தினமலர் விமர்சனம்
அல்லு அர்ஜூன் நடித்து ஆந்திராவில், கொஞ்ச காலம் முன் சக்கைப்போடு போட்ட ஜுலாய் தெலுங்கு படத்தின் ரீ-மேக் உரிமையை வாங்கி, தமிழில் சாகசமாக தன் மகன் பிரஷாந்துக்கு பிரகாசம் ஏற்படுத்தி தர முயன்றிருக்கிறார் மம்பட்டியான் தியாகராஜன்.
'சாகசம் படக்கதைப்படி, டியூசன் ஆசிரியர் நாசர் - துளசி தம்பதியினரின் வேலையில்லா வாரிசு பிரஷாந்த். கரித்துக் கொட்டும் அப்பாவிடம் பத்தாயிரம் பணத்தை இரண்டு மணி நேரத்தில் ஒரு லட்சம் ஆக்கி காட்டுகிறேன் என வாங்கிக் கொண்டு போய் அதை கிரிக்கெட் சூதாட்டத்தில் போட்டு-விட்டு, போலீஸ் கையில் வகையாக சிக்கும் பிரஷாந்த், அதே போலீஸ் உதவியுடன் 1500 கோடி பணத்தை பிரபல வங்கியில் இருந்து கடத்தும் ஒரு பலே கொள்ளை, கொலை கும்பலிடமிருந்து அந்த பணத்தை தன் உயிரை பணயம் வைத்து மீட்டு உரியவர்களிடம் சேர்பிக்கும் கதை தான் சாகசம் படத்தின் கரு, கதை, களம் எல்லாம்.
இந்த சாமான்யனின் வீர, தீர சாகசம் நிறைந்த ஆக்ஷ்ன் கதையுடன் நாயகி நர்கீஸ் பக்ரியுடனான பிரஷாந்தின் லவ், அப்பா நாசர், அம்மா துளசி உள்ளிட்டோருடனான சென்டிமெண்ட், தம்பி ராமைய்யா, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய் ஆகியோருடனான காமெடி எல்லாம் கலந்து ஜனரஞ்சக படமாக சாகசத்தை தரமுயன்றிருக்கின்றனர் திரைக்கதையாளர் மம்பட்டியானும், இயக்குனர் அருண்ராஜ் வர்மாவும்!"
அதில், பாதி சாகசம் ரசிகர்களுக்கு வெண்சாமரம் வீசும் விதமாகவும், மீதி அண்டாகாகசம்.... அபுகாகசம் ...திறந்திடு சீசே... காலத்து கதையாகவும் புணையப்பட்டிருப்பது சாகசத்தின் பலமா? பலவீனமா ..? தெரியவில்லை !
ஆனாலும், பிரஷாந்தின் நடிப்பில் இன்னமும் பழைய பவரும், பயரும் அப்படியே இருப்பது சாகசம் படத்திற்கு பெரும் பலம். ஆணழகனுகளுக்கே உரித்தான அஜானுபாகுவான உடல், வசீகரமுகம், வலிய வம்பு செய்பவர்களை தெம்பாய் எதிர்க்கும் தைரியம் என படம் முழுக்க வளைய வந்து லவ் ,ஆக் ஷன், காமெடி ,சென்டிமெண்ட் ...
என சகலத்திலும் நிறைய சாகசங்கள் செய்யும் ஹீரோ ஒரு சில இடங்களில் ஓவர் டோஸ் என்றாலும் அசத்தி, ஆறுதலளிக்கிறார்.
நாயிகி நர்கீஸ் பக்கிரி பலே கைகாரியாக தெரிகிறார். மாஜி உலக அழகி ஐஸ்வர்யாவில் தொடங்கி பிரஷாந்துடன் இதுவரைநடித்த நாயகியர் எல்லாம் சக்ஸஸ் ஹீரோயினாக இன்று வரை வலம் வருவது மாதிரி, சரியாக நர்கீஸ் முயற்சித்தார் என்றால் இந்த சாகசக்காரிக்கும் ஒருவல்லிய ரவுண்ட் நிச்சயம் உண்டு!
நாசர், சோனு சூட், தம்பி ராமைய்யா, எம் .எஸ் .பாஸ்கர், ஜான் விஜய், கோட்டா சீனிவாசராவ், ரியாஸ் கான், ரோபோ சங்கர், அபி சரவணன், துளசி, தேவதர்சினி, லீமா பாபு, மலேசியா அபிதா, நளினி, பெசன்ட் ரவி, சுவாமிநாதன், லண்டன் இந்து, பரமாஜி, சாய்பிரசாந்த், ஹேமா, கிருஷ்ண வம்சி, மிப்பு, எப் எம் சுரேஷ், ராஜேந்திரன் என எண்ணற்ற நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர் அதில் எக்குத்தப்பாய் ஜொலிப்பது வில்லன் சோனு சூட்டும் அவரது தலைவர் கோட்டா சீனிவாசராவ்வும் தான்.
பயம் இல்லாது, தைரியமா இருந்தா.. கேன்சர் பேஷன்ட் கூட பிழைச்சிப்பான், பயந்தா அல்சர் பேஷன்ட் கூட செத்துடுவான்... உள்ளிட்ட வசனங்கள், பிரஷாந்தின் அப்பா மம்பட்டியான் தியாகராஜனின் திறமையான திரைக்கதை, வசனத்திற்கு தக்கச்சான்று!
தமனின் இசையில் ஆக்குபாக்கு வெற்றிலை பாக்கு...., சாயாங்கு லா... பாடல்கள் இதம், இங்கிதம்! ஷாஜி குமாரின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளில் இடம் பிடிக்கும் வெளிநாட்டு லொகேஷன்கள் பிரமாதம்!
க்ளைமாக்ஸில், கோவை ஏர் போட்டில் இருந்து, தன் மருமகனாகப் போகும் பைலட் அபிசரவணனை தேவையே இல்லாமல் (காமெடி?) போலீஸ் தம்பி ராமைய்யாவும், பிரஷாந்தும் அடித்து உதைத்து, ஹெலிகாப்டரை கிளப்ப சொல்லி... அதில் சென்னை வருவது, வானத்தில் வட்டமடிக்கும் ஹெலிகாப்டரை கண்டபடி திருப்ப முடியாது... என பைலட் அபி சதாய்ப்பது, ரோட்டில் டிராபிக்கில் கட்டு, கட்டான பணத்துடன் ஓடும் கண்டெயினரை சைக்கிள் ஓட்டுவது மாதிரி யு டேர்னில் திருப்புவது... உள்ளிட்ட குறைகளை ஒதுக்கிவிட்டு, பதுக்கி விட்டுப் பார்த்தால், மம்பட்டியான் தியாகராஜனின் திரைக்கதை, வசனத்தில், தனக்கு சகல விதத்திலும் பொருந்தும் ஜூலாய் தெலுங்கு ரீ-மேக்கில், இயக்குனர் அருண்ராஜ் வர்மா இயக்கத்தில் பிரஷாந்த், உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார்... என்றே சொல்ல வேண்டும்.
தமிழ் திரை ரசிகர்கள் உரிய டிக்கெட் காசைத் தியேட்டரில் கொடுத்துப் பார்த்தால் சாகசம் - நிச்சயம் - சக்ஸஸ் ஆகும்!
ரசிகர்கள் அவ்வாறு செய்தால், சாகசம்- பிரஷாந்துக்கு அண்டாகாகசம்... அபு காகசம் அதிர்ஷ்டம்!