லெவன்
விமர்சனம்
தயாரிப்பு : ஏ.ஆர்.என்டர்டைன்மென்ட்
இயக்கம் : லோகேஷ் அஜில்ஸ்
நடிகர்கள் : நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, 'ஆடுகளம்' நரேன், சந்திரசேகர்.
வெளியான தேதி : 16.05.2025
நேரம் : 2 மணி நேரம் 18 நிமிடம்
ரேட்டிங் : 3.25/5
கதைக்களம்
சென்னையில் நடந்த வங்கிக் கொள்ளை மற்றும் போதை மாத்திரை விநியோகம் ஆகியவற்றை வெற்றிகரமாக தடுத்து, அதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்கிறார் போலீஸ் உதவி கமிஷனரான நவீன் சந்திரா. மற்றொருபுறம் தொடர் கொலைகள் நடைபெறுகின்றன. ஒரே மாதிரி நடக்கும் இந்த கொலைகள் குறித்து துப்பு துலக்க முடியாமல் போலீஸ் திணறி வருகிறது. இதனால் போலீஸ் கமிஷனரான ஆடுகளம் நரேன் இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பை நவீன் சந்திராவிடம் கொடுக்கிறார். அவர் இந்த வழக்கு குறித்து விசாரணை தொடங்கியதும் இன்னும் பல கொலைகள் அரங்கேறுகின்றன.
வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும் நிலையில் முக்கியமான ஒரு தடயம் சிக்குகிறது. அதை வைத்து புலன் விசாரணையை வேறு கோணத்தில் தொடங்குகிறார் நவீன் சந்திரா. இறுதியில் இந்த வழக்கை எப்படி முடித்தார்? இந்த கொலைகளை செய்தது யார்? எதற்காக செய்தார்? இந்த புலன் விசாரணையில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக் கதை.
ஒரு திரில்லர் படம் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி இந்த லெவன் படத்தை இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ் கொடுத்திருக்கிறார். படத்தின் முதல் காட்சி தொடங்கி எண்டு கார்டு வரை டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட்டாக கொடுத்து ரசிகர்களை இருக்கையை விட்டு நகராமல் கட்டி போட்டு விடுகிறார்.
ஒரு புலனாய்வு கதைக்குத் தேவையான திரைக்கதை மற்றும் காட்சிகளை நேர்த்தியாக கொடுத்ததுடன் கதாபாத்திரங்களின் தேர்வையும் மிகச் சிறப்பாக செய்து இருக்கிறார். புலனாய்வு திரில்லர் கதையில் இதுவரை யாரும் சொல்லாத ஒரு விஷயத்தை கருவாக வைத்து கிரிப்பிங் ஆன ஸ்கிரிப்டை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார் இயக்குனர். இவர் இயக்குனர் சுந்தர் சி-யிடம் இணை இயக்குனராகப் பணியாற்றியவர். தற்போது விறுவிறுப்பான இந்த புலனாய்வு திரில்லர் கதையை கொடுத்து வெற்றி அடித்துள்ளார்.
படத்தின் ஹீரோவான நவீன் சந்திரா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த போலீஸ் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு சீனிலும் தனது நடிப்பின் மூலம் அந்த காட்சியை தூக்கி நிறுத்துகிறார். ஆறு அடி உயரம், இறுக்கமான முகம், மிடுக்கான பாடி லாங்குவேஜ், அளவான பேச்சு என ஒரு ரியல் காப் போலவே ஸ்கோர் செய்து இருக்கிறார். அவருக்கு பக்கபலமாக திலீபன், உதவி ஆய்வாளராக வந்து அசத்துகிறார். அபிராமி கேரக்டர் படத்திற்கு மற்றொரு டைமென்ஷனை தருகிறது. இவர்களோடு படத்தில் நடித்துள்ள மற்ற கதாபாத்திரங்களான ரியா ஹரி, ஷசாங்க், ரவி வர்மா, கீர்த்தி தாமராஜு, ஆடுகளம்' நரேன், ரித்விகா, அர்ஜய் என அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.
கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவு சிறப்பு, ஒரு திரில்லர் படத்திற்கு தேவையான காட்சிகளை கொடுத்திருக்கிறார். டி. இமான் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.
பிளஸ் & மைனஸ்
ஒரு புலனாய்வு படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களையும் இயக்குனர் படத்தில் காட்டி இருக்கிறார். எந்த இடத்திலும் லாஜிக் மீறலோ, திரைக்கதையில் தொய்வோ இல்லை. படம் இரண்டு மணி நேரம் ஓடுவதே தெரியாத அளவிற்கு ஸ்கிரீன் பிளே மூலம் ரசிகர்களை எங்கேஜாக வைத்திருக்கிறார். டைட்டிலுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் திரைக்கதை இருப்பது கூடுதல் பலம்.
இருப்பினும் டீன் ஏஜ் பள்ளி காலத்தில் படித்த நண்பர்களை கொஞ்சம் கூட ஞாபகம் இல்லாதபடி காட்சிகள் வைத்திருப்பது ஒரு மைனஸ் ஆக தோன்றுகிறது.
லெவன் - கிரைம் ரசிகர்களுக்கு ஹெவன்
Subscription
























