பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரரும், இயக்குனருமான சங்கீத் சிவன் நேற்று காலமானார். மலையாளம் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் பல படங்களுக்கு கதாசிரியராக, இயக்குனராக பணியாற்றியுள்ள இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை 32 வருடங்களுக்கு முன்பு தான் இயக்கிய 'யோதா' என்கிற படம் மூலமாக மலையாள திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் தான் இந்த சங்கீத் சிவன். தொடர்ந்து மலையாளம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே மாறி மாறி படங்களை இயக்கி வந்த சங்கீத் சிவன் கடந்த 2019 ல் 'பிரம்' என்கிற ஹிந்தி வெப்சீரிஸை இயக்கியிருந்தார்.
5 வருட இடைவெளி விட்டு தற்போது அவர் ஹிந்தியில் கப் கபி என்கிற படத்தை இயக்கி வந்தார். இந்த படம் கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகிய சூப்பர் ஹிட்டான ரோமாஞ்சம் என்கிற படத்தின் ஹிந்தி ரீமேக்காக உருவாகியுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. வரும் ஜூன் மாதம் இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் தான் அதை பார்க்காமலேயே இந்த உலகை விட்டு பிரிந்து சென்றுள்ளார் இயக்குனர் சங்கீத் சிவன்.