ராஜாகிளி
விமர்சனம்
தயாரிப்பு - வி அவுஸ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - உமாபதி ராமையா
இசை - தம்பி ராமையா
நடிப்பு - தம்பி ராமையா, சமுத்திரக்கனி, ஸ்வேதா
வெளியான தேதி - 27 டிசம்பர் 2024
நேரம் - 2 மணி நேரம் 9 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
தமிழகத்தில் ஒரு காலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல தொழிலதிபரின் கொலை வழக்கை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் உண்மை, கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் சென்டிமென்ட் கலந்து எடுக்கப்பட்டுள்ள படம்.
பிரபலமான தொழிலபதிர் முருகப்ப சென்றாயர். பல்வேறு தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வருபவர், படிக்காதவர். கட்டிய மனைவி இருக்க, இரண்டாவதாக வள்ளிமலர் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். மூன்றாவதாக கல்லூரி மாணவி விசாகா என்ற பெண்ணை ஆசை நாயகியாக வைத்துக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் விசாகாவுக்கு ஆல்பர்ட் என்பவர் மீது காதல் வந்து திருமணம் செய்து கொள்கிறார். ஆனால், ஆல்பர்ட் விசாகாவைக் கொடுமை செய்கிறார். தனக்கு உதவுமாறு முருகப்ப சென்றாயரிடம் வந்து உதவி கேட்கிறார் விசாகா. தனது பாதுகாவலர்களை விட்டு ஆல்பர்ட்டை கொலை செய்யச் சொல்கிறார் முருகப்பா. அவர்களும் கொலை செய்ய, முருகப்பா தான் கொலைக்குக் காரணம் என அவரையும், அவரது பாதுகாவலர்களையும் கைது செய்கிறார்கள். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
தொழிலதிபர் முருகப்பா சென்றாயர் கதாபாத்திரத்தில் தம்பி ராமையா. வெள்ளை வேட்டி, சட்டை பாசமான பேச்சு என தொழிலதிபர் கதாபாத்திரத்தில் பொருத்தமாகவே நடித்துள்ளார். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அந்தத் தொழிலதிபரின் தோற்றத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்துள்ளார் தம்பி ராமையா. கட்டிய மனைவி இருந்தாலும் தான் ஆசைப்படும் பெண்களை அப்படியே பாசமாகப் பேசி 'செட்' செய்து கொள்வதில் தேர்ந்தவராக இருக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்டு தெருத் தெருவாக சுற்றித் திரியும் போது அவர் மீது பரிதாபம் வரும் அளவிற்கு கலங்க வைக்கிறார். மகன் நடிக்க அப்பா இயக்கிய சில இரட்டை அர்த்த வசனப் படங்களைத்தான் பார்த்திருக்கிறோம். முதல் முறையாக அப்பா அப்படி நடிக்க அவரை மகன் இயக்கியுள்ள படத்தை இப்போதுதான் பார்க்கிறோம். இந்தப் படத்தை இயக்கியுள்ளவர் தம்பி ராமையா மகன் உமாபதி ராமையா.
தெருவில் மனலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரியும் தம்பி ராமையாவை அழைத்து வந்து அவருக்கு அடைக்கலம் கொடுக்கும் அன்பு இல்லத்தை நடத்துபவராக சமுத்திரக்கனி. வழக்கம் போல கிளைமாக்சில் அன்பாக அட்வைஸ் செய்கிறார்.
படத்தில் தம்பி ராமையாவின் முதல் இரண்டு மனைவியருக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. மூன்றாவதாக அவர் வைத்துக் கொள்ளும் கல்லூரி மாணவி விசாகா கதாபாத்திரத்திற்குத்தான் முக்கியத்துவம் உள்ளது. அந்தக் கதாபாத்திரத்தில் ஸ்வேதா நடித்துள்ளார். இளமை பொங்கும் கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்திருக்கிறார். இவரது அம்மாவாக ரேஷ்மா, உதவி கமிஷனராக அருள்தாஸ், தம்பி ராமையாவுக்கு ஆலோசனை சொல்லும் சாமியாராக பழ கருப்பையா, பள்ளி கரஸ்பான்டன்ட் ஆக ஆடுகளம் நரேன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். தம்பி ராமையா சொல்வதை கேள்வி கேட்காமல் நிறைவேற்றும் பாதுகாவலர்களாக ஆன்ட்ரூஸ், மாலிக் நடித்திருக்கிறார்கள். ஆசை காட்டி மோசம் செய்யும் ஆல்பர்ட் கதாபாத்திரத்தில் பின்னணிப் பாடகர் கிரிஷ்.
தம்பி ராமையாவே இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இரண்டு பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன. கேதார்நாத், கோபிநாத் ஆகியோர் படத்தின் கதைக்கேற்ற ஒளிப்பதிவைத் தந்துள்ளார்கள்.
படத்தின் முதல் பாதி இரட்டை அர்த்த வசனங்கள், கொஞ்சம் அப்படி இப்படியான காட்சிகள் நிறைந்துள்ளது. இடைவேளைக்குப் பின் முருகப்பா சென்றாயர் கதாபாத்திரம் மீது அனுதாபம் வரும் அளவிற்குக் காட்சிகளை அமைத்துள்ளார்கள்.
தமிழகத்தையே பரபரப்பாக்கிய ஒரு தொழிலதிபர் சம்பந்தப்பட்ட கொலை சம்பவம், அதை பி அன்ட் சி படமாக எடுத்திருக்கிறார்கள்.
ராஜாகிளி - ராணிகிளிகளின் சம்பவம்..