ஹிருதயம்
விமர்சனம்
தயாரிப்பு ; மெர்ரிலேண்ட் சினிமாஸ் & பிக் பேங்க் என்டர்டெய்ன்மென்ட்ஸ்
இயக்கம் ; வினீத் சீனிவாசன்
இசை ; ஹேசம் அப்துல் வஹாப்
நடிப்பு ; பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், தர்ஷனா ராஜேந்திரன், அஜு வர்கீஸ், காலேஷ் மற்றும் பலர்
வெளியான தேதி ; 21.01.23
நேரம் ; 2 மணி 52 நிமிடங்கள்
ரேட்டிங் ; 3.5 / 5
2006 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் கல்லூரி பின்னணியில் நடக்கும் கதை
கேரளாவில் இருந்து சென்னைக்கு கல்லூரி படிப்பிற்காக வருகிறார் பிரணவ். கல்லூரியில் வேறொரு வகுப்பில் படிக்கும் தர்ஷனாவை பார்த்த உடனே காதல் வயப்பட்டு, சில முயற்சிகளுக்கு பிறகு அவரது காதலையும் பெறுகிறார். ஆனால் ஒருமுறை நண்பனின் காதலுக்காக கோவை வரை துணை சென்ற சமயத்தில் அங்கே சந்திக்கும் இன்னொரு பெண்ணிடம் பேசும்போது தான் ஏற்கனவே காதலிக்கும் விஷயத்தை மறைக்கிறார். ஆனால் சென்னை வந்ததும் குற்ற உணர்வால் தானாகவே இந்த விஷயத்தை தர்ஷனாவிடம் சொல்லிவிடுகிறார்.
இதனால் கோபமான தர்ஷனா பிரணவ்வுடன் தனது காதலை முறிக்கிறார். பதிலுக்கு பிரணவ் அந்த வயதுக்கே உரிய ஈகோவில் தர்ஷனாவை கன்னாபின்னாவென திட்டுவதுடன், அவரை வெறுப்பேற்றுவதற்காக கல்லூரியில் படிக்கும் இன்னொரு மாணவியிடம் நெருக்கம் காட்டி பழகுகிறார். குடிக்க ஆரம்பிக்கிறார். தர்ஷனாவும் தன் பங்குக்கு ஒருத்தனை காதலிக்க முயற்சிக்க, அவன் ஒரு பெண்பித்தன் என அதையும் பிரணவ்வே அடையாளம் காட்டுகிறார்..
இந்த செயல்களால் படிப்பை கோட்டை விடும் பிரணவ், ஒருகட்டத்தில் தவறை உணர்ந்து தன் மனதை படிப்பின் பக்கம் திருப்புகிறார். சென்னையில் உள்ள கல்லூரி நண்பன் ஒருவன் வழிகாட்டலால் குரூப் ஸ்டடி செய்து, அனைத்து பாடங்களையும் ஒரேமூச்சில் பாஸ் செய்கிறார். தர்ஷனாவும் பிரணவ்வை புரிந்துகொண்டு, கோபங்களை ஒதுக்கி மீண்டும் அவருடன் நட்பாகிறார்.
படிப்பு முடிந்து கேரளா செல்லும் பிரணவ் தனது நண்பருடன் சேர்ந்து வெட்டிங் போட்டோகிராபி தொழிலை துவங்குகிறார். அப்படி ஒரு திருமண விசேஷத்தில் கல்யாணியை கண்டதும் அவர்மீது காதலாகி, பின் அவரையே திருமணமும் செய்கிறார். இந்த செய்தி அறிந்ததும் மனம் உடைந்து போகிறார் தர்ஷனா. இவர்களது கல்லூரி காதல் தாமதமாகத்தான் கல்யாணிக்கு தெரிய வருகிறது.. அதன்பின் இவர்கள் வாழ்க்கையில் புயல் வீசியதா..? இல்லையா என்பதே மீதிக்கதை.
கடந்த சில வருடங்களுக்கு முன் ஹீரோவாக களமிறங்கிய மோகன்லாலின் மகன் பிரணவ்வுக்கு இது மூன்றாவது படம். முந்திய இரண்டு படங்களில் இருந்து இதில் நடிப்பில் இன்னும் மெருகேறியுள்ளார்.. கல்லூரி காலத்தில் விரட்டி விரட்டி ஒரு பெண்ணை காதலிப்பதும், ஆனால் காதல் கைகூடினாலும் இன்னொரு பெண்ணை பார்த்ததும் அவர்கள் மீது சட்டென ஒரு சலனம் தோன்றுவதும் சிலரின் குணாதியசமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு இளைஞனை நம் கண்முன்னே நிறுத்தும் பிரணவ், பின்னர் தனது வாழ்க்கையில் அடுத்தடுத்த காலகட்டங்களில் தனக்குள் நிகழும் மாற்றங்களையும் அழகாக பிரதிபலித்துள்ளார்.
இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும் தர்ஷனா ராஜேந்திரனுக்குத்தான் நடிக்க வாய்ப்பு அதிகம். வெட்கம், பரவசம், உத்வேகம், இயலாமை கலந்த கோபம் என விதவிதமான உணர்வுகளை மிக அழகாக முகத்தில் கொண்டு வருகிறார். கிளைமாக்ஸுக்கு முன்னதாக எங்கே வில்லியாக மாறிவிடுவாரோ என ஒரு பதைபதைப்பையும் ஏற்படுத்தி விடுகிறார்.
இடைவேளைக்கு பிறகு என்ட்ரி கொடுத்தாலும் கதையோட்டத்தில் அழகாக தன்னை இணைத்துக்கொள்கிறார் கல்யாணி பிரியதர்ஷன். குறிப்பாக தனது பிரணவ்வின் முன்னாள் காதல் பற்றி தெரியவந்ததும், அதை அவர் கையாளும் விதம் அருமை.
வினீத் சீனிவாசனின் முதல் படத்தில் இருந்தே அவரது படங்கள் அனைத்திலும் தவறாமல் இடம்பிடித்து விடும் காமெடி நடிகர் அஜு வர்கீஸ் இதிலும் ஆஜர். வெட்டிங் போட்டோகிராபராக வரும் அஜு வர்கீஸ் சற்றே இறுக்கமாக செல்லும் படத்தை கலகலப்பாக நகர்த்த உதவுகிறார்
கல்லூரி கால நிகழ்வுகளில் இடம்பெறும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களுமே ஒவ்வொரு விதத்தில் தங்களது முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி உள்ளனர். சென்னையில் நடக்கும் கதை என்பதால் ஏதோ தமிழ்ப்படம் பார்ப்பது போன்ற உணர்வுதான் ஏற்படுகிறது. அதிலும் மலையாளி மாணவர்களுக்கும் கல்வி கற்பித்து, அவர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவும் உந்துசக்தியாக செல்வா என்கிற தமிழ் மாணவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த காலேஷின் கதாபாத்திரம் நம் மனதில் அழுத்தமாக இடம்பிடித்து கொள்கிறது.. ஒவ்வொரு பகுதியிலும் அடித்தட்டு மக்களின் பிரதிநிதிகளாக பிரதிபலன் பாராமல் உழைக்கும் பல 'செல்வா'க்களுக்கு இந்தப்படம் ஒரு உற்சாக டானிக்.
சென்னை. கேரளா என இருவேறு இடங்களிலும் கதை நிகழும் காலகட்டத்துடன் நம்மை இழுத்து அமரவைக்கிறது விஸ்வஜித்தின் ஒளிப்பதிவு. ஹேசம் அப்துல் வஹாப்பின் இசையில் தர்ஷனா மற்றும் ஒணக்க முந்திரி என இரண்டு பாடல்களும் ரிப்பீட் மோடில் கேட்கும் ரகம்.
உணர்வுப்பூர்மான படங்களை லைட்டாக காமெடி பிளேவர் சேர்த்து தருவதில் வித்தகர் இயக்குனர் வினீத் சீனிவாசன்.. ஆனாலும் வழக்கமான இந்த கல்லூரி களத்தில் இவர் என்ன புதிதாக சொல்லப்போகிறார் என நினைத்தால், நம் எண்ணத்தை அப்படியே மாற்றி, கல்லூரி படிப்புக்கு பின் காதலும் வாழ்க்கையும் ஒரு மனிதனை எப்படி பக்குவப்படுத்துகின்றன என அழகாக பாடம் எடுத்திருக்கிறார். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் எப்போதும் பூட்டப்பட்டிருக்கும் அந்த கல்லூரி அறையின் கதவை திறந்து உள்ளே சென்று பிரணவ் எழுதிவிட்டு வரும் அந்த ஒற்றை வாக்கியம் இந்தப்படம் சொல்லவந்த மொத்த விஷயத்தையும் உணர்த்தி விடுகிறது.
ஹிருதயம் ; காதல் பட்டாம்பூச்சி
ஹிருதயம் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
ஹிருதயம்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்