3.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில், தம்பி ராமையா, பிரம்மானந்தம், நந்தா, ஆர்.ஜே. பாலாஜி, ஆனந்தராஜ், சுரேஷ் மேனன், சத்யன், யோகி பாபு, நிரோஷா, சுதாகர், வினோதினி, சிவசங்கர் மாஸ்டர்...
இயக்கம் - விக்னேஷ் சிவன்
இசை - அனிருத்
தயாரிப்பு - ஸ்டுடியோ க்ரீன் - கே.ஈ.ஞானவேல் ராஜா

வழக்கமான படங்களிலிருந்து கொஞ்சம் மாறுபட்ட, வித்தியாசமான படங்கள் வெளிவராதா என்று ஏங்கிப் போயிருக்கும் ரசிகர்களுக்கு இந்த தானா சேர்ந்த கூட்டம் கொஞ்சம் வித்தியாசமான படமாக இருக்கும்.

80களில் நடக்கும் கதை, அதனால் அந்தக் காலத்திற்கேற்ப ஒரு மாறாட்ட கதையாகத்தான் படத்தின் கதையும் அமைந்துள்ளது. வேலையில்லாத பிரச்சனையால்தான் இப்படி நடக்கிறது என்பதை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். அந்தக் காலகட்டத்தில் பெரிய பிரச்சனையாக இருந்த அந்த பிரச்சனை கிளைமாக்ஸ் வசனங்களில் கூட சாதாரணமாகக் கடந்து போய்விடுகிறது.

நானும் ரௌடிதான் படத்திலேயே இயல்பான திரைக்கதை, வசனம் ஆகியவற்றின் மூலம் கவனத்தை ஈர்த்த விக்னேஷ் சிவன், இந்தப் படத்தில் மீண்டும் அதை நிறைவாகச் செய்திருக்கிறார். காட்சிகளில் உள்ள ஜம்பிங்கை மட்டும் சரி செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

சிபிஐ ஆபீசில் சாதாரண வேலையில் இருக்கும் தம்பி ராமையாவின் மகனான சூர்யாவுக்கு சிபிஐ ஆபீசர் ஆக வேண்டும் என்பது லட்சியம். அதற்காக நடக்கும் நேர்முகத் தேர்வில் உயர் அதிகாரியான சுரேஷ் மேனனால் அவமானப்படுத்தப்படுகிறார். அந்த அவமானம் தாங்காமல் சூர்யா சிலரைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு சிபிஐ ஆபீசர் போல நடித்து சில இடங்களில் ரெய்டுக்குப் போய் புது மாதிரியாக கொள்ளை அடிக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் அரசுக்குத் தெரிய வர சூர்யாவின் கூட்டத்தைக் கண்டுபிடிக்க சிறப்பு அதிகாரியாக கார்த்திக் நியமிக்கப்படுகிறார். சூர்யாவின் கூட்டத்தை கார்த்தி கண்டுபிடித்தாரா, அல்லது கூட்டம் அவரிடம் சிக்கிக் கொண்டதா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கடந்த சில படங்களாக சூர்யாவை எப்படி, எப்படியோ பார்த்துவிட்டு, இந்தப் படத்தில் இயல்பான தோற்றத்தில் பார்ப்பது நிறையவே ஆறுதல். இப்படி அழகான தோற்றத்திலேயே படங்களைச் செய்யலாமே சூர்யா. நகைச்சுவையும் சூர்யாவுக்கு நன்றாகவே வருகிறது. பல காட்சிகளில் உண்மையான சிபிஐ ஆபீசர் போலவும் நடித்து அசத்துகிறார். அயன் படத்திற்குப் பிறகு அவருக்கே பொருத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்கிறார்.

நாயகியாக கீர்த்தி சுரேஷ். கண்ணுக்கு மை இட்டத்தில் இருந்து அவருடைய முகத்தில் அத்தனை இன்ச் மேக்கப் எதற்கு என்று புரியவில்லை. முதல் காட்சியைத் தவிர வேறு காட்சிகளில் நடிக்கவும் அதிக வாய்ப்பில்லை. சூர்யாவிடம் காதலைக் கேட்டு வாங்கும் காட்சியில் மட்டுமே கொஞ்சம் ரசிக்க வைக்கிறார்.

நாயகி கீர்த்தி சுரேஷை விடவும் படத்தில் சூர்யாவின் கூட்டத்தில் இருக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு அதிகக் காட்சிகள், அதிக வசனங்கள், அதிக வாய்ப்புகள். அவரை விட்டால் வேறு யாரும் அப்படி நடித்துவிட முடியாது.

சூர்யாவின் கூட்டத்தைக் கண்டுபிடிக்கும் சிறப்பு போலீஸ் அதிகாரியாக கார்த்திக். அவரின் தோற்றத்தில் ஒரு தளர்ச்சி தெரிகிறது, ஆனால், நடிப்பில் தெரியவில்லை. ஒரு கம்பீரமான தோற்றத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தை வைக்காததும் ஏன் எனப் புரியவில்லை.

சிபிஐ உயர் அதிகாரியாக சுரேஷ் மேனன். அவருக்குப் பின்னணி குரல் கொடுத்துள்ள இயக்குனர் கௌதம் மேனன் குரலால் மிரட்டலாகத் தெரிகிறார். சூர்யாவின் கூட்டத்தில் இடம் பெற்றுள்ள செந்தில், சத்யன், சிவசங்கர் மாஸ்டர் கொடுத்ததைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

காந்தியவாதியாக ஆரம்பக் காட்சியில் வரும் ஆனந்தராஜ் தான் படத்தில் அதிகமாகச் சிரிக்க வைத்தவர். துடிதுடிப்பான இன்ஸ்பெக்டராக நந்தா, ஒரே காட்சியில் பிரம்மானந்தம், நிரோஷா, யோகி பாபு, சில காட்சிகளில் தன் உண்மைக் கதாபாத்திரமாக ஆர்.ஜே. பாலாஜி என படத்தில் பலர் வந்து போகிறார்கள்.

அனிருத்தின் இசையில் சொடக்கு மேல... ஆட்டம் போட வைக்கும் பாடல். பீலா பீலா.. 80களின் பாடல்களை ஞாபகப்படுத்துகிறது. நானா தானா.. அனிருத்தின் குரலில் ரசிக்க வைக்கிறது.

படத்தை மொத்தமாகப் பார்த்தால் நன்றாக இருப்பது போலத் தோன்றினாலும் படத்திலும் சில பல குறைகள் உள்ளன. ஆனால், சூர்யாவுடன் அந்த கூட்டம் தானாக எப்படி சேர்ந்தது என்பதற்கு பெரிய விளக்கமில்லை. ரெய்டு செய்து கொள்ளை அடித்த பணத்தை யாருக்கோ கொடுத்தோம் என்கிறார்கள், யாருக்குக் கொடுத்தார்கள் என்பதிலும் தெளிவு இல்லை. சில காட்சிகள் திடீரென வந்து டக்கென முடிந்து போகின்றன. கோர்வையாக இல்லாமல் போய் சுவாரசியத்தைக் குறைத்துவிடுகின்றன.

வேலையில்லாத பிரச்சனை, அதனால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், அவர்களை வைத்து சூர்யா நடத்தும் நாடகம், ஊழல் செய்யும் அதிகாரிகளை தண்டிப்பது, சூர்யாவால் வேலைக்குச் சேர்ந்தவர்களே அவருக்கு உதவி புரிவது என நாம்தான் படம் முடிந்ததும் நமக்குள் ஒரு திரைக்கதையை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஏன் இப்படி..?. ஏற்கெனவே பல தமிழ்ப் படங்களில் பார்த்த காட்சிகள், சம்பவங்கள் என்றாலும் அவற்றை மறக்க வைத்து ரசிக்க வைக்கிறார்கள். அதற்கு சூர்யாவும், ரம்யா கிருஷ்ணனும் முக்கியக் காரணம்.

தானா சேர்ந்த கூட்டம் - தியேட்டருக்குக் கூட்டம் வரும்

 

பட குழுவினர்

தானா சேர்ந்த கூட்டம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

சூர்யா

நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா. வஸந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை துவக்கிய சூர்யா, தனது நடிப்பாலும், ஸ்டைலாலும் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்த போது ஜோதிகாவுடன் ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாக மாறியது. 2006ம் ஆண்டு அவரை திருமணமும் செய்து கொண்டார். அவருக்கு தியா, தேவ் என்ற குழந்தைகள் உள்ளனர்.

மேலும் விமர்சனம் ↓