J பேபி,J Baby

J பேபி - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - நீலம் புரொடக்ஷன்ஸ், விஸ்டாஸ் மீடியா, நீலம் ஸ்டுடியோஸ்
இயக்கம் - சுரேஷ் மாரி
இசை - டோனி பிரிட்டோ
நடிப்பு - ஊர்வசி, தினேஷ், மாறன்
வெளியான தேதி - 8 மார்ச் 2024
நேரம் - 2 மணி நேரம் 25 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

தாய்ப்பாசக் கதைகள் தமிழ் சினிமாவில் எத்தனையோ வந்திருக்கின்றன. அம்மா என்றாலே அன்பு, என்பதை அழுத்தமாய் சொல்லி வந்திருக்கும் மற்றுமொரு படம் இது.

நிஜமாகவே நடந்த ஒரு சம்பவத்தை திரைப்படமாகக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சுரேஷ் மாரி. ஏழைக் குடும்பத்துப் பின்னணியில் அன்பான ஒரு அம்மாவைப் பற்றிய கதையை கண்கலங்க வைக்கும் விதத்தில் நெகிழ்வாக தந்திருக்கிறார்.

இரண்டு மகள்கள், மூன்று ஆண்கள் என ஐந்து பேருக்கு அம்மா ஊர்வசி. குடும்பத்தில் பிள்ளைகளுக்கு இடையே நடக்கும் சண்டையால் மனம் பேதலித்து என்னென்னமோ செய்கிறார். அதனால் பெரும் பிரச்சனை வருகிறது. இதனால், அனைவரும் பேசி ஊர்வசியை மனநல மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அங்கிருந்து வெளியேறி கோல்கட்டா சென்றுவிடுகிறார். அம்மா கோல்கட்டாவில் இருப்பது குடும்பத்தினருக்குத் தெரிய வர, மகன்கள் தினேஷ், மாறன் அம்மாவை அழைத்து வர கோல்கட்டா செல்கிறார்கள். அதன்பின் என்ன நடக்கிறது என்பது படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஊர்வசியின் அப்பழுக்கில்லாத தாய்ப் பாசம் தான் படத்தில் குறிப்பிட வேண்டிய ஒரு அம்சமாக உள்ளது. மனநலம் தவறியிருந்தாலும், தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்கிறேன் என அவர் சொல்லும் போது கலங்காதவர்களும் கலங்கிவிடுவார்கள். இடைவேளை வரை ஊர்வசி ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். இடைவேளைக்குப் பின் அவரது நடிப்பால் படம் மொத்தத்தையும் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அவரைத் தவிர பேபி கதாபாத்திரத்தில் வேறு யாரையும் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

அண்ணன் தம்பிகளான மாறன், தினேஷ் இருவரும் தான் அம்மாவை அழைத்து வர கோல்கட்டா செல்பவர்கள். இருவருமே ஒரு முக்கிய பிரச்சினயால் பேசிக் கொள்ளாமல் இருப்பவர்கள். அப்படிப்பட்டவர்கள் மொழி தெரியாத ஒரு ஊரில் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை கொஞ்சம் நகைச்சுவையுடன் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அப்பாத்திரமாகவே மாறி நடிப்பவர் தினேஷ். அவருக்கேயுரிய அந்த அப்பாவித்தனமான முகம் இந்தப் படத்திலும் அதிகம் கைகொடுத்திருக்கிறது. அம்மா மீதான பாசத்தைக் காட்டுவதிலும், பேசாமல் இருக்கும் அண்ணனை சமாளித்து பாசம் காட்டுவதிலும் நிறைவாக நடித்திருக்கிறார்.

கோல்கட்டாவில் தினேஷ், மாறனுக்கு உதவும் ஒரு தமிழராக ஜெயமூர்த்தி நடித்துள்ளார். நிஜத்திலும் இவர்தான் உதவி செய்பவராக இருந்துள்ளார். அவரையே படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார்கள். இவரைப் போன்ற நல்ல உள்ளங்கள் நிஜ வாழ்க்கையிலும் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு கதைக்குண்டான யதார்த்தத்தை அப்படியே படம் பிடித்துள்ளது. பாடல்களை விடவும் பின்னணி இசையில் டோனி பிரிட்டோ உணர்வைத் தந்துள்ளார். சில நெகிழ்வான பாடல்கள் படத்தில் இருந்திருக்க வேண்டும்.

இடைவேளை வரை கொஞ்சம் கலகலப்பாக நகர்கிறது படம். இடைவேளைக்குப் பின்பு நீளமான பிளாஷ்பேக் பொறுமையை சோதிக்கிறது. அக்காட்சிகளை இன்னும் குறைத்திருக்கலாம். கிளைமாக்ஸ் இப்படித்தான் போகும் என்பதை யூகிக்கவும் முடிகிறது. இருப்பினும் படத்தில் நடித்துள்ளவர்களின் யதார்த்த நடிப்பு அந்தக் குறைகளை சரி செய்கிறது.

J பேபி - பாசமழை பேபி…

 

பட குழுவினர்

J பேபி

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓