தினமலர் விமர்சனம் » போராளி
தினமலர் விமர்சனம்
"நாடோடிகள்" வெற்றி கூட்டணி எம்.சசிகுமாரும், பி.சமுத்திர கனியும் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் தான் "போராளி!"
கதைப்படி, ஹீரோ சசிகுமாரையும், செகண்ட் ஹீரோ நரேஷையும் கும்மிருட்டில், கொட்டும் மழையில், கொலை வெறியோடு மூர்க்கத்தனமாக ஒருத்தர் துரத்த, அவரிடமிருந்து ஒருவழியாக தப்பி பிழைக்கும் இருவரும் சென்னையில், பொய் வேஷம் போட்டு பிழைப்பு நடத்தும் கிராமத்து நண்பன் கஞ்சா கருப்பு, தங்கியிருக்கும் அறைக்கு அடைக்கலம் தேடி வருகின்றனர். அங்கு கருப்பு மட்டுமல்ல, அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும் மற்றவர்களும், இவர்கள் இருவருக்கும் அடைக்கலம் தர மறுக்க, ஹவுஸ் ஓனர், பேராசிரியர் ஞானசம்பந்தம் மட்டும் தீர்ப்பு நான் தான் சொல்வேன்... என்று, இருவரது முகத்திலும் ஒளி தெரிவதாக சொல்லி, கருப்புவின் அறையில் இவர்களை சேர்த்துக்கொள்ள சொல்வதுடன் சசிக்கு, தன்மகளையும் கட்டி தரும் முடிவில் இறங்குகிறார்.
இதுஒருபுறம் இருக்க, சிட்டிக்கு வந்த இருவரும் ஞானவேல் அண்ணாச்சியின் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து கொண்டே, பார்ட் டைமாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து, அதில் பல பேருக்கு வேலை வாங்கி தருகின்றனர். இதைப்பார்த்து இவர்களது வீட்டின் அருகில் சினிமா டான்ஸராக இருக்கும் ஹீரோயின் சுவாதிக்கு-சசிக்குமார் மீதும், பெட்ரோல் பங்கில் உடன் வேலைபார்க்கும் நிவேதாவிற்கு-நரேஷ் மீதும் காதல் கண்ணை மூடிக்கொண்டி வருகிறது. இப்படி தாங்களும் வளர்ந்து சைடில் இருப்பவர்களையும் வாழவைக்கும் சசிகுமார், நரேஷ் இருவர் மீதும் பைத்தியார ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி வந்த பைத்தியங்கள்... எனும் குற்றச்சாட்டு இண்டரவெல்லுக்கு முன் இடியென வந்து விழ, அவர்களை தேடிவந்த கிராமத்து ஆசாமிகளுடன் கிளம்பினார்களா...? இல்லை, தாங்கள் பைத்தியம் இல்லை என்பதை நிரூபித்து, தாங்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்தார்களா...? என்பது போராளி படத்தின் போராட்டமான மீதிக்கதை!
சிலோன் என்ற வார்த்தையே எனக்கு பிடிக்காது, இவளுக்கு சிலோன் பரோட்டா வேண்டுமாம் என்பது உள்ளிட்ட டச்சிங் டயலாக் பேசியபடி இளங்குமரனாக வரும் சசிகுமார், முன்பாதியில் ஃபிரேம் டூ ஃபிரேம் தான் செம மூளைக்காரர் என்பதை நிரூபித்திருக்கிறார். பின்பாதியில் உறவுகளால் பைத்தியம் ஆக்கப்பட்டதாலோ என்னவோ சற்றே சித்த பிரமை பிடித்தவர் போன்றே தெரிவது மைனஸ்! சசிகுமாரின் முன்பாதி துருதுறுப்பும், சுறுசுறுப்பும் பின்பாதியில் இல்லாமல் இருப்பது படத்தையும் ஸ்லோவாக்கி விடுவதை இயக்குநர் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!
குறும்பு நரேஷ், அல்லாரி நரேஷாக தெலுங்கில் செம பிரபலம் என்றால், தமிழில் குறும்பு படத்திற்குப்பின் மீண்டும் இப்பொழுது தான் வந்திருக்கிறார். சுயநிலை இழக்கும் இடங்களில் நடிப்பில் மனுஷன் வெளுத்து வாங்கியிருக்கிறார்.
சுவாதி, நிவேதா, வசுந்த்ரா மூவருமே முக்கிய பங்காற்றும் நாயகி என்றாலும், மூவரில் பின்பாதியில் ஆட்டுக்கார அலமேலு... எனும் ரீதியில் ஈட்டி, கம்பும் கையுமாக வீராவேசமாக வரும் வசுந்த்ரா பிரமாதம். கஞ்சா கருப்பு, பரோட்டா சூரி, ஜெயபிரகாஷ், ஞானசம்பந்தாம், ஞானவேல், நமோ நாராயணன் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.
சுந்தர்.சி.பாபுவின் அதிரடி இசை, எஸ்.ஆர்.கதிரின் அழகிய ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் இயக்குநர் பி.சமுத்திரகனி, போராளி படத்தில் நிறையவே போராடி இருப்பது தெரிகிறது. அதற்கான வெற்றி எவ்வளவு என்பது ரசிகர்களின் தீர்ப்பிலேயே இருக்கிறது.
போராளி - புத்திசாலி! அதிர்ஷ்டசாலியா...?!
-------------------------------------------------------------
குமுதம் சினிமா விமர்சனம்
வாழ்க்கையையே பறிச்ச சொந்தங்களுக்கு முன்னாள் வாழ்ந்து காட்டணும் - இது சசிகுமாரின் லட்சியம். திடீரென தோன்றும் மனநலச் சிதைவை சமாளிக்கணும் - இது அல்லரி நரேஷின் பிரச்சனை, சொந்தம்ன்னு சொல்லிக்க யாருமே இல்லை - இது ஸ்வாதியின் ஏக்கம், இத்தனை பிரச்சனைகளிலும் தன்னம்பிக்கையால் தடம் பதிக்கும் இவர்கள்தான் போராளிகள்.
தோளில் புரளும் தலைமுடியோடு கிராமத்தில் சுற்றுவது, நகரத்துக்கு வந்த தடுமாற்றமே இல்லாமல் சாதிப்பது என கதையின் இரு அத்தியாயங்களுக்கும் சசிகுமார் நச்சென்று பொருந்துகிறார். அல்லரி நரேஷின் பாடி லாங்குவேஜில் “நாடோடிகள்’ பரணியின் சாயல், மனநிலை பிறழ்ந்து தடுமாறும்போது இதயத்தை கனக்க வைத்துவிடுகிறார்.
சசிகுமாரின் காதலியாக வரும் ஸ்வாதியிடம் ஃப்ரீஸரிலிருந்து எடுத்த ஐஸ் க்யூப் மாதிரி ஃப்ரெஷ் லுக். விபத்தில் சிக்கிய ஸ்வாதிக்கும், சற்றும் எதிர்பாராமல் கைகொடுக்கும் சசிகுமாருக்கும் பூக்கும் காதல் அழகான கவிதை. சாதுவான தோற்றமும் காரமான பேச்சுமாய் வரும் புதுமுகம் நிவேதா “பளிச்’அறிமுகமாகி விடுகிறார். இவரது குடும்பப் பிரச்னையை சசிகுமார் சிம்பிளாகத் தீர்த்து வைப்பது யதார்த்தமான ஹீரோயிசம். கிராமத்தில் ஆட்டுக்கிடை போடும் முரட்டுப்பெண் கேரக்டரில் வசுந்தரா முத்திரை பதித்திருக்கிறார்.
கஞ்சா கருப்பு, பரோட்டா புகழ் சூரி செய்யும் அலப்பரைகள் இலக்கு தவறாத காமெடி. சசி அண்ட் கோ குடிபோகும் அந்த அபார்ட்மெண்ட் தனது விஷூவல் அழகாலும், கேரக்டர்களாலும் சுவாரஸ்யமான கதைக்களமாகி விடுகிறது. சொத்துக்காக சசிகுமார் சித்தி, கொடுமைக்கு உள்ளாகும் ஃப்ளாஷ்பேக் கதையில் எக்ஸ்ட்ரா லக்கேஜின் கனம், மனநல மருத்துவமனைக் காட்சிகள் கலகலப்பான கதைக்கு சீரியஸ் கலர் தரும் முயற்சியாகவே தெரிகிறது.
ஆக்ரோஷம் கொப்பளிக்கும் காட்சிகளில் மட்டும் சுந்தர்.சி.பாபுவின் இசை கவனிக்க வைக்கிறது. கிராமத்துக் களத்தில் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் வைக்கும் ஒவ்வொரு ஷாட்டும் அழகு. முதல் பாதியில் ரசிகர்களைக் கட்டிப்போடும் இயக்குநர் சமுத்திரக்கனி, இரண்டாம் பாதியில் தடுமாறியிருக்கிறார்.
----------------------------------------------------
கல்கி விமர்சனம்
அவன் வாழ்க்கையில கையை ஊனி, கர்ணம் பாஞ்சவண்டா இப்படி ஒரு பழமொழி கிராமத்து பக்கம் இப்போதும் உண்டு. சொந்தங்கள் உதறி உதாசீனப்படுத்தினாலும் தன்னம்பிக்கையை ஊன்றிக்கொண்டு எழுந்து வாழ்க்கையில் விஸ்வரூபம் எடுத்து சாதிப்பவர்களை தான் மேற்கண்டவாறு சொல்வார்கள். அப்படிப்பட்ட எல்லோரும் போராளிகள் தான் என்கிறது சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிக்குமார் தயாரித்திருக்கும் போராளி படம்.
சொந்தங்களால் வஞ்சிக்கப்பட்ட சசிக்குமார் அவ்வப்போது மனநிலை பிறழ்ந்து விடும் அல்லாரி நரேஷ், சொந்தங்களற்ற ஸ்வாதி மூவரையும் தன்னம்பிக்கை சரடு இணைக்க ... கதையின் பர்ஸ்ட் ஹாப் களைக்கட்டுகிறது. அபார்ட்மெண்டை கேரக்டராக்கியதில் இயக்குனர் சமுத்திரக்கனியின் புத்திசாலித்தனம் பளிச் பளிச்.
சசிக்குமார் - ஸ்வாதியின் காதல் விபத்தில் பூக்கும் சிலு சிலு தென்றல். எனக்கு சிலோன் பரோட்டா வேணும் என்று ஸ்வாதி அடம் பிடிக்க எங்களுக்கு சிலோனையே புடிக்காது. இதுல சிலோன் பரோட்டா வேறா? என்று சசிக்குமார் அடிக்கும் பஞ்ச்-சில் வலி மறந்து சிரிக்கிறான் தமிழன் (ரசிகன்). புலி என்ற பெயரோடு நகைகடை வாசலில் புலி வேஷம் போட்டு வேலை பார்க்கும் கஞ்சா கருப்பு. என்ன வாழ்க்கை ஒரே கசப்பா இருக்கு என்று சொல்லும்போது அலப்பறையையும் தாண்டி நடிப்பு மிளிர்கிறது. ஆட்டுக்கிடைபோடும் பெண்ணாக வசுந்த்ராவின் பாத்திரம் அதி உக்கிரம். பத்து நிமிடம் வந்தாலும் பச்செக் என்று மனசில் பதிகிறார்.
முதல் பாதி முழுக்க கலகலப்பும், சிலுசிலுப்புமாக போகும் கதையில் இரண்டாம்பாதியில் கசகசப்பு அதிகம். தோளைத் தொடும் முடி வளர்த்து ஆக்ரோஷமாக சசிக்குமார் திரிந்தாலும், முதல்பாதி சசிக்குமாரில் தான் வசீகரம். பரோட்டா சூரியின் காமெடியால் செகண்ட் ஹாப்பில் கொஞ்சம் ரிலீப். சித்தி கொடுமையை சொல்லும் சசிக்குமார் ப்ளாஷ்பேக் படத்துக்கு வேகத்தடை. சுந்தர் சி. பாபுவின் இசையில் பின்னணிப் பாடல்கள் இரண்டும் சுமார் ரகிம் தான். எஸ்.ஆர். கதிரின் கேமராவில் எல்லை மீறாத இயல்பு. படத்தின் முதல் பாதியில் நிமிர்ந்து உட்காரும் ரசிகன். பின்பாதி தொய்ந்து போய் தான் வெளியே வருகிறார்.
போராளி - கடவுள் பாதி: மிருகம் பாதி.