2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ரவுடி பிக்சர்ஸ், செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ்
இயக்கம் - விக்னேஷ் சிவன்
இசை - அனிருத்
நடிப்பு - விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா
வெளியான தேதி - 28 ஏப்ரல் 2022
நேரம் - 2 மணி நேரம் 39 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

ஒரு காதலன், ஒரு காதலி என நிறைய படங்களில் பார்த்தாகிவிட்டது என இயக்குனர் விக்னேஷ் சிவன் யோசித்திருப்பார் போலிருக்கிறது. ஒரு காதலன், இரண்டு காதலி என வைத்து கலகலப்பாக ஒரு காதல் கதையைச் சொல்லலாம் என இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

கலகலப்பு கொஞ்சமாக இருந்தாலும் காதல் டபுளாகவே இருக்கிறது. பகலில் ஒரு காதலி, இரவில் இன்னொரு காதலி என காதலிக்கும் ஒரு காதலனின் கதை. கொஞ்சம் தடுக்கி இருந்தாலும் ஏமாற்றுக்காரன் என சொல்ல வைக்கும் ஒரு கதையாக இருந்திருக்கும். ஆனால், பேலன்ஸ்டாகத் திரைக்கதை அமைத்து அதில் கொஞ்சம் பாசம், சென்டிமென்ட் கலந்து முடிவில்லாத காதலைக் கொடுத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

சிறு வயதிலிருந்தே அதிர்ஷ்டம் இல்லாத துரதிர்ஷ்டக்காரன் விஜய் சேதுபதி. மழை பொழியும் போது அவர் போய் மழையில் நின்றால் மழை நின்று விடும். அவர் கேட்டது, ஆசைப்பட்டது எதுவுமே கிடைத்ததில்லை. பகலில் ஓலா கார் ஓட்டுபவராகவும், இரவில் கிளப்பில் பவுன்சர் ஆகவும் வேலை பார்ப்பவர். ஒரு விநாயகர் சதுர்த்தி நாளில் பகலில் நயன்தாராவை சந்திக்கிறார், இரவில் சமந்தாவை சந்திக்கிறார். இருவருடனும் காதல் வருகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் அவரது 'ரெண்டு' காதல் விவகாரம் இரு காதலிகளுக்கும் தெரிய வருகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

காதலைக் கூட கேஷுவலாகச் செய்கிறார் விஜய் சேதுபதி. அவரது முகத்தில் பெரிய அளவில் ரொமான்ஸ் கூட வரவில்லை. ஆனால், அவர் ஒரே நேரத்தில் இருவரைக் காதலிக்கிறார் என்பதை நம்ப முடிகிறது. சிறு வயதிலிருந்தே எதுவுமே கிடைக்காதவரது வாழ்க்கையில் ஒரே நேரத்தில் இரண்டு காதலிகள் வந்தால் வேண்டாமென்று மறுக்காமல் இருவரையும் காதலித்துத் தள்ளுகிறார். இந்தக் காலத்தில் அழகான ஒரு காதலி கிடைக்கவே 90ஸ் கிட்ஸ் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், படத்தில் நயன்தாரா, சமந்தா என இருவருக்கு நடுவில் விஜய் சேதுபதியைப் பார்க்கும் போது தியேட்டரில் பொறாமைப்பட்டு சாபம் விடுகிறார்கள்.

என்னம்மா ஆச்சு நயன்தாரா உங்களுக்கு ?, என கேட்க வைக்கிறார் நயன்தாரா. கன்னம் ஒட்டிப் போய், முகத்தில் ஒரு புத்துணர்ச்சி இல்லாமல் தளர்வாய் தெரிகிறார். காதலனின் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் இப்படி இருக்கலாமா ?, என நயன்தாராவிடமும், காதலியை கதாநாயகியாக நடிக்க வைத்து இப்படி எடுக்கலாமா ?, என விக்னேஷ் சிவனிடமும் கேட்கத் தோன்றுகிறது. இருந்தாலும் தனது நடிப்பு அனுபவத்தில் அவற்றை ஓரம் கட்ட வைக்கிறார் நயன்தாரா.

படத்தில் டைட்டில் போடும் போது நயன்தாராவிற்குக் கிடைக்கும் கைத்தட்டல்களை விட சமந்தாவிற்கு கைத்தட்டல் அதிகம் கேட்கிறது. சரி, டைட்டிலில் மட்டும்தான் போலிருக்கிறது என நினைத்தால், காட்சிக்குக் காட்சி அதிக கைத்தட்டல் வாங்குகிறார் சமந்தா. நயன்தாராவுடன் ஒப்பிடும் போது மாடர்ன் மங்கையாக வருவதுதான் காரணமாக இருக்குமோ ?. இரண்டு கதாநாயகிகள் என்றாலும் இருவருக்கு சரியான அளவில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் பிரபு, டான்ஸ் மாஸ்டர் கலா, மாறன், கிங்ஸ்லி, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்கள்.

அனிருத் இசையில் 'நான் பிழை…' பாடல் மெலடியாய் ரசிக்க வைக்க 'டூ டூ டூ' பாடல் ஆட்டம் போட வைக்கிறது. கதிர், விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். இரவு நேர சென்னைக் காட்சிகள் புதிதாய் தெரிகிறது.

படத்தில் பிரச்சினை, முக்கிய திருப்பம், பரபரப்பு என எதுவுமில்லாதது மைனஸ். போகிற போக்கில் படம் போய்க் கொண்டே இருக்கிறது. அழுத்தமான காட்சிகள், அடடா சொல்ல வைக்கும் காட்சிகளும் இல்லை. ஒருவரே தங்கள் இருவரையும் காதலிக்கிறார் எனத் தெரிந்தும் நயன்தாரா, சமந்தா ஆகியோருக்கு பெரிய அதிர்ச்சி எதுவுமே வரவில்லை.

காத்து வாக்குல ரெண்டு காதல் - வாடை காத்து, கோடை காத்து

 

காத்து வாக்குல ரெண்டு காதல் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

காத்து வாக்குல ரெண்டு காதல்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓