விநோதய சித்தம்
விமர்சனம்
தயாரிப்பு - அபிராமி மீடியா ஒர்க்ஸ்
இயக்கம் - சமுத்திரக்கனி
இசை - சத்யா
நடிப்பு - தம்பி ராமையா, சமுத்திரக்கனி, சஞ்சிதா ஷெட்டி மற்றும் பலர்
வெளியான தேதி - 13 அக்டோபர் 2021 (ஓடிடி)
நேரம் - ஒரு மணிநேரம் 37 நிமிடம்
ரேட்டிங் - 3.5/5
தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படமா என வியக்க வைக்கும் ஒரு படமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. நடுத்தர, வயதான கதாபாத்திரங்களை கதையின் நாயகனாகக் கொண்ட படங்களை இங்கு பார்ப்பதும் மிக மிக அரிது.
70 வயது ஆன ஹீரோக்கள் கூட 25 வயது பெண்களுக்கு ஜோடியாக நடிக்கும் கதாபாத்திரங்களையும், படங்களையும்தான் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்கள். அவர்களது வயதுக்குப் பொருத்தமான கதாபாத்திரங்களில் அவர்கள் நடிக்கவும் மாட்டார்கள். அப்படியான படங்களைப் பார்த்துப் பழகிப் போன தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு மாறுபட்ட ரசனையைக் கொடுக்கும்.
தொடர்ந்து அறிவுரை கூறும் படங்களையே இயக்கி வந்த சமுத்திரக்கனி, இந்தப் படத்திலும் அறிவுரை கூறுகிறார். ஆனால், எதுவுமே நீளமான அறிவுரை அல்ல, ரத்தினச் சுருக்கமான வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரைகள்தான். பேசுவதை குறைத்துக் கொண்டதோடு வாழ்க்கையின் பல அர்த்தங்களை படம் பார்க்கும் ரசிகர்களுக்குப் புரிய வைக்கிறார். இப்படி ஒரு கதையைத் தேர்வு செய்து படமாக்க தனி தைரியம் வேண்டும், அது சமுத்திரக்கனியிடம் நிறையவே இருக்கிறது, தெளிவாகவும் இருக்கிறது.
ஒரு கம்பெனியின் உதவி ஜெனரல் மேனேஜர் ஆக இருப்பவர் தம்பி ராமையா. தன்னால்தான் தனது கம்பெனி நடப்பதாக ஒரு மமதை அவரிடம் உண்டு. அன்பான மனைவி, மகன், இரு மகன்கள் என கொஞ்சம் வசதியாகவே வாழ்ந்து வருகிறார். ஒரு விபத்தில் அவர் இறந்து விட, அவரை மேலோகம் அழைத்துப் போக வருகிறார் கடவுள் (?) சமுத்திரக்கனி. தனக்கு இன்னும் குடும்ப சுமைகள் இருப்பதாகவும் அவற்றை நிறைவேற்றி விட்டு வருவதாகவும் சமுத்திரக்கனியிடம் கூறுகிறார் தம்பி ராமையா. அதனால், 90 நாட்களுக்குள் அவற்றை முடித்துவிட்டு தன்னுடன் வர வேண்டும் என நிபந்தனை விதிக்கிறார் சமுத்திரக்கனி. அதுவரை தம்பி ராமையாவுடன் தானும் கூடவே இருப்பதாகவும் சொல்கிறார். அந்த 90 நாட்களுக்குள் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
தம்பி ராமையாதான் இந்தப் படத்தின் கதையின் நாயகன். தேசிய விருது பெற்ற நடிகர் என்பதை மீண்டும் ஒரு முறை இந்த பரசுராமன் கதாபாத்திரம் மூலம் நிரூபித்திருக்கிறார். இந்தப் படத்திற்காகவும் அவருக்கு தேசிய விருதை தாராளமாகப் பரிந்துரைக்கலாம். ஒரு கர்வம், மிடுக்கு, தான்தான் என்ற அகங்காரம் என தம்பி ராமையா ஆரம்பத்தில் நடந்து கொள்கிறார். விபத்தில் இறந்த பின் கடவுள் உதவியால் மீண்டும் வாழ ஆரம்பித்ததும் அவரிடம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றங்கள் ஏற்படுகிறது. வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்பதை உணர ஆரம்பிக்கிறார். ஒவ்வொரு கட்டத்திலும் அவரது நடிப்பு அப்படி ஒரு பொருத்தத்துடன் வெளிப்படுகிறது.
கடவுளா, காலனா, விதியா என யாரென்று சொல்லாத எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தியாக வருகிறார் சமுத்திரக்கனி. இதுவரை படங்களில் பார்த்த சமுத்திரக்கனிக்கும் இந்தப் படத்தில் பார்க்கும் சமுத்திரக்கனிக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. இப்படியே நடியுங்கள் கனி, இதுதான் மிக மிக யதார்த்தமாய் உள்ளது.
தம்பி ராமையாவின் மகனாக தீபக், மகளாக சஞ்சிதா ஷெட்டி, நண்பனாக முனிஷ்காந்த் அவர்களுக்கான ஸ்பேஸ்களில் சரியாக நடித்திருக்கிறார்கள். தம்பி ராமையாவின் மனைவியாக ஸ்ரீரஞ்சனி. இப்படியெல்லாம் ஒரு அம்மா இருந்தால் பிள்ளைகளுக்கு வாழ்க்கை எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.
சத்யா பின்னணி இசை வேறு ஒரு தளத்திற்கு படத்தை அழைத்துச் செல்கிறது. என்கே ஏகாம்பரம் செய்திருக்கும் ஒளிப்பதிவு இந்தப் படத்திற்கு பெரும் பிளஸ் பாயின்ட். படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் மிகவும் ஷார்ப்பாக அமைந்துள்ளது. நறுக்குத் தெறித்தாற் போன்ற வசனங்கள், எழுதியவர்களுக்கு தனி பாராட்டுக்கள்.
நாடகத்திலிருந்து எடுக்கப்பட்ட கதை என்பதால் ஒரு சில இடங்களில் மட்டும் கொஞ்சமாக ஒரு நாடகத்தன்மை எட்டிப் பார்க்கிறது. அதைத் தவிர்த்திருக்கலாம். மற்றபடி ஒன்றே முக்கால் மணி நேரம் படம் நகர்வது தெரியவில்லை.
காதல் காட்சிகள், காமெடி என்ற பெயரில் சோதனைகள், குத்துப்பாட்டு, ராப்பாட்டு என நமக்கு எந்த தொந்தரவையும் தராமல் ஒரு அருமையான குடும்பக் கதையைப் பார்த்து ரசித்த திருப்தி ஏற்படுகிறது.
விநோதய சித்தம் - வாழ்க்கைச் சிந்தனை
விநோதய சித்தம் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
விநோதய சித்தம்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்