ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு மாணவன் போட்ட வழக்கு : அமரன் பட செல்போன் எண் நீக்கம் | சூரி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | ஒரு உயிர் பலி : சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது தெலங்கானா அரசு | புஷ்பா 2 - முதல்நாள் வசூல் முதல் கட்டத் தகவல் | டொவினோ தாமஸின் ‛ஐடென்டிடி' டீசர் வெளியானது | அரபு நாடுகளில் புஷ்பா 2 படத்தின் 19 நிமிட காட்சிகள் நீக்கம் | சுரேஷ் கோபி மகனுக்கு சண்டை சொல்லித்தரும் மம்முட்டி | புஷ்பா 2 - அமெரிக்காவில் முதல் நாளில் 4 மில்லியன் வசூல் | பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ : தெலுங்கில் சாதிப்பாரா ஜோதி கிருஷ்ணா | இறுதிக்கட்டத்தில் 'திருவள்ளுவர்' படம் : இளையராஜா இசை |
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், விஜயின் 'மாஸ்டர்' பட தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மருமகனுமான ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் 'நேசிப்பாயா'. இப்படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க, பிரபு, சரத்குமார், குஷ்பு, கல்கி கொச்சலின் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்.எஸ்.சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பாளராக சினேகா பிரிட்டோ பணியாற்றியுள்ளார். இவர் ஆகாஷின் மனைவியாவார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளர் கேமரோன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பு செய்ய, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெட்ரிகோ கியூவா சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குனர் விஷ்ணுவர்தன் கூறியதாவது: 'நேசிப்பாயா' முழுக்க முழுக்க காதல் படம். காதல் என்பதை ஒரு களமாக வைத்துக்கொண்டு, இளைஞர்களுக்கான ஒரு படமாக மட்டும் இன்றி திரைப்பட ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம் விறுவிறுப்பான படத்தை எடுத்திருக்கிறேன்.
நேசிப்பாயா எப்படி தொடங்கியது என்றால், 'ஷெர்ஷா' படத்தின் டப்பிங் பணிகளில் நான் பிஸியாக இருந்த போது, என்னை ஆகாஷ் மும்பையில் நட்பு ரீதியாக சந்தித்தார். அப்போது அவரை வைத்து படம் இயக்கும் ஐடியா என்னிடம் இல்லை. இப்படி ஒரு கரு என்னிடம் இருந்தது. வாய்ப்பு கிடைத்தால் இதை படமாக பண்ணலாம் என்று நினைத்தேன், ஆகாஷுக்காக படம் பண்ண முடிவான போது, ஏன் இந்த கதையை பண்ணக்கூடாது என்று தோன்றியது. அதனால் தான் இந்த கதையை தேர்வு செய்தேன்.
இதன் கதை தமிழகத்தில் துவங்கினாலும், 90 சதவீதம் போர்ச்சுக்கல் நாட்டில் நடக்கிறது. கதைப்படி, மொழி தெரியாத ஒரு நாடு தேவைப்பட்டதால் போர்ச்சுக்கல்லில் படமாக்கினோம். ஒளிப்பதிவாளராக பிரிட்டிஷை சேர்ந்த கேமரோன் பிரைசன், சண்டை இயக்குனராக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெட்ரிகோ பணியாற்றி இருக்கிறார்கள். இவர்கள் பணிகளும் பாராட்டும்படி இருக்கும்.
அஜித்
நடிகர் அஜித்குமாருடன் பில்லா, ஆரம்பம் படங்களை இயக்கிய பிறகு, 2, 3 முறை மீண்டும் இணைந்து படம் இயக்க வாய்ப்பு ஏற்பட்டு மிஸ் ஆகிவிட்டது. ஒருமுறை அவர்கள் அழைத்தபோது, எனக்கு பாலிவுட்டில் சல்மான் கானுடன் படம் எடுக்கும் சூழல் இருந்ததால் முடியாமல் போனது. பில்லா 3 படம் எடுக்க எனக்கு அழைப்பு வந்தது; வேண்டாம் என விட்டுவிட்டேன். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அஜித்தை இயக்க ஆசை. இவ்வாறு அவர் கூறினார்.