Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

நாடோடிகள்

நாடோடிகள்,
  • நாடோடிகள்
  • சசிகுமார்
  • அனன்யா
  • இயக்குனர்: சமுத்திரக்கனி
12 ஜூலை, 2009 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » நாடோடிகள்


தினமலர் விமர்சனம்


கதாநாயகர் சசிகுமாருக்கும், அவரது நட்பு வட்டமும் சிக்கலான காதலையும், காதலர்களையும் சேர்த்து வைக்க உயிரையும் கொடுக்கும் ஜாதியை சேர்ந்த ரகம்! அதே நேரம், தாங்கள் சேர்த்து ‌வைத்த காதலர்கள் தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கலைந்தோ, பிரிந்தோ போனால் அவர்களது உயிரை எடுக்கவும் தயங்காதவர்கள் இந்த நண்பர்கள் என்பதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லி வந்திருக்கும் படம்தான் நா‌டோடிகள்...!

கதைப்படி, நாயகர் சசிகுமார், அவரது நண்பர்கள் விஜய் (சென்னை - 28), பரணி மூவரும் ஜாலி பேர்வழிகள். நாயகர் சசிக்குமாருக்கும், அவரது மாமன் மகள் அனன்யாவிற்கும் இடையில் காதல். ஆனால் வரலாறு டிகிரி - கோல்டு மெடலிஸ்ட்டான சசி, வெட்டியாக சுற்றிக் கொண்டிருப்பது பிடிக்காமல் அவர் அரசாங்க வேலைக்கு போனால்தான் தன் மகளை கல்யாணம் கட்டித் தருவேன் என கண்டிஷன் போடுகிறார் மாமா. இவர்களது காதல் ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம் சசியின் நண்பர் விஜய்க்கும் சசியின் தங்கை அபிநயாவிற்கும் இடையில் காதல். இந்த காதலை எல்லாம் அப்படி அப்படியே விட்டு விட்டு தங்கள் நண்பனின் காதலுக்காக நாமக்கல் வரும் நண்பர்கள் கோஷ்டி, நண்பன் ரங்காவின் காதலியை கடத்தி காதலியின் அப்பாவான முக்கிய புள்ளி ஞானவேலுடன் மோதுகின்றனர். அப்புறம்...? அப்புறமென்ன..? இவர்களது காதல் கரை சேர்ந்ததா? நண்பனின் காதல் கல்யாணத்தில் முடிந்ததா? அதன் பின் என்ன ஆனது? உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கு சினிமாத்தனம் இல்லாமல் சீரியஸாக பதில் சொல்கிறது நாடோடிகளின் மீதிக்கதை!

ராத்திரி ஆனால் தன் வீட்டு மொட்டை மாடியில் நண்பர்களுடன் புல் மப்பு, போலீஸ் செலக்ஷனில் தன்னை விட உயரமானவர்களை கண்டு மிரளும் நடிப்பு, தான் படித்த வரலாற்று பட்டத்தின் பெருமை கூறும் துடிப்பு... ஆரம்ப காட்சிகளிலேயே நம்முடன் ஐக்கியமாகி விடும் சசிக்குமார். அடுத்தடுத்த காட்சிகளில் முன்னணி நடிகர்களின் வரிசையில் தன்னையும் அறியாமல் தாவி, தனக்கொரு இடம்பிடித்து விடுகிறார் என்றால் மிகையல்ல! நண்பனின் காதலுக்காக நெற்றி பொட்டில் அரிவாள் வெட்டை வாங்கிக் கொள்வதிலும் சரி, தன் காதலியும் முறைப்பெண்ணுமான அனன்யா தனக்கில்லை.. என்று ஆன பின்பும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு மாமா.. என அனன்யாவின் அப்பாவிடம் எப்போதும்போல் விளையாட்டாக டயலாக் விட்டு வரும் இடத்திலும் சரி... பிரேம் - டூ - பிரேம் சசி பிரமாதம்! நாங்களும் அவருக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல.. என கோயில் பட்டை சாதத்திற்காக தனது பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பறிகொடுத்து, பின் நண்பனின் நண்பனது காதையும் பறிகொடுக்கும் பரணியும் சரி, கம்ப்யூட்டர் சென்டர் வைக்கும் கனவுடன் நண்பனின் தங்கையை நண்பருக்கு தெரிந்தும், தெரியாமலும் காதலித்து பின், நண்பனின் நண்பனது காதலுக்காக ஒரு காலை இழக்கும் விஜய்யும் சரி., சசிகுமார் மாதிரியே சபாஷ் வாங்கி விடுகின்றனர்.

சதா சர்வகாலமும் எதையாவது வாயில் போட்டு மென்றபடி திரியும் புதுமுக நாயகி அனன்யா, நடிப்பையும் அனாயாசமாக மென்று தின்று ஜெயித்திருக்கிறார். சசியின் தங்கையாகவும், விஜய்யின் காதலியாகவும் வலம் வரும் அபிநயா அனன்யாவையை சில இடங்களில் தூக்கி சாப்பிட்டு விடுகிறார். அம்மணி அபிநயா நிஜத்தில் வாய் பேச முடியாதவராம். நம்ப முடியவில்லை!!!

இவர்களைப் போன்றே, நண்பனின் நாமக்கல் காதலியின் அப்பாவாக, பெரும்புள்ளியாக வரும் ஞானவேல் ஆ... ஊ... என்றால் அடுத்த நிமிடமே வினயல் பேனரில் சிரிக்கும் அரசியல்வாதி நமோ நாராயணன், நண்பர்களிடம் சிக்கி சின்னா பின்னாமாகும் பரோட்டா மாஸ்டர் கஞ்சா கருப்பு உள்ளிட்ட அனைவரும் பாத்திரத்திற்கேற்ற பக்கா தேர்வு!

நாமக்கல் காதலியை கரம்பிடிக்க நண்பனின் உதவியை நாடி வரும் நாகர்கோயில் இளைஞனின் பேச்சிலம் சரி, அவரது மாஜி எம்.பி., அம்மாவின் பேச்சிலும் சரி... நாகர்கோயில் வாடை. நாமக்கல் காதலியின் அப்பா ஞானவேலின் பேச்சில் இருந்த கொங்கு தமிழ் அளவில்கூட இல்லாமல் போனது வருத்தம். அதேபோன்று ஒரு மாஜி எம்.பி.,யும்,  மிகப்பெரும் தொழில் அதிபரும் தங்கள் பிள்ளைகளின் காதலை இத்தனை தூரம் எதிர்க்க என்ன காரணம் என்பதும் புரியாத புதிராக உள்ளது.

மற்றபடி சுந்தர்.சி. பாபுவின் இசையும் பாடல்களும், கதிரின் ஒளிப்பதிவும் சமுத்திரகனியின் சவாலான கதைக்கும், இயக்கத்திற்கும் பக்கபலமாக நின்று படத்தை பல மடங்கு தூக்கி நிறுத்துகின்றன!

நா‌டோடிகள் திரையரங்கிலும், ரசிகர்கள் மன அரங்கிலும் வெற்றிகரமாக ஓடிட வேண்டி நம் முன்னோடிகள்.

நாடோடிகள் : நாம் கடைபிடிக்க வேண்டியவர்கள் அல்ல... கண்டுகளிக்க வேண்டிய முன்னோடிகள்!!!




------------------------------

குமுதம் விமர்சனம்


உன் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே! டைட்டில் கார்டு முதல் கடைசி சீன் வரை நட்புக்கு நம்பிக்கை கொடி பிடித்திருக்கிறார்கள். சுப்ரமணியபுரம் சசிகுமாரும் நெறஞ்ச மனசு சமுத்திரக்கனியும்!

இதெல்லாம் நமக்கு அசால்ட்டு மச்சி... என்கிற மாதிரியான அலட்சியமும் நம்பி வந்தவனுக்கு பிரச்னை என்றால் வரிந்து கட்டுகிற கிராமத்து கரிசனமும் சசிகுமாருக்கு அழகாய் கை கூடுகிறது.

முறைப்பெண்ணை திருமணம் செய்து தர நிபந்தனை போடுகிற மாமாவிடம் பதிலுக்கு உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு மாமா... என பிரேம்ஜி ஸ்டைலில் சசி அடிக்கும் டயலாக் அக்மார்க் மதுரை குசும்பு.

அத்தானின் வறட்டு தாடியை வலிக்காமல் பிய்த்து வாயில் போட்டுக்கொள்ளும் அனன்யாவின் காதல் பாவனைகள் ச்சோ ஸ்வீட். கம்ப்யூட்டர் சென்டர் நடத்துகிற கேரக்டருக்கு விஜய் சரியான பொருத்தமென்றாலும், காதலி அபிநயாவை சர்வ சாதாரணமாக மடிப்பது நம்பும்படி இல்லீங்கண்ணா. எப்போதும் நண்பர் கூட்டத்தில் கலகலப்புக்கு கேரன்ட்டி தருகிற வெள்ளந்தி பையனாக கல்லூரி பரணி கலக்கியிருக்கிறார்.

காதல் திருமணத்துக்கான ஆள் கடத்தல் வைபவத்தில் மொக்கை பிகருக்காகல்லாம் என்னால ரிஸ்க் எடுக்க முடியாதுடா... என அலம்பல் செய்து காமெடி, சரவெடி..! தடதட தறி ச்சத்தத்துடன் காட்டப்படுகிற பரணியின் குடும்ப பின்னணி உள்ளிட்ட விஷயங்கள் கதையை உண்மை சம்பவமாக உயர்த்துகிறது.

திடீர் பரபரப்பையோ, சஸ்பென்ஸையோ நம்பாமல் காதலுக்காக ஒரு கடத்தல், அவசர கல்யாணம் என மெதுவாக ஆரம்பித்து வேகம் கூட்டியிருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்.

காதல் கல்யாணம் நடத்தி வைக்கிற நண்பர்களுக்கு ஏற்படும் இழப்புகளை காட்டியிருப்பதும் தமிழுக்கு புதுசுதான்.

விஜய்க்கு அப்பாவாக வரும் அந்த நடுத்தர வயது நபர், விளம்பர விரும்பியாக வந்து கிச்சுகிச்சு மூட்டும் நமோ நாராயணன் என சின்ன சின்ன கேரக்டர்கள் நம்மை வசீகரிக்கின்றன. இந்த மண் வாசனை கதைக்கு துளியும் பொருத்தமில்லாமல் பெண் அரசியல்வாதி கேரக்டர் ஓவராக கர்ஜிப்பது மட்டும் மகா டார்ச்சர்.

ரத்தம் சிந்தி நடத்தி வைத்த காதல் கல்யாணம் அபத்தமாக அல்பாயுசில் முடிவது சற்றும் எதிர்பாராத சுவாரஸ்யம். ஆனால் அரிசி கடத்தல், ஈவ்டீசிங் ரேஞ்சுக்கு அதற்கு எதிராக பில்டப் வசனங்கள் தேவையா? தவிர்த்திருக்கலாம்.

நாடோடிகள் : நம் மனதில் நிரந்தர வீடு கட்டுகின்றனர்.

----------------------------

விகடன் விமர்சனம்

நட்புக்கு மரியாதை செய்யக் காதலுக்குக் கை கொடுத்ததால் நாடோடிகள் ஆகும் நண்பர்களின் கதை!

சசிகுமார், பரணி, விஜய் மூவரம் கண்களில் கனவோடும், தோள்களில் தினவோடும் ராஜபாளையத்தை ரவுண்ட் கட்டும் நண்பர்கள். ஒரு பெருந் தொழில் அதிபரின் மகளான தன் காதலியைச் சேர்த்து வைக்க உதவுமாறு வெளியூரில் இருந்து வருகிறார் சசிகுமாரின் நண்பர். (எக்ஸ் எம்.பி.யின் மகன்). என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே எனத் தொடை தட்டிக் கிளம்புகிறது சசிகுமார் அண்ட் கோ. நண்பனின் காதலியைக் கடத்தும் பரபர சேஸிங், ரேஸிங்கில் நண்பர்கள் மூவருக்கும் ஒவ்வொரு விதத்தில் ஈடு செய்ய முடிõத இழப்பு. கிட்டத்தட்ட வாழ்க்கையைப் பணயம்வைத்து இவர்கள் சேர்த்து வைத்த காதல் ஜோடி சில நாட்கள் குடித்தனத்தில் தடாலென்று தடம் மாறி, தாலியைக் கழற்றி எறிந்து பிரிகிறார்கள். காதலுக்கு ஹெல்ப் பண்ற நண்பய்ங்க என்ன தொண்ணைகளா? என்ற பொங்கும் நாடோடிகளின் அதிரடி ஆவேசம்தான் மிச்சக் கதை.

நண்பனின் நண்பன் நண்பனே என்கிற நட்பு லைனில் விறுவிறு திரைக்கதைøயையும், பரபரப ஆக்ஷனையும் இணைந்து செம ஜாலி கதை பின்னி இருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. அரசாங்க வேலைக்காக அப்ளிகேஷன் தட்டும் சசிகுமார், வெளிநாட்டு வேலைக்குக் காத்திருக்கும் பரணி, கம்ப்யூட்டர் சென்டர் லோனுக்கு அலையும் விஜய் என மூன்று நண்பர்களைப் பற்றிய அறிமுக எபிசோட் அசத்தல்.
சரிங் மாமா என எல்லாவற்றுக்கும் தலையாட்டும் வீட்டோட மருமகன். வாழ்விழந்த இளைஞர்களுக்கு வாழ்வளிக்கும் வள்ளலாக வரும் ரித்தீஷ் டைப் சின்னமணி கேரக்டர், மகனின் காதலுக்குத் துõது போகும் ஃப்ரெண்ட்லி அப்பா என ஒவ்வொரு கேரக்டரையும் இயக்குநர் செதுக்கி இருக்கும் விதம் அருமை.

சசிகுமாரிடம் கேரக்டருக்குத் தேவையான நடிப்பு, ஹீரோயினுக்கு முத்தம் கொடுக்கச் சொல்லும்போது சசிகுமாரின் முகத்தில் எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஷன்கள் பட் உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு மாமா என்று காதலியின்  தந்தையிடம் இருந்து எஸ்கேப் ஆவதும், கடைசியில் அதே டயலாக்கை வருத்தத்தோடு சொல்லிப் பிரிவதும் கவிதை. ஆனால் டேய் என்று சசி ஆக்ரோஷம் காட்டும் இடங்களில் சுப்ரமணியபுரம் பரமன் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

அப்பா புள்ளையாக வரும் அமைதி சென்னை 28 விஜய்யும், ஜட்டியைத் தலையில் போர்த்தியபடி வலம் வரும் அடாவடி டுபச்ரஞீணியும் இயல்பான எதிரெதிர் துருவ நட்புப் பங்காளிகள். காது கேட்காமல் வீடு திரும்பும் பரணியை அவர் அப்பா அடிக்கும்போது, அப்பா நீ சொல்றது ஒண்ணுமே கேக்கலைப்பா என்ற அவர் அழுது புலம்புவது எமோஷனல் எபிசோட்! சதா காலை ஆட்டிக் கொண்டு இருக்கும் விஜய்யின் அப்பா கேரக்டராக வரும் முத்துக்கிருஷ்ணன், ஆஹா! பேங்க் பாஸ்புக்கைக் காண்பித்து மகனின் காதலுக்கு ஓ.கே. வாங்க முயல்வதும், காதலியோடு திரியும் மகனை கூளிங்கிளாஸ் கண்களோடு ரசிப்பதுமாக அசத்துகிறார்.

சசிகுமாரின் மாமன் மகளாக வரும் அøன்யாவுக்கு அறிமுகமாம்! சதா தீனிப் பண்டாரமாக குறும்புப் பார்வையும், குசும்புப் பேச்சுமாக வெள்ளாந்தித் தோழியாக ஈர்க்கிறார். சசிகுமாரின் கன்னத்தைப் பிய்த்து வாயில் போட்டுக் கொள்ளும் பாசமும் என்னைக் கடத்தற சிரமத்தை நான் தரமாட்டேன் எனும் லுõட்டியும்.... அடறா சக்கை.... அட்றா சக்கை!

கண்களாலேயே காதல் பேசிவிடும் அபிநயா கிடைக்கும் சின்னச் சின்ன இடைவெளிகளிலும் மனதைத் திருடுகிறார். இயல்பான பெண்ணாகக் காட்சி அளிக்கும் இவருக்கு நிஜத்தில் பேச்சு வராது!)
 
உங்க  ஆட்டத்துல என்னைய ஏன்டா சேர்க்கிறீங்க'' என்று சசி கோஷ்டியிடம் கதறும் கஞ்சா கருப்பு, செம சிரிப்பு. படம் எடுத்த அடுத்த ஐந்தாவது நிமிடம் அதை ஃப்ளெக்ஸ் பேனரில் விளம்பரம் செய்யும் ப்பளிசிட்டி தோன்றும் போதெல்லாம் கிபீர் குபீர் சிரிப்பு பட்டாஸ் கொளுத்துகிறார்.

வெட்டு குத்து, அரிவாள், சாதி, துவேஷ டயலாக்குகள் என கிராமத்து சினிமாவின் க்ளிஷேக்களைப் படத்தில் தேவையான இடத்தில் மட்டுமே பயன்படுத்தி இருப்பது ஆறுதல். தொழில் அதிபர் பெண்ணைக்  கடத்தும் அந்த டாப் கியர் எபிசோடுக்குப் பின்னணியாக வரும் சம்போ... சிவ சம்போ... பாடல் உறுமல் உத்வேகம் கூட்டுகிறது. வழக்கமான திருவிழாப் பாட்டு, வேற எந்த உறவையும்விட நட்புதாண்டா பெருசு என்று அடிக்கடி வரும் நட்பு பஞ்ச்கள் மட்டும் பழைய மசாலா.

கட்டி  முடிக்கப்படாத பாலம், பிரமாண்ட கிணறு என விதவித லொகேஷன்களில் அழகு காட்டும் எஸ்.ஆர்.கதிரீன் கேமரா, சேஸிங் ஸீன்களில் வேகம் கூட்டுகிறது. பின்னணி இசையில் படத்தை வேறு தளத்துக்குச் எடுத்துச் சென்று இருக்கிறது சுந்தர்.சி. பாபுவின் இசை.
சசி அண்ட் கோ நண்பனின் காதலைச் சேர்த்து வைக்க என்னென்னவோ சாகசம் புரிகிறார்கள். ஆனால் காதலிக்கு போன் செய்து அவரை வரச் சொல்லும் சிம்பிள் ஐடியா மட்டும் அவர்களுக்குத் தோன்றவில்லையாம். மகனின் மொபல்  நம்பரை ட்ரேஸ் செய்து நாமக்கல்லுச் செல்லும் எக்ஸ்  எம்.பி. அம்மா, அவர் கோவாவில் இருப்பதை மட்டும் கடைசி வரை கண்டுபிடிக்காமலேயே இருக்கிறார். அத்தனை போலீஸும் காதலர்களைத் தேட முடியாமல் தேமேவென சசியின் வாய் பார்த்தே காத்திருப்பது கோடம்பாக்க ஸ்டேஷனில் தான் சாத்தியம்.

நண்பனின் காதலியைக் கடத்தப் போகும் வழியில் சம்பந்தமே இல்லாமல் கவர்ச்சிக் குத்தாட்டம் போடுவது காண்ட்ராக்ட் சமையல் வேலை என்று கதை திடீரென டிராக் மாறுவது போன்ற இடங்கள் கத்திரிக்குத் தப்பியக் காட்சிகள்.

மெகா நீளம்தான் மைனஸ். ஆனால், அதையும் திகுதிகு திரைக்கதையால் மறக்கடிக்க வைக்கிறார்கள் ஜாலியான நாடோடி மன்னர்கள்!

விகடன் மார்க் : 43/100

----------------------------

கல்கி விமர்சனம்


பாலசந்தர், ஸ்ரீதர், பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் ஆகிய அலைகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் இப்பொழுது சசிகுமார் அலை. சர்வதேச தரம் நோக்கி தமிழ் சினிமாவை பத்திரமாக அழைத்து செல்லும் பொறுப்பில் இயக்குநர் சமுத்திரக்கனியோடு இணைந்து மீண்டும்  ஜெயித்திருக்கிறார் சசிகுமார்.

நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் என்கிற புதிய ஒரு வரிதான் கதை. சென்னை, மதுரை, திருநெல்வேலி என்று இந்த மூன்று ஊர்களுக்குள்ளேயே ஜல்லியடித்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை, ராஜபாளையம், நாமக்கல், திருச்செங்கோடு என்று நடுநிலை ஊர்கள் பக்கம் திருப்பியிருப்பது பார்வையாளர்களுக்கு புதிய அனுபவம்.

படத்தில் சசிகுமார், கஞ்சா கருப்பு தவிர அத்தனை பேரம் புதுமுகங்கள். குறிப்பாக மூன்று நண்பர்களின் குடும்ப உறுப்பினர்கள். இதனால் கதையோடு ஒன்றிப்போய் கதாபாத்திரங்களோடு கூடவே பயணிக்க முடிகிறது. சசிகுமாரிடம் அபாரமான ஸ்க்ரீன் ப்ரசன்ஸ். வாய் பேச முடியாத அபிநயவை டப்பிங் குரல் உதவியுடன் பேச வைத்திருப்பது தமிழ் சினிமாவில் புதிய முயற்சி. சசிகுமாரின் அத்தை மகளான அனன்யா என்ன பிரமாதமான நடிப்பு!

அடுத்த காட்சி குறித்த படபடப்பும் எதிர்பார்ப்பும்தான் சமுத்திரக்கனியின் பெரிய வெற்றி. கூடவே காட்சிக்கு காட்சி காமெடி. குறிப்பாக பரணியின் காமெடியில் திரையரங்கமே அல்லோல கல்லோலப் படுகிறது. வெட்டி பந்தா சின்னமணி கதாபாத்திரமும் கொண்டாட்ட மனநிலையை உருவாக்குகிறது. கதிரின் ஒளிப்பதிவு கதைக்குப் பெரிய பலம். மறக்கமுடியுமா அந்த சேஸிங் சீன்! சம்போ சிவசம்போ பாடலை, பின்னணி இசை போலப் பயன்படுத்தியது நல்ல உத்தி.

இத்தாலி, ப்ரெஞ்ச், ஈரான் படங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்துப் பேசுவது போல தமிழ் சினிமாவின் திருப்புமுனை என்றால் அது இந்த காலகட்டம்தான். வெல்க யதார்த்த சினிமாக்கள்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in