'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
பாடலாசிரியர் தாமரைக்கு கடந்த 10ம் தேதி பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்தது. வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து தாமரை தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நன்றி அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தொலைபேசி அழைப்பு, குறுஞ்செய்திகள், சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி என வாழ்த்துவதற்கான அத்தனை வாய்ப்பிலும் வாழ்த்தித் தள்ளி விட்டார்கள். ஒரு திரைப்பட பிரபலத்துக்கு வாழ்த்து மழை வியப்பில்லை என்றாலும் அதிகம் முகம்காட்டாத, பாடல்கள் வாயிலாகவே அறியப்பட்ட எனக்கும் இவ்வளவு அன்பா?. யோசித்துப் பார்த்தால், திரைபிரபலம் என்பதைத் தாண்டி, முகமே தெரியாவிட்டாலும் என் பாடல்களினால் ஓர் ஆழ்ந்த அண்மையை உணர்ந்து வாழ்த்தியவர்களே ஏராளம்.
25 ஆண்டுகளுக்கு முன்பு, துறையை சட்டென்று மாற்றி திரைப்பாடலைத் தேர்ந்தெடுத்த போது திகிலாகத்தான் இருந்தது. இப்போது திரும்பிப் பார்த்தால், சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறேனென்று புரிகிறது. துறையில் நான் சந்தித்த கூர்நெருக்கடிகளின்போது விட்டுவிட்டுப் போய்விடலாமா என்கிற சிந்தனை வந்ததுண்டு. அப்போதெல்லாம் என்னையே தேற்றிக் கொள்ள, 'நானும் விலகி விட்டால் அப்புறம் யார்தான் இந்தவகைப் பாடல்களை எழுதுவதாம் ? எத்தனைபேர் காத்திருக்கிறார்கள் என்று சமாதானம் சொல்லி இருத்திக் கொள்வேன். இன்றைக்கு, உள்ளபடிக்கே என் பாடல்களுக்காக எத்தனையோ பேர் ஆவலோடு காத்திருக்கிறார்கள் என்று உணரும் போது 'ஒருபோதும் இவர்களை ஏமாற்றலாகாது' என்கிற எண்ணம் மேலோங்குகிறது.
பிறந்ததிலிருந்து ஐம்பதாண்டுகள் வரை வாழ்வை நோக்கிய பயணம். விளையாட்டு, படிப்பு திட்டங்கள், திருமணம், குழந்தை, குடும்பம், வீடு, வாகனம் என அனைத்தும் மேல்நோக்கிய பயணமே. ஐம்பதைத் தாண்டிய பிறகு அது மரணத்தை நோக்கிய பயணமாக மாறுகிறது. எல்லாம் ஆடி முடித்து அனுபவக் கொள்முதல் செய்தபிறகு ஒவ்வொரு நாளும் அருளப்பட்ட நாளே எனத் தோன்றி விடும். இனி எத்தனை நாள் இருக்கப் போகிறோமோ, அதற்குள் இன்னின்னது செய்து விட வேண்டும் என்று தோன்ற ஆரம்பிக்கும்.
எனக்குச் சில ஆண்டுகளாகவே இந்தச் சிந்தனை வந்து விட்டது. ஏதேனும் உருப்படியாகச் செய்து விட்டுப் போக வேண்டும். 30 ஆண்டுகள் திரும்பிப் பாராத ஓட்டத்தில் நான் முதன்மையாக இழந்தது புத்தக வாசிப்பைத்தான். விட்டதைப் பிடிக்க வேண்டும், ஏராளமாகப் படிக்க வேண்டும், படித்ததைப் பயனுறும் வகையில் எல்லோருக்கும் பகிர வேண்டும் என்கிற ஆவல் ததும்புகிறது.
அடுத்ததாக விலங்குரிமைச் சிந்தனை. மனிதவுரிமைச் சிந்தனையின் நீட்சியே விலங்குரிமை. முடிந்தவரை உலகுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது எனக்கான கட்டாயக் கடமை. என் பிறந்தநாளன்று மழையினூடாக திருவள்ளூர் மாவட்டம், பூண்டி நீர்த்தேக்கக் கரையோரம் 20 கிமீ உள்ளடங்கிய சென்றாயன்பாளையம் கிராமத்தில் உள்ள சாய் விக்னேஷின் விலங்குக் காப்பகத்திற்குசென்று வந்தோம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் அங்கே, வெயிலிலும் மழையிலும் கூரையற்றுக் கிடந்த மாடுகள், எருமைகளுக்கு ஒரு கூடம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று உறுதி பூண்டிருந்தேன். சென்ற ஆண்டு நிறைவேறியது. 2 லட்சம் நன்கொடை அளித்து அப்பாவின் பெயரால் ஒரு கூடம் உருவாக்கினோம். இன்று மழையில் நனையாமல் அவை யாவும் உள்ளே பத்திரமாக இருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தோம். இன்னும் செய்ய வேண்டியது உள்ளது. ஒவ்வொன்றாகச் செய்வோம்.
எப்போதும் நல்லதன் பக்கம் நின்று நல்வழியிலேயே நடந்திருக்கிறேன். இனியும் அப்படியே என்று என் அன்பார்ந்த சமூகத்துக்குச் சொல்லிக் கொள்கிறேன். என்னை வாழ்த்திய அத்துணை நல்ல இதயங்களுக்கும் மனமார்ந்த நன்றி.
இவ்வாறு தாமரை எழுதியிருக்கிறார்.