2.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஸ்டார் மூவீஸ்
இயக்கம் - வெற்றிச்செல்வன்
இசை - ரஞ்சன் துரைராஜ்
நடிப்பு - பிரசாந்த், பிரபு, சஞ்சிதா ஷெட்டி மற்றும் பலர்
வெளியான தேதி - 14 டிசம்பர் 2018
நேரம் - 2 மணி நேரம் 8 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

2007ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த ஜானி கட்டார் படத்தின் ரீமேக் தான் ஜானி.

அறிமுக இயக்குனர் வெற்றி செல்வன் ஒரு பரபரப்பான படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார். அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு திரைக்கதையில் இருக்கிறது. நண்பர்களிடமிருந்தே பணத்தைத் திருட முயலும் நாயகனின் ஒரு பரபரப்பான த்ரில்லர் கதை. ஆனால் மேக்கிங்கில் பிரம்மாண்டம் காட்டாமல் சாதாரணமாகவே எடுத்திருக்கிறார் இயக்குனர். பிரசாந்தின் வீடு, ஆனந்தராஜின் கிளப் ஆகிய இடங்களில்தான் அதிகமான காட்சிகள் நகர்கிறது.

பிரசாந்த், பிரபு, ஆனந்தராஜ், அஷூ தோஷ் ராணா, ஆத்மா உள்ளிட்டோர் அடங்கிய 5 பேர் பிசினஸ் பார்ட்னர்கள். கிளப் ஒன்றை நடத்திக் கொண்டு 'இல்லீகல்' வேலைகளையும் செய்பவர்கள். கொச்சியில் பிடிபட்ட 5 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை 2.5 கோடிக்கு தருவதாகச் சொல்கிறார் போலீஸ் அதிகாரியான சாயாஜி ஷிண்டே. அவரும் பிரபுவும் நண்பர்கள். 5 பேரும் ஆளுக்கு 50 லட்சம் போட்டு ஆத்மாவிடம் பணத்தை கொடுத்தனுப்புகிறார்கள். ரயிலில் கொச்சிக்குப் பயணமாகிறார் ஆத்மா. அந்தப் பணத்தை மற்றவர்களுக்குத் தெரியாமல் கைப்பற்ற நினைக்கிறார் பிரசாந்த். அதை திட்டமிட்டபடி எடுக்கிறாரா இல்லையா என்பது தான் படத்தின் மீதிக் கதை.

பிரசாந்த் 20 வருடங்களுக்கு முன்பு பார்ப்பதற்கு எப்படி இருந்தோரோ இப்போதும் அப்படியே இருக்கிறார். நெகட்டிவ் ஹீரோ கதாபாத்திரத்தில் கூடவே இருக்கும் பார்ட்னர்களை ஏமாற்றும் இளைஞன். காதலி சஞ்சிதா ஷெட்டியுடன் சந்தோஷமாக வாழ்வதற்காக அந்தப் பணத்தைக் கொள்ளை அடிக்கிறார். ஹீரோயிசமான கதாபாத்திரம் இல்லை என்றாலும், எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் முத்திரை பதிக்கிறார் பிரசாந்த்.

மிதமான கவர்ச்சியுடன் பிரசாந்தைக் காதலிக்கிறார் சஞ்சிதா. அவருக்கென குறைவான அளவில் ஆடைகளை வடிவமைத்திருக்கிறார்கள். பிரசாந்துடனான நெருக்கமான நடிப்பில் ரசிகர்களை சஞ்சலப்படுத்துவார் சஞ்சிதா.

பிசினஸ் பார்ட்னர்களுக்கிடையில் பிரபு தான் தலைமை வகிக்கிறார். ஆனால், அவரும் இடைவேளைக்கு முன்பே கொல்லப்பட, பின்னர் ஆனந்தராஜ், அஷுதாஷ் ரானா முக்கியத்துவம் பெறுகிறார்கள்.

படத்தில் நகைச்சுவை இல்லை, படம் ஆரம்பம் முதல் கடைசி வரை சீரியசாகவே நகர்கிறது. படத்தில் பாடல்களும் இல்லை. ரஞ்சன் துரைராஜ் பின்னணி இசை அமைத்திருக்கிறார். எம்வி பன்னீர் செல்வம் அரங்கக் காட்சிகளை தனி கவனம் எடுத்து படமாக்கியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் 90களில் காதல் படங்களில் நடித்து தனக்கென தனி மார்க்கெட்டை அப்போது வைத்திருந்தவர் பிரசாந்த். இன்னமும் அவர் காதல் படங்களில் நடிப்பதற்கான இளமைத் துடிப்பு அவரிடம் இருக்கிறது. 'ஜீன்ஸ், ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு, பார்த்தேன் ரசித்தேன்' மாதிரியான காதல் படங்களில் இப்போதும் நடித்து ரசிகர்களை மீண்டும் தன் பக்கம் திருப்ப முயற்சிக்கலாம்.

ஜானி - பார்ட்னர்கள் ஜாக்கிரதை

 

ஜானி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ஜானி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

பிரஷாந்த்

நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான தியாகராஜனின் மகன் பிரஷாந்த். 1973ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி பிறந்த பிரஷாந்த், அப்பாவை போலவே சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையோடு, வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து செம்பருத்தி, வண்ண வண்ண பூக்கள், செந்தமிழ் செல்வன், திருடா திருடா, ஜீன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். 1990-2000 ஆண்டுகளின் கல்லூரி பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்த பிரஷாந்த் பொன்னர் சங்கர் என்ற சரித்திர படத்திலும் நடித்தும் அசத்தினார். 2005ம் ஆண்டு கிரகலெட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்தவர், பின்னர் அவருடன் ஏற்பட்ட மனகசப்பால் அவரை விவாகரத்து செய்தார்.

மேலும் விமர்சனம் ↓