லப்பர் பந்து
விமர்சனம்
தயாரிப்பு - பிரின்ஸ் பிக்சர்ஸ்
இயக்கம் - தமிழரசன் பச்சமுத்து
இசை - ஷான் ரோல்டன்
நடிப்பு - அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ஸ்வாசிகா
வெளியான தேதி - 20 செப்டம்பர் 2024
நேரம் - 2 மணி நேரம் 26 நிமிடம்
ரேட்டிங் - 3.5/5
கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி ஒரு சில படங்கள் வந்துள்ளன. ஆனால், அந்த விளையாட்டுடன் குடும்பம், காதல், நட்பு ஆகியவற்றை அருமையாகக் கலந்து ரசிக்கும்படியான ஒரு படத்தைக் கொடுக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து.
கிரிக்கெட் பின்னணியைத் தவிர்த்துப் பார்த்தால் தனுஷ், பிரகாஷ்ராஜ் நடித்த 'திருவிளையாடல் ஆரம்பம்' படத்தின் கதை கொஞ்சம் ஞாபகப்படுத்திவிட்டுப் போகிறது. ஆனாலும், ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இடையேயான அந்த ஈகோ மோதல் சினிமாத்தனமில்லாமல் யதார்த்தமாக நகர்வதுதான் இந்தப் படத்தின் 'ஹை லைட்'.
ஊரில் அதிரடியான கிரிக்கெட் வீரராக இருப்பவர் அட்டகத்தி தினேஷ். இருபது வருடங்களுக்கும் மேலாக அவரது ஆட்டத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. காதல் திருமணம் செய்து, கல்யாண வயதில் உள்ள மகளுக்கு அப்பாவாக இருந்தாலும் வீட்டிற்குத் தெரியாமல் தான் கிரிக்கெட் விளையாடுவார். அவரது மகள் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியை காதலிப்பவர் வேறு ஊரைச் சேர்ந்த ஹரிஷ் கல்யாண். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் என்பதால் அவர்களது ஊர் அணியில் சிறு வயதிலேயே ஒரே ஆட்டத்துடன் விரட்டி அடிக்கப்பட்டவர். அதனால், எந்த ஊர் அணியிலும் விளையாடுபவர். ஒரு கிரிக்கெட் ஆடடத்தில் இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்படுகிறது. தான் காதலிக்கும் சஞ்சனாவின் அப்பாதான் தினேஷ் என்பது ஹரிஷுக்குத் தெரிய வர அதிர்ச்சி அடைகிறார். அதன்பின் ஹரிஷ், சஞ்சனா காதல் என்ன ஆனது, ஹரிஷ், தினேஷ் மோதல் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
தமிழ் சினிமாவில் சொல்லப்படாத பல யதார்த்த கதைகள் இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது இந்தப் படம். கிராமத்து கிரிக்கெட் போட்டிகள் ஒரு திருவிழா போல நடக்கும் என்பது மாநகரத்து கிரிக்கெட் பிரியர்களுக்கும், ரசிகர்களுக்கும் புது அனுபவத்தைக் கொடுக்கும் படம் இது. படத்தின் ஆரம்பத்தில் சாதி ஏற்றத்தாழ்வு காரணமா சிறு வயது ஹரிஷுக்கு விளையாடும் வாய்ப்பு மறுக்கப்படும் போது மற்றுமொரு சாதியப் படமா இது என யோசிக்க வைக்கிறது. ஆனால், அதை அடுத்து ஓரிரு காட்சிகளில் மட்டும் வசனங்களால் குறிப்பிட்டுவிட்டு அப்படியே 'எமோஷனல்' பக்கம் போய்விட்டார் இயக்குனர்.
தனது முதல் படத்திலிருந்தே துறுதுறுவென இருக்கும் கதாபாத்திரத்தில் என்ன பேசுகிறார் என்று கூட புரியாதபடி நடித்து வருபவர் அட்டகத்தி தினேஷ். இந்தப் படத்தில் நடுத்தர வயது அப்பா கதாபாத்திரத்தில் பொறுமையாகவும், பேசுவது புரியும்படியும் தெளிவாக அதே சமயம் யதார்த்தமாகவும் நடித்திருக்கிறார். வயதானலும் கிரிக்கெட்டில் உள்ள அதிரடி குறையவில்லை என்பதை அவர் அடித்து ஆடும் காட்சிகள் சிக்சர், சிக்சர் ஆக பறக்கிறது. ஒரு இடைவெளிக்குப் பிறகு தினேஷுக்கு திருப்பத்தைத் தரும் படம் இது.
சிட்டி இளைஞனாகவே பார்த்த ஹரிஷ் கல்யாணை கிராமத்து இளைஞனாகப் பார்ப்பது ஆச்சரியமாக உள்ளது. மாநகரத்தில் வளர்ந்தவர்களால் அவ்வளவு சீக்கிரத்தில் கிராமத்து இளைஞனாக மாறிவிட முடியாது. அதற்கென ஒரு உடல் மொழி, நடை, பேச்சு இருக்கும். இந்தப் படத்தில் 'அன்பு' கதாபாத்திரத்தில் தன்னை அப்படியே மாற்றிக் கொண்டிருக்கிறார் ஹரிஷ். ஹாட்ஸ் ஆப் ஹரிஷ்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு சில சிறிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மலையாள நடிகையான ஸ்வாசிகா. “வைகை, கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, சோக்காளி, பிரபா” ஆகிய படங்களில் நடித்தவர். மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தைப் பார்த்தபின் யார் இவர் என பலரும் கூகுள் செய்து பார்க்கும் அளவிற்கு நடித்திருக்கிறார். பொறுப்பான மனைவி, அம்மா, மருமகள் எப்படி இருப்பாரோ அப்படியே இருக்கிறார். இப்படத்திற்குப் பிறகு தமிழில் இவருக்கு வாய்ப்புகள் வரும்.
'வதந்தி' வெப் சீரிஸில் நடித்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இப்படம் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார். முதல் படத்திலேயே கதாபாத்திரத்திற்காக தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்டு பெயர் வாங்கிய நடிகைகளில் பட்டியலில் சஞ்சனாவும் இடம் பெற்றுவிடுவார். ஹரிஷுக்கும் இவருக்குமான யதார்த்தமான காதல் காட்சிகள், அதில் பார்வையாலேயே அதிகக் காதலைக் கடத்தும் சஞ்சனா அழகாக ஸ்கோர் செய்து விடுகிறார்.
ஹரிஷின் நண்பனாக பால சரவணன், தினேஷ் நண்பனாக ஜென்சன் திவாகர் தங்களது நண்பர்களுக்காகப் பரிந்து பேசி நட்பின் சிறப்பை உணர்த்துகிறார்கள். காளி வெங்கட் கதாபாத்திரம் குறைவான நேரம் வந்தாலும் வழக்கமான நிறைவான நடிப்பைத் தந்திருக்கிறார் அவர்.
ஷான் ரோல்டன் பின்னணி இசைக்கு படத்தில் நிறைய வேலை. உணர்வுபூர்வமான பல காட்சிகளை அவருக்குக் கொடுத்து இசையாலும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். பாடல்கள் கதையோடு கடந்து போகிறது. தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு மைதானம், வீடுகள், தெருக்கள் என ஒவ்வொரு இடத்திலும் நம்மையும் சேர்ந்து பயணிக்க வைக்கிறது.
திரைக்கதையில் சில காட்சிகளில் தொய்வு வந்தாலும், அடுத்த காட்சியிலேயே அதைச் சரி செய்திருக்கிறார் இயக்குனர். சினிமா என்பது ரசிகர்களை பொழுதுபோக்க வைக்கும் ஒரு கலை. படம் பார்க்க வரும் ரசிகர்களை ரசிக்க வைக்கும் நோக்கம் மட்டுமே அதிகம் இருக்க வேண்டும். கருத்து சொல்லும் காட்சிகள் ஒன்றிரண்டு இருந்தால் போதும் என்பதைப் புரிந்து படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தமிழரசன்.
லப்பர் பந்து - எல்லைக் கோட்டை கடந்து…
லப்பர் பந்து தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
லப்பர் பந்து
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்