நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி | சவுபின் சாஹிர் கால்ஷீட் கிடைக்காததால் மாறிய பஹத் பாசில் கதாபாத்திரம் | தினமும் அதிகாலை 3 மணிக்கு திரிஷ்யம் கிளைமாக்ஸை எழுதினேன் : ஜீத்து ஜோசப் | நரேன் கார்த்திகேயன் பற்றிய பயோபிக் சினிமாவாகிறது | 'பராசக்தி' வெளியீடு தள்ளிப் போகவே வாய்ப்பு ? | ஹாலிவுட்டில் நடித்த முதல் இந்திய நடிகரின் வாழ்க்கை சினிமா ஆகிறது | தெலுங்கு காமெடி நடிகர் பிஷ் வெங்கட் காலமானார் | ரேக்ளா ரேஸ் பின்னணியில் உருவாகும் 'சோழநாட்டான்' |
ஒரு கால கட்டத்தில் தென்னிந்திய மொழித் திரைப்படங்களுக்கான தயாரிப்பு மையமாக அன்றைய மெட்ராஸ் இருந்தது. அதனால், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் கூட மெட்ராஸில் அவர்களது அலுவலகங்களை வைத்திருந்தார்கள். பிரசாத், விஜயா வாகினி, பரணி உள்ளிட்ட ஸ்டுடியோக்கள் கூட தெலுங்கர்களுக்குச் சொந்தமானதாகவே இருந்தது. ஏவிஎம் ஸ்டுடியோ உள்ளிட்ட ஒருசில ஸ்டுடியோக்கள்தான் தமிழகர்களுக்கு சொந்தமாக இருந்தது.
தமிழ் சினிமாவில் அன்று கோலோச்சிக் கொண்டிருந்த சில நடிகர்கள் மற்ற மொழி தயாரிப்பாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்தனர் என்பது இப்போதும் பேசப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது.
ஆனால், 80களுக்குப் பிறகு தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களை அந்தந்த மாநிலங்களுக்கு அத்திரையுலகினர் கொண்டு சென்றுவிட்டார்கள். அவர்கள் எப்போதோ ஒரு முறைதான் தமிழகம் பக்கம் வந்து தங்களது படப்பிடிப்புக்களை நடத்துகிறார்கள். அதுவும் ஸ்டுடியோ படப்பிடிப்புகள் நடக்காது. ஊட்டி, கொடைக்கானல், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் வெளிப்புற படப்பிடிப்புகள்தான் நடைபெறும்.
அதே சமயம் இங்கு இப்போதுள்ள முன்னணி ஹீரோக்களான ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்டவர்கள் அவர்களது படங்களின் படப்பிடிப்புக்களை ஹைதராபாத்தில் உள்ள ஸ்டுடியோக்களில் நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இதனிடையே, சில காலமாக காணாமல் போயிருந்த மற்ற மொழித் தயாரிப்பு நிறுவனங்களை தமிழ் ஹீரோக்கள் இப்போது தமிழ் சினிமாவுக்குள் நுழைத்துவிட்டார்கள்.
அஜித் நடித்து ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ள 'குட் பேட் அக்லி' படத்தை தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அப்படத்திற்காக இதுவரையில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் அந்த நிறுவனம் சென்னையில் நடத்தவில்லை.
அடுத்து விஜய் தற்போது நடித்து வரும் 'ஜனநாயகன்' படத்தை கன்னடத்தில் பிரபல நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. விஜய் நடித்த 'வாரிசு' படத்தைத் தயாரித்தவர் தெலுங்கு தயாரிப்பாளர்தான். அப்போது இது குறித்து தமிழ், தெலுங்கு திரையுலகத்தில் சர்ச்சை எழுந்தது.
விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்துவிட்டதால் 'ஜனநாயகன்' படத்திற்கான எந்த நிகழ்வும் நடக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை தனது கடைசி படம் என்பதால் இப்படத்திற்காக மட்டுமாவது விஜய் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்தச் சொல்வார் என எதிர்பார்க்கலாம்.
சூர்யா அடுத்து நடிக்க உள்ள படத்தையும் தெலுங்கு நிறுவனம்தான் தயாரிக்கப் போகிறது. தனுஷ் ஏற்கெனவே தெலுங்கு நிறுவனம் தயாரித்த தமிழ்ப் படத்தில் நடித்துவிட்டார். அடுத்து அவர் நடித்து வரும் 'குபேரா' படமும் தெலுங்கு நிறுவனம் தயாரிக்கும் படம்தான்.
தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோக்கள் மற்ற மொழி தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பது இங்குள்ள பல தயாரிப்பாளர்களுக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் அவர்களால் தங்களது எதிர்ப்புகளை வெளிப்படையாகப் பதிவு செய்ய முடிவதில்லை. தெலுங்கில் உள்ள ஹீரோக்கள் மற்ற மொழி தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதை தவிர்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அல்லு அர்ஜுன் அடுத்து நடிக்க உள்ள படம் தமிழ் தயாரிப்பு நிறுவனத்தின் படம்தான். மிக அதிகமான சம்பளத்தை அந்நிறுவனம் தரத் தயாராக இருப்பதால்தான் அவர் நடிக்க சம்மதித்துள்ளார் என்கிறார்கள். இப்படத்திற்கு எந்த விதத்திலாவது நெருக்கடி கொடுக்க தெலுங்குத் திரையுலகில் சிலர் முயற்சிக்கவும் வாய்ப்புள்ளது.
தமிழில் முன்னணியில் உள்ள நடிகர்கள் பலரும் அதிக சம்பளத்தை எதிர்பார்க்கிறார்கள். அவ்வளவு சம்பளத்தை இங்குள்ள தயாரிப்பாளர்கள் கொடுக்கத் தயங்குகிறார்கள். அவர்கள் கேட்கும் சம்பளத்தை மற்ற மொழி தயாரிப்பாளர்கள் தயக்கமில்லாமல் தருவதால்தான் அவர்களது படங்களில் நடிக்க இங்குள்ளவர்கள் முன்னுரிமை தருகிறார்கள் என்ற பேச்சும் உள்ளது.
ஏற்கெனவே, பல்வேறு சிக்கல்களில் தமிழ் சினிமா தவித்து வருகிறது. தற்போது தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் முன்னணி நடிகர்களால் புறக்கணிக்கப்படுவது எங்கு போய் முடியும் என்பது தெரியவில்லை.