Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

நிமிர்ந்து நில்

நிமிர்ந்து நில்,Nimirnthu nill
19 மார், 2014 - 16:34 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » நிமிர்ந்து நில்

தினமலர் விமர்சனம்


பி.சமுத்திரகனியின் இயக்கத்தில், சமூகபொறுப்புணர்வுடன் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் நிமிர்ந்து நில். பொதுவாக இதுமாதிரி சமூகத்திற்கு பாடம் சொல்லும் நற் கருத்துடைய திரைப்படங்கள், போதனையாக, சோதனையாக... போரடிக்கும்! ஆனால் பெரும் சாதனையாக சமுத்திரகனியின் நிமிர்ந்து நில் திரைப்படம், தியேட்டரில் சீட்டு நுனியில் நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து, ஆரம்பகாட்சி முதல் இறுதிகாட்சி வரை கண்கொட்டாமல் கை தட்டவைப்பது தான் ஹைலைட்!

கதைப்படி, அரவிந்த் சிவசாமி எனும் ஜெயம் ரவி, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப வளைந்து கொடுத்து வாழத்தெரியாமல் சட்டத்திட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டு, ஒரு பைசா லஞ்சம் கொடுக்காமல் வாழும் ஒரு தனியார் நிறுவன ஊழியர். ஒருநாள் அறை நண்பரும், அலுவலக நண்பருமான சூரி உடன் இல்லாமல் பைக்கில் வேலையாக கிளம்பும் ஜெயரம் ரவி, லைசன்ஸ், ஆர்.சி. புக், இன்சூரன்ஸ் உள்ளிட்ட எல்லா பேப்பர்களும் இருந்தும் டிராபிக் போலீஸ் எதிர்பார்க்கும் காந்தி தாள் தராததால் போலீஸ், கோர்ட், கேஸ் என ஏகத்துக்கும் அலைகழிக்கப்படுகிறார். டிராபிக் கான்ஸ்டபிளில் தொடங்கி புரோக்கர் வைத்து லஞ்சம் வாங்கும் நீதிபதி வரை எல்லோரையும் போட்டு உடைக்கும் அரவிந்த் சிவசாமி அதாங்க, ஜெயம் ரவி, இச்சயமத்தில் தன்னை லஞ்சம் தந்து காபந்து செய்த ஆரூயிர் நண்பர் சூரியையும், அவருக்கு ஐடியா தரும் (ஜெயம் ரவியை ஒரு தலையாக காதலித்த படி) அமலாபாலையும் கூட போட்டுக் கொடுக்க, படம் பார்க்கும் நமக்கே பகீர் என்கிறது.

அப்புறம்? அப்புறமென்ன? ஜெயம் ரவி அதிகார வர்க்கத்தால் சட்டத்திற்கு புறம்பாக செமையாக பந்தாடப்படுகிறார். குற்றுயிரும், கொலை உயிருமாக குப்பையில் கிடக்கும் ரவியை தேடிப்பிடித்து மருத்துவமனையில் சேர்த்து மெல்ல தேற்றுகின்றனர் சூரி, அமலாபால் மற்றும் கோர்ட்டில் ஜெயம் ரவியின் நேர்மை கண்டு ஈர்க்கப்பட்ட வக்கீல் சுப்பு பஞ்சு உள்ளிட்டோர். இவர்களது கனிவாலும், கவனிப்பாலும் விரைந்து தேறும் ரவி, மீண்டும் திமிருகிறார். ஆனால் இந்தமுறை சும்மா சட்டம் பேசிக் கொண்டிருக்காமல், மருத்துவத்துறை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, நீதித்துறை.. என சகலத்துறைகளிலும் இருக்கும் ஊழல் பெருச்சாளிகளை ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் அடையாளம் காட்டும் விதமாக புத்திசாலித்தனமாக களம் இறங்க திட்டமிடுகிறார் ரவி! இதில் நமக்கெதுக்கு வேண்டாத வேலை... என வெகுண்டெழும் அமலாபால், தான் ரவியின் நேர்மைகண்டு ஆறுமாத காலமாக ரவிக்கே தெரியாமல் ரவியை பின்தொடர்ந்து, அவரை காதலிக்கத் தொடங்கியவர் என்பதையும் மறந்து அரவிந்த் சிவசாமி அலைஸ் ஜெயம் ரவியை பிரிகிறார். ஜெயம் ரவி அதுப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் சூரி, வக்கீல் சுப்பு பஞ்சு, நேர்மையான ஏட்டு தம்பி ராமைய்யா, உண்மை டிவி. அபாரதீப்பந்தம் நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் மற்றும் நேர்மையான அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உதவியுடன் பல்வேறு துறைகளில் இருக்கும் ஊழல் பேர்வழிகள் 147 பேருக்கு உண்மை டி.வி. கோபிநாத் ஆப்பு வைக்கிறார். அதில் ரவியை அடித்து துவைத்த போலீஸ்காரர்களும் அடக்கம்!

பாதிக்கப்பட்ட 147 பேரும் சேர்ந்து ஒரு குழு அமைத்து 14.7 கோடி கொடுத்து, ஜெயம் ரவி சாயலிலேயே ஆந்திராவில் இருக்கும் மற்றொரு ஜெயம் ரவியை நரசிம்மரெட்டி எனும் பெயருடைய ரவியை அழைத்து வந்து, தங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை நமத்து போகச் செய்து தங்களது அரசு உத்தியோகத்தையும், சலுகைகளையும் தக்க வைத்துக் கொள்ள காய் நகர்த்துகின்றனர். இறுதியில் வென்றது ஆந்திர ஜெயம் ரவியும், அவரது பின்னணியில் இருக்கும் 147 ஊழல் பேர்வழிகளுமா? அல்லது தமிழக ரவியா.? அமலாபாலும் அவரது காதலும் என்னவாயிற்று...? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடையளிக்கிறது நிமிர்ந்து நில் படத்தின் மீதிக்கதை!

ஜெயம் ரவி, அரவிந்த் சிவசாமியாகவும், நரசிம்ம ரெட்டியாகவும் இருவேறு பரிமாணங்களில் பொளந்து கட்டியிருக்கிறார். அதிலும் அரவிந்த சிவசாமி ரவி, ஊழல் எதிர்ப்பாளராக அலட்டிக் கொள்ளாமல் நடித்து அசால்ட்டாக ஸ்கோர் செய்திருக்கிறார். ஆரம்பகாட்சிகளில் அநியாயங்களை கண்டு அவர் பொங்கும் காட்சிகளில் தியேட்டரே அதிர்கிறது. வளைந்து கொடுத்து போகத்தெரியாதவனை வாழத்தெரியாதவன் என சிரிப்பது தானே நம் இயல்பு, அப்படித்தான் சிரிக்கிறோம்... ஆரம்பகாட்சிகளில் ஜெயம் ரவியை பார்த்து, ஆனால் அதன்பின் அவர் எடுக்கு அவதாரங்களும், விஸ்வரூபங்களும் தான் நிமிர்ந்து நில் படத்தில் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும் விஷயங்கள்! வாவ், ஜெயம் ரவி வாயிலாக இயக்குநர் சமுத்திரகனி தெரிகிறார், என்ன துடிப்பு, என்ன நடிப்பு!

ஆந்திரா, ராஜமுந்திரி - நரசிம்ம ரெட்டியாக வரும் மற்றொரு ஜெயம் ரவியும், அவரது கன்னியர் புடை சூழ்ந்த ஆந்திர இருப்பிடமும் ஒருமாதிரி தெரிந்தாலும், அவரும் ஹீரோ தான் என க்ளைமாக்ஸில் நிரூபிக்கும் இடங்கள் சூப்பர்ப்! ஆனாலும் ஆதிபகவன் ஜெயம் ரவிகளின் மேனரிஸங்கள் இரண்டு ரவிகளிடமும் இந்தப்படத்திலும் இருப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்! (ஆனாலும் ஆதிபகவன் தோல்வியையும், நிமர்ந்து நில் வெற்றி ஜெயம் ரவிக்கு ஈடுகட்டிவிடும் என்பது சிறப்பு!)

உன்னை மாதிரி நேர்மையாக எல்லா சந்தர்ப்பத்திலும் என்னால் வாழமுடியாது... ஆனால், உன்கூட வாழமுடிவு செய்துவிட்டேன்... என ஜெயம்ரவியை உருகி உருகி காதலிக்கும் அமலாபால், ஒருகட்டத்தில் அதே நேர்மைக்காக அவரை பிரிவது சினிமாட்டிக்காக இருக்கிறது. ஆனால், அதேநேரம் ரவியுடன், அமலாபால் திரும்ப சேருவது அமலாவின் அப்பாவும், ஊழல் பேர்வழிகளில் ஒருவர் என்பது தெரிந்ததும் வீட்டில் போராடுவது அமலாவின் பாத்திரத்திற்கும், படத்திற்கும் வலு சேர்க்கின்றன!

சூரி, இப்போதெல்லாம் கடிப்பதில்லை... கலாய்க்கிறார், ஜமாய்க்கிறார் என்பது நிமிர்ந்து நில் படத்திற்கும் பலம்! கெஸ்ட் ரோலில் வரும் சரத்குமாரின் நேர்மை, இன்ஸ் இம்சை அனில் மேனன், டாக்டர் நமோ நாராயணன், ஆமாம்மா அய்யாசாமி எம்.பி. ஞானசம்பந்தம், ஜட்ஜ் - சித்ரா லெட்சுமணன், ஏட்டு - தம்பி ராமையா, இன்னொரு நாயகி ராகினி திவேதி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதனால் நிமிர்ந்து நில் படமும் பளிச்சிடுகிறது!

எம்.சுகுமார், எம்.ஜீவன் சகோதரர்களின் ஒளிப்பதிவு, ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை, ஏ.எல்.ரமேஷின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் சமுத்திரகனியின் இயக்கத்தில் நிமிர்ந்து நில் படம், பார்க்கும் ரசிகர்களையும் ஜெயம் ரவி மாதிரி லஞ்சம் கொடுப்பதில்லை... வாங்குவதில்லை... என உறுதி ஏற்க செய்வது தான் இப்படத்தின் இமாலய வெற்றி!

அரசியல்வாதிக்கு ஆயுள் 5 ஆண்டு தான், ஆனா அவங்களுக்கு தப்பா ரூட் போட்டு கொடுக்கும் அரசு அதிகாரிகளுக்கு 58 வயசு வரை அதிகாரம்! என்பது உள்ளிட்ட இன்னும் பல அனல் பறக்கும் வசனங்களில் நம்மை கவரும் சமுத்திரகனி, சரத்குமாரின் காரை பறக்கவிட்டு டி.வி. லைவ் ரிலே டிரையிலர் லாரியை மோத விடுவதும், ஜெயம் ரவிகளை தேவை இன்றி மோதவிடுவதையும் தவிர்த்திருந்தார் என்றால் நிமிர்ந்து நில் இன்னும் தில்லாக இருந்திருக்கும்! ஆனாலும், நிமிர்ந்து நில் - சமுத்திரகனியின் - தில் - ரசிகர்களின் நெஞ்சில்!------------------------------------------------------------------குமுதம் சினி விமர்சனம்

சமீபமாக சமூகத்தின் மீதான கோபத்தை, ஏக்கத்தை, அக்கறையை இது போல் கைதட்டும்படியாக எந்தப் படமும் சொன்னதில்லை. "ஆபத்து வரும்போது மட்டும்தான் விலங்குகள் கூட பயப்படும். ஆனா மனுஷன்தான் எதுக்கெடுத்தாலும் பயப்படறான். "பெண்ணைவிட ஆணை கடவுள் பலமானவனாக படைச்சதுக்கு காரணம், பெண்ணுக்கு அவன் பாதுகாப்பாக இருக்கணும்னுதான். பலவந்தப்படுத்த இல்ல - வசனம் எழுதிய சமுத்திரக்கனியை வலிக்கும் வரை பிடித்துக் கைகுலுக்கத் தோன்றுகிறது.


சிட்டிஸன், சிவப்பதிகாரம், அன்னியன் டைப் கதைதான். தர்மம், நியாயம் என்று வாழும் ஜெயம்ரவி, ஓட ஓட விரட்டப்படுகிறார். அதனால் கொதித்தெழுந்து, இல்லாத ஒருவனுக்காக பாஸ்போர்ட், ரேஷன் கார்டு முதல் எல்லாஅரசு அங்கீகாரங்களையும் வாங்கி, அதில் சம்பந்தப்பட்ட ஊழல்வாதிகள் 147 பேரின் முகத்திரையை தொலைக்காட்சி மூலம் தோலுரிக்க முயல்கிறர். விடுமா அதிகாரவர்க்கம்? என்ன நடந்தது என்பதுதான் கதை.


ஜெயம் ரவி நிமிர்ந்து நிற்கின்றார். அப்பாவியாக இருக்கும்போதும் சரி, திட்டம் போட்டு காய்களை நகர்த்தும்போதும் சரி மிடுக்கு. மாப்பிள்ளை பார்க்க வரும் பெண்ணை பேசியே டயர்டு ஆக்குவது வேடிக்கை.


அமலாபால் குறும்பு. பார்த்த பத்தே விநாடியில் சூரியுடனான மாம்ஸ், மச்சான் நட்பு க்யூட், ரவி காதலிக்காமல் விலகி விலகிப் போக, "உன்னை மாதிரி வாழறது கஷ்டம். அட்லீஸ்ட் உன் கூடவாவது வாழறேனே என்று சொல்வது கவிதை.


ஹீரோவுக்காக சட்டை கிழியும் பாத்திரம்தான் என்றாலும் வெறும் காமெடியோடு நில்லாமல் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் முன்னேறியிருக்கிறார் சூரி. அடுத்து புன்னகைக்க வைப்பவர் கு. ஞானசம்பந்தன்.


கோட் கோபிநாத், நிகழ்ச்சி நடத்துபவராகவே வந்து விறுவிறுப்பைக் கூட்டுகிறார். ஆனால் படம் முடிந்த பிறகும் பேசிக் கொண்டிருக்கிறார்!


அட்வகேட் ராஜா செந்தூர்பாண்டியனாக வரும் பஞ்சு சுப்பு, நியாயத்தின் பக்கம் இருந்து உதவுவது கம்பீரம்.


"காதல் நேர்கையில் பாடலில் ஜி.வி. பிரகாஷ் முத்திரை பதிக்கிறார். டுத்த பாடல்கள் படத்தின் வேகத்தை தள்ளாட வைக்கின்றன.

ஆந்திரத்து ரவி ஆக்ஷன், ஆட்டம் பாட்டம் எல்லாம் சரிதான். ஆனால் அவரைப் பார்த்தால் ஏதோ தப்பு பண்ணுபவர் போல காட்டிவிட்டு, கடைசியில் பெண்கள் ஆதரவு


அமைப்பு நடத்துவது போல் காட்டியிருப்பதும் க்ளைமாக்ஸில் டபக்கென்று அவர் பல்டி அடித்து மாறுவதும் நம்பும்படியாகவே இல்லை பாஸ்! திணறியிருப்பது தெரிகிறது.


ஹிஹி, அந்த ஆவக்காய் பொண்ணு யாருங்க?


கொஞ்ச நேரம் சரத். கடைசியில், சமுத்திரக்கனிக்கு ஒரு வேண்டுகோள்... நடிப்பதையெல்லாம் கொஞ்சம் மூட்டைகட்டி வைத்துவிட்டு, க. தி. வ இயக்கத்தில் மட்டும் ஈடுபடுங்களேன்!


நிமிர்ந்து நில் - ராஜகம்பீரம்!


குமுதம் ரேட்டிங் - நன்றுவாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in