட்டம், கிடைத்த வாய்ப்பை தக்க வைக்கும் முயற்சியில் நண்பனை கூட ஒதுக்க வேண்டிய கட்டாயம், பின் தவறை உணர்ந்து தன் மீதே குற்ற உணர்ச்சி கொள்ளும் பரிதாபம் என எல்லா உணர்வுகளையும் கலந்து பிரதிபலித்திருக்கும் தியான் சீனிவாசன் வழக்கமான தனது காமெடியையும் இதில் கை விட்டுவிடவில்லை.

இடைவேளைக்கு பிறகு ஒரு சினிமா ஹீரோ கதாபாத்திரத்தில் பந்தா பரமசிவமாக நிவின்பாலி வரும் காட்சிகளில் எல்லாம் காமெடிக்கு நூறு சதவீதம் கேரண்டி தருகிறார். அதிலும் படம் நின்று விடுமோ என்கிற நிலையில் அவரால் ஏற்படும் திடீர் திருப்பம் எதிர்பாராதது. நிஜத்தில் அவர் தற்போது எதிர்கொண்டு வரும் கடினமான சூழலையே படத்திலும் அவரது கதாபாத்திற்கு வைத்திருப்பதும் வசனங்களால் அதை வெளிப்படுத்துவதும் இன்னும் சுவாரஸ்யம். இது அவருக்கு ஒரு கம்பேக் படம் என்றே சொல்லாம்.

கதாநாயகிகள் கல்யாணி பிரியதர்ஷன், நீட்டா பிள்ளை என இருவர் இருந்தாலும் தலா மூன்று காட்சிகளில் மட்டுமே வந்து செல்கிறார்கள் என்பது ஏமாற்றமே..

சென்னை லாட்ஜ் ஓனராக ஒய்.ஜி மகேந்திரன் நண்பர்களின் முன்னேற்றத்திற்கு துணையாக நிற்கும் கதாபாத்திரத்தில் அழகாக ஸ்கோர் செய்கிறார். நாயகர்கள் இருவரும் இளைஞர்களாக இருக்கும்போது தயாரிப்பாளராக வாய்ப்பு கொடுக்கும் அஜு வர்கீஸ் பல வருடங்களுக்குப் பிறகு அவரது மகனாக மீண்டும் இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடித்து ஆச்சரியப்படுத்துகிறார். இதில் இரண்டு கதாபாத்திரங்களிலுமே காமெடியில் அலப்பறை பண்ணியிருக்கிறார் அஜு வர்கீஸ். உதவி இயக்குனராக வந்து இடைவேளைக்குப்பின் கதையை நகர்த்தும் முக்கிய கதாபாத்திரத்தில் மின்னல் முரளி இயக்குனர் பஷில் ஜோசப் சபாஷ் பெறுகிறார்.

படத்தில் இசைக்கு அதிகம் வேலை இருப்பதால் தன் முதல் படம் என்றாலும் அப்படி தெரியாதவாறு தனது வேலைகளால் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் அம்ரித் ராம்நாத். எழுபதுகளின் காலகட்டத்திய கோடம்பாக்கத்தை அழகாக கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஸ்வஜித்.

சினிமா பின்னணியில் உருவாகும் படங்களில் மிக முக்கியமான விஷயம் எங்கேயும் ரசிகர்களுக்கு போர் அடித்து விடாமல் பார்த்துக் கொள்வது தான். இயக்குனர் வினித் சீனிவாசன் அதை லாவகமாக கையாண்டுள்ளார். குறிப்பாக சினிமா பின்னணியில் நாம் யோசிக்காத ஒரு ட்ராக்கில் அழகாக கதையை நகர்த்திக் கொண்டு சென்று இருக்கிறார். தவிர எங்கும் ஹீரோயிசம் தலைதூக்காமல் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கி இருப்பதால் கதையோடு நம்மாலும் எளிதாக பயணிக்க முடிகிறது. ஒரு நல்ல பீல் குட் படமாக இதைக் கொடுத்து வெற்றிக்கோட்டை தொட்டுள்ளார் வினித் சீனிவாசன்.

வருஷங்களுக்கு சேஷம் : சித்திரை திருவிழா

 

பட குழுவினர்

வருஷங்களுக்கு சேஷம் (மலையாளம்)

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓