Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

நானும் ரவுடித்தான்

நானும் ரவுடித்தான்,Naanum Rowdythan
போடா போடி படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் படம் இது.
27 அக், 2015 - 19:34 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » நானும் ரவுடித்தான்

தினமலர் விமர்சனம்


நயன்தாரா ஹீரோயினாக நடிக்க, அவருடன் தற்போது அப்படி, இப்படி பேசப்படும் இயக்குனர் விக்னேஷ் சிவன் டைரக்ட் செய்துள்ள திரைப்படம், முன்னணி இளம் நடிகர் தனுஷ் தயாரிக்க, வளரும் இளம் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம், முதலில் இப்பட இசையமைப்பாளர் அனிருத் ஹீரோவாக அறிமுகமாக இருந்த திரைப்படம், இது நாள் வரை நாயகராக மட்டும் தான் நடிப்பேன்... என அடம் பிடித்திருந்து வந்த இயக்குனர் பார்த்திபனை வில்லன் ஆக்கியுள்ள படம்... என ஏகப்பட்ட பில்டப்புகளுடன் வந்திருக்கும் படம் தான் நானும் ரவுடிதான்.


பாண்டிச்சேரி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகாவின் செல்லமகன் விஜய் சேதுபதி, சின்ன வயதில் அம்மாவுடன் அடிக்கடி ஸ்டேஷனுக்கு வந்து போய் லாக்கப்பில் ரெஸ்ட் எடுத்து வளர்ந்த சேதுபதிக்கு, அங்கு வரும் ரவுடிகளைப் பார்த்து, வளர்ந்து பெரியவன் ஆனதும் ரவுடி ஆக வேண்டும் என்பது ஆசை. ஆனால் பிள்ளையை பெரிய போலீஸ் ஆபிஸர் ஆக்க வேண்டுமென்பது அவரது அம்மா ராதிகா சரத்தின் லட்சியம். அம்மாவின் செல்வாக்கில் போலீஸ்ஆவதற்கு முன், லோக்கல் ரவுடியாக தன்னை காட்டிக் கொள்ள முயலும் விஜய் சேதுபதிக்கு நயன்தாராவை, ஒரு முறை தன் அம்மாவின் ஸ்டேஷனில் வைத்து யதேச்சையாக பார்த்ததும் காதல் தொற்றிக் கொள்கிறது.


அதனால், தன் செல்போனை கைத்தவறி உடைத்து விட்டு மனம் உடைந்து காணப்படும் செவித்திறன் குறைபாடுள்ள நயனுக்கு உதவுவது போல், அவர் பின்னால் சுற்றும் விஜய் சேதுபதி, நயனின் சோகக்கதையைக் கேட்டு மெர்சலாகிறார். ஒரு நல்ல அமைதியான போலீஸ் ஆபிஸரான நயனின் அப்பாவிற்கு வந்த வெடிகுண்டு பார்சலில், நயன்தாரா, தன் அம்மாவை இழந்து, தன் இரண்டு காதுகளின் கேட்கும் தன்மையையும் இழக்கிறார். கொஞ்ச காலத்தில் தன் காவலர் தந்தையையும், இழந்து தனி மரமாக இருக்கும் நயனுக்கு, தன் பெற்றோரின் சாவுக்கும் தனது காதுகள் கேட்காது போனதற்கும் காரணம், முன்பு பாண்டியிலும், தற்போது சென்னையிலும் கோலோச்சி வரும் தாதா பார்த்திபன் என்பது தெரிய வருகிறது.


பார்த்திபனை பழி தீர்க்க சரியான ஆஜானுபாகுவான ரவுடி, நயனுக்கு வேண்டி இருக்கிறார். அந்த சமயம் விஜய் சேதுபதி வலிய வந்து நயன்தாரா மீதான தன் காதலை மெல்ல, மெல்ல காட்ட, தன் இந்த நிலைக்கு காரணமான பார்த்திபனை தீர்த்து கட்ட தனக்கு உதவினால் விஜய் சேதுபதியை தான் காதலிப்பதாக உறுதி கொடுக்கிறார். அப்போதைக்கு விஜய் விரும்பும் உதடுகொடுக்க உஷாராய் மறுக்கிறார்.


வடிவேலு காமெடி பாணியில், நானும் ரவுடிதான், ரவுடிதான்.... எல்லோரும் பார்த்துக்கங்க.... பார்த்துக்குங்க... என., பள்ளிக்கூட பசங்க காதல், மோதல் பஞ்சாயத்து உள்ளிட்டவைகளில் மட்டுமே தலையிட்டு பெரிதாய் ரவுடி பில்டப் மட்டும் கொடுத்து வரும் சாதா விஜய் சேதுபதி, பெரிய ரவுடி தாதாவான பார்த்திபனை கொன்றிட நயனுக்கு உதவினாரா? அல்லது விஜய் சேதுபதியே நயனின் சோகக்கதை, சொந்தக் கதைக் கேட்ட பின், வெறிகொண்ட வேங்கையாக புறப்பட்டு பார்த்தியை தீர்த்தாரா ..? அல்லது அவரது மம்மி ராதிகாவின் ஆசைப்படி போலீஸ் ஆனாரா..? நயனுடனான காதலில் தோற்றாரா.? வென்றாரா..? என்பதை பின்பாதி நீள, நீள... சொல்கிறது நானும் ரவுடிதான் படத்தின் மீதிக் கதை!


பாண்டியாக நானும் ரவுடிதான் என்றபடி வரும் விஜய் சேதுபதி, நான் கடவுள் ராஜேந்திரன் சொல்வது மாதிரி ரவுடிக்கே உரிய நடை, உடை, பாவனைகளில் பட்டையை கிளப்பி இருக்கிறார். நெஞ்சில் ரவுடி தனத்திற்குரிய துணிவு இல்லாமல் அவர் ஆரம்பத்தில் படும் அவஸ்தைகள் காமெடி கலாட்டாக்கள்!


காதல் பற்றியும், நட்பு பற்றியும் நயன்தாராவை தவறாக வழிநடத்த முற்படும் தனது அன்வர் எனும் நன்பருக்கு வழங்கும் லக்சர், நண்பனின் காதலியை லவட்ட முற்படும் நம்பிக்கை துரோகிகளுக்கு, நற்போதனை. நானும் ரவுடி என அவர் தன் போலீஸ் இன்ஸ் அம்மா இருக்கும் தைரியத்தில் ஆரம்பத்தில் அவர் பண்ணும் லொள்ளு செம ரகளை.


நயன் மீதான காதலுக்காக, இவர் ஏங்குவதும் அது கிட்டத்தில் கிடைத்தும், கிடைக்காமல் போனதும் இவர் பார்த்திபனை கொள்ள காமெடி வடிவேலு பாணியில் எதையும் பிளான் பண்ணி பண்ணனும் ... என்பது மாதிரி சொதப்பல் பிளான்களில் இறங்குவதும், அதன் பின் ஒருவழியாக காதலிக்காக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பார்த்திபனை அட்டாக் பண்ண கிளம்புவதும் ஹாஸ்யம். அம்மாவை மா என்று கூட கூப்பிடாமல் மம்மி என்பதின் சுருக்கமாக மீ,மீ ... என்று ஏதோ மலையாளிகள் மாதிரி சேதுபதி, படம் முழுக்க ராதிகாவை அழைப்பது... தமிழனாய், ரசிகனை சற்றே கடுப்பேற்றுகிறது.


காதம்பரி -நயன்தாரா செவித்திறன் குறைபாடுள்ள அழகுப்பெண்ணாக நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். தான், செவித்திறன் குறைபாடுள்ளவர் என்பதை யாரிடமும் சொல்லாதீர் என எதிர்படும் எல்லோரிடமும் நயனனே சொல்வது...., இது மாதிரி குறைபாடுள்ளவர்கள்... எப்படி அந்த குறைப்பாட்டை காட்டிக் கொள்ளாமல் காலம் தள்ள முயற்சிப்பார்களோ, அதை அப்பட்டமாக, அழகாக பிரதிபலித்திருக்கிறார் நயன். நயன்தாராவைத் தவிர இன்றைய தமிழ் சினிமாவில் இது மாதிரி கணமான பாத்திரத்தை வேறு யாரும் சிறப்பாக செய்ய முடியுமா...? என்பது சந்தேகமே! இந்தப் படத்தில் அவரது சொந்த குரலும் கூடுதல் ப்ளஸ்!


அதே நேரம், அவ்வளவு நாள் பார்த்திபனை பழி தீர்க்க வெறியுடன் காத்திருந்த நயன்தாரா, ஒரு கட்டத்தில் தன் பெற்றோர் மரணத்திற்கு காரணமான பார்த்திபனை தன் காதலன் சேதுபதி பிடித்துக் கொள்ள, நயன் கத்தியால் குத்த நல் வாய்ப்பு நச்சென்று கிடைத்தும், பார்த்தியை குத்தாமல் சித்தாந்தம் பேசுவது... இந்த படத்தில் நயன் ஏற்றிருக்கும் பாத்திரத்தையே கேள்வி குறியாக்கி, கேலிகுரிய தாக்கி விடுகிறது. அதே போன்று தன் பெற்றோர் சாவுக்கும், தன் செவித்திறன் போனதற்கும் ஒரு ரவுடிதான் காரணம் என்பது தெரிந்திருந்தும்... ஒரு சீனில் விஜய் சேதுபதியிடம் ரவுடி வேற, ப்ராடு வேற.... நீ ப்ராடு. ரவுடிகள் எல்லோரும் நல்லவர்கள் , நேர்மையாளர்கள் ..என லக்சர் கொடுப்பது ரொம்பவும் சினிமாட்டிக்காக, லாஜிக் இல்லாமல் அபத்தமாக இருக்கிறது .


கிள்ளிவளவன் எனும் வளவள பார்த்திபனின் வில்லத்தனத்தில் கள்ளத்தாமான சில்மிஷங்கள் தான் நிரம்பி இருப்பதாக தெரிகிறது. நயன், தேடி வந்து அவரை போட வேண்டும் ... என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் என்ன ரவுடி சார், இவர்? என சலிப்பாய் கேட்க வைத்து விடுகிறார். அதே மாதிரி, பக்கம் பக்கமாய் எந்த ரவுடி பேசுவான்? என எக்குத்தப்பாய் கேட்க வைக்கும் பார்த்தி, ஒரு சீனில் எதிராளிகளை பாத்தி கட்டி, சுத்தி சுத்தி அடிப்பது மட்டும் ரசனை. மற்றபடி பார்த்திபன் வரும் சீன்கள் சோதனை மேல் சோதனை! எத்தனை பேர் வந்தாலும் எதிர்த்து நின்று மல்லுகட்டும் ரவுடிகளை பார்த்திருக்கிறோம்... இப்பட வில்லன் -பார்த்திபன் வாயிலாக ஒரு மாஸான ரவுடி எக்கச்சக்க எதிராளிகளைப் பார்த்ததும் கக்கூஸில் ஒளிவதை இந்தப் படத்ததில் தான் பார்க்க முடிகிறது... ம்!


பார்த்திபனும் ஒரு கிரியேட்டர், டைரக்டர் ... ஸ்பாட்டில் ஸ்கிரிப்ட் பேப்பரை பார்த்ததும் இப்பட டைரக்டரிடம் இதுபற்றி டிஸ்கஸ் ஏதும் செய்திடாமல், சமீபத்திய நா.ர. தான் பிரஸ்மீட்டில் தானே வலிய சொன்னது மாதிரி நயனையும், இப்பட இயக்குனரையுமே வைத்த கண் வாங்காமல் கண்காணித்துக் கொண்டிருந்திருப்பாரோ .?! என அலுப்பு தட்ட வைத்து விடுகிறார் மனிதர்.


ஆனால், பார்த்திபன் மாதிரி அல்லாமல், கொலை பாதக ரவுடியான பார்த்தியை, அரசியலில் எதிர்க்கும் மன்சூர்., சைலண்டாக தன் பாணி நடிப்பில் ஸ்கோர் செய்திருப்பது ஆறுதல். மன்சூர் மாதிரியே, பத்து லட்சம் பார்த்து பதறும் பாண்டி, பழைய தாதா ஆனந்தராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.என்.ஆர்.மனோகர் உள்ளிட்டவர்களும் படத்திற்கும் தாங்கள் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கும் வலு சேர்த்துள்ளனர்.


சேதுபதியின் நண்பராக வரும் ரேடியோ ஜாக்கி பாலாஜி, "அசராப் புலி, அசால்ட்டு புலி .. ஏன்னா இது சாதாபுலி அல்ல ... பாகுபலி ... என்பது உள்ளிட்ட டைமிங் காமெடி டயலாக்குகளில் தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறார். அவரை மாதிரியே சேதுபதியின் பிற சகாக்களான தாத்தா ராகுல், அன்வர், காமாட்சி ஆகியோரும் பாண்டிச்சேரி சாதா விஜய் சேதுபதிக்கு தாதா பயிற்சி தரும் நார்த் மெட்ராஸ் ரவுடி நான் கடவுள் ராஜேந்திரன் - உள்ளிட்டோரும் விஜய் சேதுபதியின் மீ யாக வரும் போலீஸ் மம்மி ராதிகா சரத்தும் கச்சிதம் .


அனிருத்தின் மெலடி, அதிரடி.... என வகைக்கு ஒன்றாக வசீகரிக்கும் நானும் ரவுடி தான்... படப்பாடல்கள் இசையும், அதிரும் பின்னணி இசையும், இப்படத்திற்கு பெரிய பலம். "ஜார்ஜ.C. வில்லியம்ஸின் ஒளிப்பதிவும்., ஸ்ரீகர் பிரசாத்தின் முன்பாதி படத்தின் படத்தொகுப்பும் கூட நானும் ரவுடிதான் படத்திற்கு கூடுதல் பலமே !


விக்னேஷ்சிவனின் எழுத்து, இயக்கத்தில் , ஒரு நண்பனின் காதலில் ஊடல்... என்றால் , உடன் இருப்பவர்கள் உதவி பண்ண முடியலை... என்றாலும் உபத்திரம் பண்ற மாதிரி ஊடால புகுந்து காதலியை களவாட, கண்டபடி வழி நடத்த முயற்சிக்க கூடாது...எனும் ரீதியில் விஜய் சேதுபதி பேசுவது மாதிரியான பன்ச் டயலாக்கில் இயக்குனர், யாருக்கோ, எதற்கோ தன்னிலை விளக்கம் தர முற்பட்டிருப்பதாகவே தெரிகிறது. வலிய வைக்கப்பட்டிருக்கும் அந்த வசனம், வந்து போகட்டும்.. பரவாயில்லை ... ஆனால், நயன், தன் பெற்றோரின் சாவுக்கு காரணமானது ஒரு ரவுடி என தெரிந்தும், தன் மீதுள்ள காதலால் நானும் ரவுடி தான் ....என பில்டப் கொடுத்து பிராடு பண்ணும் விஜய் சேதுபதியிடம், ரவுடிகள் நல்லவர்கள், நேர்மையாளர்கள்.... என பேசுவதும், பார்த்திபன் வகையாக நயன் கையில் கிடைத்தும் தன் விருப்பப்படி, பார்த்தியை போடாமல், கழிவிறக்கத்தில் அவருக்கு உயிர் பயம் கூட காட்டாமல் விடுவதும், லாஜிக்காக இடிப்பதை இயக்குனர் கவனிக்கத் தவறியிருப்பது பலவீனம் .


அதே மாதிரி, பாண்டிச்சேரி அரசாங்கத்தை சார்ந்த மாஹி பகுதியில் இருந்து மீண்டும் மாற்றலாகி பாண்டிக்கு வரும் நயனின் போலீஸ் அப்பா அழகம்பெருமாள் பாண்டி மண்ணுக்கு மட்டும் தான், சரக்கு மணம் உண்டென்று சிலேகித்து பேசுவதும், உடனே மகள் நயன்தாரா வண்டியை நிறுத்த சொல்லி ஒயின்ஷாப்பில் அப்பாவுக்கு இரண்டு பீர் கொடுங்க... என வாங்குவதும் கொடுமை! நாம் கொடுமை என்பது நயன்,அப்பாவுக்காக பீர் வாங்குவதை அல்ல .... பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தை சார்ந்த மாஹி , காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழ்நாட்டை காட்டிலும் சரக்கு ரொம்பவும் கம்மி விலையில் கிடைக்கும், பாண்டச்சேரியின் வாசம் அப்பகுதிகளிலும் பக்காவாக வீசும் எனும் போது, பார்க்காததை பார்த்த மாதிரி நாக்கை தொங்க போடும் பெருமாளின் (அழகம்) பெருமூச்சும், அதற்கு நயன்தாராவின் பீர் வாங்கும் ரியாக்ஷனும் ., இயக்குனரின் அறியாமையை காட்டுவதாகவே இருக்கிறது . இது மாதிரி ஒரு சில குறைகளை பூதக்கண்ணாடி கொண்டு பாரகாமல் , கேஷுவலாக பார்த்தோமென்றால் ., சிம்பு நடிப்பில் போடா போடி "படத்தை முதன்முதலாக இயக்கிய விக்னேஷ் சிவன், தனுஷ் தயாரிப்பில், இயக்கி இருக்கும், "நானும் ரவுடிதான் ஜனரஞ்சகமான லவ் ,காமெடி , ஆக்ஷன் அதிரி- புதிரி அட்டகாசம் தான் ..


ஆகமொத்தத்தில், "நானும் ரவுடிதான் - ரசிகனுக்கு பிடித்த நல்ல படம்தான்!"


--------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
வடிவேலுவின் 'நானும் ரௌடிதான்' போல் வெறும் கெத்திலேயே வண்டியை ஓட்டும் விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் வருகிறார் நயன்தாரா. தன்னைக் காதலிக்க நயன்தாரா போடும் ஒரே கண்டிஷன் 'என் பெற்றோரின் மரணத்துக்கு காரணமான பார்த்திபனை போட்டுத் தள்ள வேண்டும்' என்பதுதான்!


ஒரு பழிவாங்கும் கதையை படம் முழுக்க காமெடி கலந்து அட்டகாசமாய்த் தந்திருக்கிறார் நயன்தாராவின் நண்பர் விக்னேஷ் சிவன்.


விஜய்சேதுபதி சூப்பர் ஜி. மீண்டும் தன் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார். ஸ்கோர் பண்ண தனக்கு வாய்ப்பு கம்மிதான் என்று தெரிந்தாலும் காட்சிக்குக் காட்சி கலகலக்க வைக்கிறார்.

அம்மா ராதிகாவுக்குத் தெரியாமல் செய்யும் குறும்பு எல்லாம் ஹஹா... தாடி மீசை மட்டும் மிஸ்ஸிங்.


சென்ற படத்தில் கல்லூரி மாணவி போல் இருந்த நயன்தாரா, இங்கே ப்ளஸ்டூ பெண் போல மாறியிருக்கிறார். சவாலான காதுகேட்காத பாத்திரத்தில் ஜோதிகா போல வாழ்ந்திருக்கிறார். திக்கித் திணறி தன் பிரச்னையைச் சொல்லும்போது சிலிர்க்க வைக்கிறார். கோபம், கனிவு, இரக்கம், காதல் என்று முழுக்க முழுக்க இது நயன்தாரா படம் என்று முத்திரை பதிக்கிறார். சொந்தக் குரலும் ஒர கோப்பைத் தேன்!


'கறுப்பு ஹல்க்' பார்த்திபன், கிள்ளிவளவனாக உள்ளத்தைக் கிள்ளுகிறார். உடல் மொழியும் வாய்மொழியும் அப்ளாஸ்.


தோழனாக வரும் பாலாஜி புன்னகைக்க வைக்கிறார். 'நான் கடவுள்' ராஜேந்திரனின் நடை, உடை, பாவனை ஆஸம்!


சரி, யார் அந்த ராகுல் தாத்தா? அவர் கூகுள் மேப் தேடும் காட்சியில் வெடிச் சிரிப்பு கிளம்புகிறது.


கைதட்டல் வாங்கும் 'போடணும்' வசனத்தை சென்ஸாரில் ம்யூட்டில் போட்டிருக்க வேண்டாமா? ஏகப்பட்ட இடத்தில் டபுள் மீனிங் கெட்ட வார்த்தை வருவது நெளிய வைக்கிறது.

பார்த்த பாண்டிச்சேரிதான் என்றாலும் ஜார்ஜ் வில்லியம்ஸின் கேமரா புதுசு போல கவிதை பாடியிருக்கிறது.


மன்சூர் அலிகான், ஆனந்தராஜ் என்று பழைய வில்லன்களையும் காமெடியில் இறக்கியிருக்கிறார்கள்.


ஆர்.ஆரில் அனிருத் துள்ளி விளையாடியிருக்கிறார்.


நானும் ரௌடிதான் - ஆடியன்ஸ் ஹேப்பி


குமுதம் ரேட்டிங் - நன்றுவாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in