பல்லு படாம பாத்துக்க,Pallu Padama Paathuka
Advertisement
1

விமர்சனம்

Advertisement

(18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்)

தயாரிப்பு - மேஜிக் ரேய்ஸ்
இயக்கம் - விஜய் வரதராஜ்
இசை - பாலமுரளி பாலு
நடிப்பு - அட்டகத்தி தினேஷ், சஞ்சிதா ஷெட்டி
வெளியான தேதி - 3 மார்ச் 2023
நேரம் - 2 மணி நேரம் 2 நிமிடம்
ரேட்டிங் - 1/5

''த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து,' போன்ற இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட, நாலாம்தரமான படங்களின் வரிசையில் இணைந்துள்ள மற்றொரு படம் இது.

இன்றைய இளம் ரசிகர்கள் இப்படிப்பட்ட படங்களையும் ரசிப்பார்கள் என தப்புக்கணக்கு போட்டு தப்புத்தப்பாக எடுக்கப்பட்டிருக்கும் படம். இரட்டை அர்த்த வசனங்கள் போதும், கதை எதுவும் தேவையில்லை என காட்டுக்குள் ஜாம்பிகள் என கம்பி கட்டி கதை என்ற ஒன்றை எழுதியிருக்கிறார் இயக்குனர் விஜய் வரதராஜ்.

குஞ்சிதண்ணி காடு என்ற காட்டுப்பகுதி ஒன்றில் ஜாம்பிகள் இருப்பதாகவும், அந்தப் பகுதியில் தற்கொலை அதிகம் நடப்பதாகவும் ஒரு கதை இருக்கிறது. அந்த இடத்திற்குத் தற்கொலை செய்து கொள்ள அட்டகத்தி தினேஷ், லிங்கா, சாய் தீனா, ஜகன் உள்ளிட்ட சிலர் தனித் தனியே செல்கிறார்கள். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு திடீரென நண்பர்களாகிறார்கள். அந்தக் காட்டுக்குள் என்ன இருக்கிறது என பார்த்துவிடலாம் எனச் செல்கிறார்கள். ஜாம்பிகளிடம் சிக்கும் அவர்களை சஞ்சிதா ஷெட்டி காப்பாற்றுகிறார். ஆளுக்கு ஒரு பிளாஷ்பேக் சொல்லி நம்மை போரடிக்க, கடைசியாக சஞ்சிதா சொல்லும் பிளாஷ்பேக் மூலம் கதை கிளைமாக்ஸ் நோக்கி நகர்கிறது. அதில் ஹிட்லர் எல்லாம் வந்து நம் பொறுமையை நிறையவே சோதிக்கிறார்கள்.

படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை யார் வாயைத் திறந்து பேசினாலும், அதில் இரட்டை அர்த்த வசனம் ஒன்றாவது இருக்க வேண்டும் என யோசித்து வசனம் எழுதியிருக்கிறார் இயக்குனர். கடைசியில் ஹிட்லரையும் ஜாம்பி எனச் சொல்லி அவரையும் கிண்டலடித்து படத்தை முடித்திருக்கிறார்கள். எங்கோ ஆரம்பித்து எங்கெங்கோ சுற்றி ஒரு வழியாக முடிகிறது படம். ஓடிடியில் பார்க்கச் சொன்னால் கூட பத்து நிமிடத்தில் படத்தை மாற்றிவிடுவார்கள் ரசிகர்கள். அப்படி ஒரு படத்தை இரண்டு மணி நேரம் பொறுத்திருந்து பார்க்க தனி மன தைரியம் வேண்டும். நடித்திருக்கும் அனைவருமே அவரவர் இஷ்டத்திற்கு நடித்திருப்பதாகத்தான் தெரிகிறது. இறுக்கமான ஆடையுடன் மட்டுமே வருகிறார் சஞ்சிதா ஷெட்டி. எதையோ சொல்லி ஏமாற்றி அட்டகத்தி தினேஷை நடிக்க வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. ஜெகன் பேச்சில் மட்டுமல்ல, உடல் மொழியிலும் 'ஒரு மாதிரி' நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமா ஒரு அடி முன்னேறினால் இது போன்ற படங்கள் வந்து பத்து அடி பின்னுக்கு இழுத்துவிடும். இது போன்ற படங்கள் தமிழ் சினிமா மீது பல்லு படாம பாத்துக்க வேண்டியது ரசிகர்களின் பொறுப்பு.

பல்லு படாம பாத்துக்க - பசங்க கண்ணுல படாம பாத்துக்கணும்…

 

பட குழுவினர்

பல்லு படாம பாத்துக்க

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓