பைசன் காளமாடன்
விமர்சனம்
தயாரிப்பு : அப்ளாஸ் என்டர்டெயின்ட்மென்ட், நீலம் புரடக் ஷன்
இயக்கம் : மாரி செல்வராஜ்
நடிப்பு : துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், லால்
இசை : நிவாஸ்.கே.பிரசன்னா
ஒளிப்பதிவு : எழில் அரசு
வெளியான தேதி : அக்டோர் 17, 2025
நேரம் : 2 மணிநேரம் 48 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5
கபடி விளையாட்டின் மீது ஆர்வமாக இருக்கும் தென்மாவட்டத்து கிராமத்து இளைஞன், ஜாதி பிரச்னைகள், அவமானங்கள், வன்முறை, துரோகங்களை கடந்து, தடைகளை மீறி எப்படி ஜெயித்தான். தமிழக அணி, இந்திய அணியில் இணைந்து ஆசிய விளையாட்டு போட்டியில் எப்படி ஜொலித்தான் என்பது பைசன் - காளமாடன் படத்தின் கதை. தனக்கே உரிய பாணியில் இயக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ்.
ஜப்பானில் நடக்கும் ஆசிய கபடி விளையாட்டு போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகிற காட்சியில் இருந்து படம் தொடங்குகிறது. அங்கே விளையாடும் இந்திய அணி வீரர் துருவ் விக்ரம், அந்த இடத்துக்கு எப்படி வந்தார். என்னென்ன பிரச்னைகளை சந்திக்கிறார் என, அவரின் பள்ளி வாழ்க்கையில் இருந்து கதை விரிகிறது. பிரேயர் நடக்கும்போது பசியில் சக மாணவர்களின் டிபன்பாக்ஸ்களை திறந்து திருட்டுத்தனமாக சாப்பிட்டு விட்டு, அதற்கு பனிஷ்மென்ட்டாக ஸ்கூல் கிரவுண்டில் வெறியோடு ஓடுகிறார் துருவ். படம் முழுக்க பல இடங்களில் ஓடிக்கொண்டே இருக்கிறார். அது ஒரு குறியீடு.
கபடி வீரராக உடல்வாகு, கபடி ஆட்டம், நெல்லை ஸ்லாங், உணர்ச்சிகர பேச்சு, கோபம், கொந்தளிப்பு, அவருக்கு பக்காவாக செட்டாகி இருக்கிறது. துருவ் சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான படம், ஹீரோவாக ஜெயித்து, மனதில் நிற்கிறார். அடுத்தபடியாக அவர் அப்பாவாக வரும் பசுபதி செம சாய்ஸ். தான் ஏன் கபடி விளையாட்டை எதிர்க்கிறேன் என்று பொங்குவதில் ஆரம்பித்து, மகனுக்காக போலீசிடம் கெஞ்சுவது வரை நடிப்பில் பாசக்கார அப்பாவாக உணர்ச்சிபூர்வமாக நடித்து கலக்கியிருக்கிறார். அவர் கேரக்டரை பார்த்து தங்கள் நிஜ அப்பா, அவர்களின் பாசம், தியாகத்தை நினைத்து பலர் கண் கலங்குவது நிஜம்.
அடுத்ததாக, துருவ் அக்கவாக வரும் ரஜிஷா விஜயனும், வயதை மீறி காதலிக்கும் ஹீரோயின் அனுபமா பரமேஸ்வரனும் கிடைத்த இடங்களில் ஸ்கோர் செய்து, பீல் பண்ண வைக்கிறார்கள். நல்லா வாத்தியராக வரும் அருவி மதன், அண்ணாச்சியாக வரும் லால்(வெங்கடேச பண்ணையார் கேரக்டர்), பாண்டியராஜாவாக வரும் அமீர் (பசுபதி பாண்டியன் கேரக்டர்) ஆகியோரும் தங்கள் பங்களிப்பை சரியாக செய்து, சில இடங்களில் வசனங்கள், நடிப்பில் படத்துக்கு பிளஸ் ஆக இருக்கிறார்கள். இவர்களை தவிர, அனுபமா பரமேஸ்வரன் அண்ணன், இந்திக்கார விளையாட்டு அதிகாரி, கபடி கேப்டன், கபடி தேர்வுக்குழுவை சேர்ந்த அழகம்பெருமாாள், கேமியோ ரோலில் வரும் ரேகா நாயர் ஆகியோர் படத்துக்கு பலம்தான்.
படத்தின் பெரிய மைனஸ் நீளம். இரண்டுமணி நாற்பத்தியெட்டு நிமிட படத்தில் அரைமணி நேரத்தை வெட்டி இருந்தால், இன்னும் விறுவிறுப்பாக இருந்து இருக்கும். அதிலும் முதற்பாதியில் ரொம்பவே சுமார். என்னப்பா, விக்ரம் மகன் படம், மாரிசெல்வராஜ் கதை இப்படி இருக்குதே? நிவாஸ் கே பிரசன்னா பாட்டு கூட சுமாரா இருக்குதே என நினைக்க தோன்றுகிறது. இடைவேளைக்குபின் சில, பல சம்பவங்கள், விளையாட்டு அரசியல், ஈகோ சண்டை, வன்முறை, கொலை போன்ற சீன்களில் கதை சூடுபிடித்து, படத்தை ஸ்பீடு ஆக்குகிறது. ஆரம்பத்தில் வரும் வன்முறை, ஜாதி பிரச்னைகள், சண்டைகள் வழக்கமான மாரி செல்வராஜ் படம் என்றாலும், கபடி விளையாட்டு, ஒரு இளைஞனின் பார்வை, அவனின் குடும்ப, சமூக சூழ்நிலை, எதிர்காலம் ஆகியவற்றை அதில் கலந்தது சுவாரஸ்யமாக்கி இருக்கிறார்.
இரண்டு ஜாதி தலைவர்கள் மோதல், கொலைகளை பார்க்கும்போது படத்தில் ஜாதி வெறி அதிகமாக காண்பிக்கப்படுமோ என்று யோசிக்கும்வேளையில் இரண்டு ஜாதி தலைவர்களின் சில நடவடிக்கை, வசனங்களால் பாசிட்டிவ் விஷயம், ஒரு இளைஞன் ஜெயிக்க வேண்டும் என்ற கண்ணோட்டம் படத்தை ஓரளவு நடுநிலையாக்கி அப்பாடா என்று மூச்சுவிட வைக்கிறது. ஜப்பான் கபடி போட்டி காட்சிகளும் பரபரப்பு.
சந்தோஷ் நாராயணன், மாரி செல்வராஜ் கூட்டணி அளவுக்கு, நிவாஸ்கே பிரசன்னா கூட்டணி இல்லை. ஆனாலும், சில பாடல்கள், தென்மாவட்ட நையாண்டிமேளம், பின்னணியில் இசையில் அவர் உழைப்பை போட்டு இருப்பது தெரிகிறது. நெல்லை, துாத்துக்குடி மாவட்ட கிராமப்புற மக்களின் வாழ்வியல், புவியியலை அழகாக காண்பித்து இருக்கிறது எழில் அரசு கேமரா. 1993, 94ல் கதை நடப்பதால், அதற்கான முயற்சி எடுத்து தத்ரூபமாக காண்பித்த ஆர்ட் டைரக்டரும் கவனிக்கப்படுகிறார்.
தீபாவளிக்கான கொண்டாட்ட சீன்கள், கலகல காமெடி, கலர்புல் பாடல்கள் நிறைந்த கமர்ஷியல் படமாக பைசன் இல்லை. இடைவேளை வரை மெதுவாக நகர்கிறது. சில ஜாதி பின்னணி, வன்முறை சில விஷயங்கள் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அந்த உண்மை சம்பவங்கள் இப்படி நடக்கலையே என்ற கேள்விகள் வரலாம். அதை சொல்லவில்லை என்ற கேள்வி வரலாம். ஆனாலும், பொருளாதார வசதி அதிகம் இல்லாத, ஜாதி அரசியல், ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஒரு கிராம பின்புலத்தில் இருந்து, ஒரு சாதாரண இளைஞன் ஜெயிப்பது எப்படி என்பதை அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் மனத்தி கணேசன் வாழ்க்கை தழுவி எடுக்கப்பட்ட இந்த கதை ஓகே. பைசனில் விக்ரம் சன் 'வின்' ஆகியிருக்கிறார்.
பைசன் - காளமாடன் : ஜாதியும், கபடியும் இணைந்து ஆடியிருக்கும் கதை
Subscription














வாழை
மாமன்னன்
பரியேறும் பெருமாள்













