லாக்கப்,Lockup

லாக்கப் - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

நடிப்பு - வைபவ், வெங்கட் பிரபு, ஈஸ்வரி ராவ்
தயாரிப்பு - ஷ்வேத்
இயக்கம் - எஸ்.ஜி.சார்லஸ்
இசை - அரோர் கொரேலி
வெளியான தேதி - 14 ஆகஸ்ட் 2020
நேரம் - 1 மணி நேரம் 46 நிமிடம்
ரேட்டிங் - 3/5

ஒரு சஸ்பென்ஸ், த்ரில்லர் படம் என்றால் அது படத்தின் கடைசி வரையிலும் நீடிக்க வேண்டும். அப்போதுதான் அதை முழுமையாக ரசிக்க முடியும். இந்தப் படத்தை அதை அப்படியே செய்திருக்கிறார் இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ்.

லாக்அப்பில் பெரிய சம்பவம் எதுவுமே நடைபெறாத போது படத்திற்கு எதற்கு லாக்அப் எனப் பெயர் வைத்தார்கள் என்றுதான் தெரியவில்லை.

சென்னை, நீலாங்கரை காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் மைம் கோபி ஒரு பங்களாவில் கொலை செய்யப்படுகிறார். அந்த வழக்கு சம்பந்தமான முக்கிய தடயங்களை சேகரிக்க வேறு ஸ்டேஷனைச் சேர்ந்த பெண் இன்ஸ்பெக்டரான ஈஸ்வரி ராவ் நியமிக்கப்படுகிறார். அந்தப் பகுதி ரவுடி ஒருவர் அந்த கொலையை செய்ததாக ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து விசாரணையை ஆரம்பிக்கிறார் ஈஸ்வரி. அதே ஸ்டேஷனில் வேலை பார்க்கும் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கட் பிரபுவுக்கு இன்ஸ்பெக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை. சாதாரண காவலராக வேலை பார்க்கும் வைபவ்வுக்கு சப்-இன்ஸ்பெக்டராக வேண்டும் என்ற ஆசை. கூடவே, அப்பகுதியைச் சேர்ந்த வேலைக்காரப் பெண் பூர்ணா மரணமும் இன்ஸ்பெக்டர் கொலையுடன் சம்பந்தப்பட்டு வருகிறது. விசாரணையின் போது வெங்கட்பிரபுவுக்கும் இன்ஸ்பெக்டர் மைம் கோபி கொலைக்கும் சம்பந்தம் இருப்பதாக ஈஸ்வரி கண்டுபிடிக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஆரம்பத்திலேயே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறார் இயக்குனர் சார்லஸ். கடைசி வரை நம்மால் அப்படியே உட்கார்ந்து பார்க்க வைக்கும் அளவிற்கு பரபரக்கிறது திரைக்கதை. ஒரு திரைக்கதையின் வெற்றியே சிக்கல் மேல் சிக்கல் வந்து அதை விடுவிப்பதில்தான் இருக்கிறது. அந்த பரபரப்பை ஏற்படுத்துவதில் சரியாகவே இருந்திருக்கிறார், செய்திருக்கிறார் இயக்குனர். அதே சமயம், சப்-இன்ஸ்பெக்டரின் பிளட் குரூப் என்ன என்பது அவருடைய ஐ.டி கார்டிலேயே இருக்கப் போகிறது. அதை எடுத்துப் பார்த்தாலே தெரிந்துவிடும். ஆனாலும், விசாரணையின் போது வெங்கட் பிரபுவிடம் அவரது பிளட் குரூப்பைத் தெரிந்து கொள்ள ரத்த மாதிரி எடுப்பதெல்லாம் சீரியசான ஒரு படத்தில் சிரிக்க வைக்கும் காமெடியாக அமைந்துவிட்டது. இப்படி சில பல லாஜிக்குகளை ஆங்காங்கே கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர்.

படத்தின் நாயகன் என்று சொன்னால் வெங்கட் பிரபுதான், நாயகி என்று சொன்னால் ஈஸ்வரி ராவ்தான். இவர்கள் இருவரும்தான் படத்தில் அதிக காட்சிகளில் வருகிறார்கள்.

ஈஸ்வரி ராவ் ஆரம்பக் காட்சியிலேயே அவரை நேர்மையான ஒரு இன்ஸ்பெக்டராகப் பார்க்க வைத்துவிடுகிறார். வெங்கட் பிரபு, வைபவ் மற்ற போலீசாரை அவர் டீல் செய்யும் கம்பீரமே தனி. அடடா, இப்படி ஒரு நடிகையை தமிழ் சினிமா சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் போய்விட்டதே என்ற வருத்தம்தான் வருகிறது. காலா படத்தில் இவரை ஓவர் ஆக்டிங் செய்ய வைத்ததெல்லாம் இப்போது ஞாபகம் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை. இன்ஸ்பெக்டர் இளவரசியாக அரசாட்சி செய்திருக்கிறார் ஈஸ்வரி ராவ்.

தமிழ் சினிமாவில் பிரகாஷ் ராஜுக்குப் பிறகு குணச்சித்திரமும், வில்லத்தனமும் கலந்து நடிக்கும் ஒரு நடிகர் இல்லையே என்ற வருத்தமும், ஏக்கமும் பல இயக்குனர்களுக்கு உள்ளது. இனி, அந்தக் கவலை வேண்டாம். வெங்கட் பிரபு என்ற ஒரு யதார்த்தமான வில்லன் நடிகர் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துவிட்டார். யப்பா, என்ன ஒரு அசால்ட்டான நடிப்பு. போலீசா இருந்தாலும் கிரிமினலா எப்படி யோசிக்கணும்னு ஒரு கிளாஸ் எடுத்துட்டாரு வெங்கட். படம் முழுக்க காட்சிக்குக் காட்சி அவரை சிகரெட் பிடிக்க வச்சதை குறைச்சிருக்கலாம்.

எந்தக் கதாபாத்திரம் கிடைச்சாலும் அதுக்கேத்தபடி தன்னை மாத்திக்கற ஒரு நடிகரா வைபவ் இருக்கிறாரு. அவருக்கான சரியான படமா, கதாபாத்திரமா இந்தப் படத்துல அமைஞ்சிருக்கு. சிலரோட உருவத்தைப் பார்த்து இவன்லாம் எந்தத் தப்பும் பண்ண மாட்டான்னு நினைப்போம். ஆனால், அவங்கதான் தில்லாலங்கடி வேலையெல்லாம் பண்ணுவாங்க. அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் வைபவ்வுக்கு. அதைக் கரெக்டா புரிஞ்சி நடிச்சிருக்காரு.

ஏழை வேலைக்காரப் பெண்ணாகப் பூர்ணா. சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் அவருடைய கதாபாத்திரத்தின் அழுத்தத்தை நடிப்பால் உணர்த்திவிட்டார். வைபவ்வின் காதலி வாணி போஜன், அவருக்கு அவ்வளவுதான் வேலையே.

அரோல் கொரேலியின் பின்னணி இசை, சந்தானம் சேகர் ஒளிப்பதிவு, ஆனந்த் ஜெரால்டின் ஒளிப்பதிவு லாக்அப்பிற்கு நன்றாக லாக் போட்டுக் கொடுத்திருக்கிறது.

ஒரு நாளைக்குள் நடந்து முடிகிற திரைக்கதை. சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே மொத்த கதையும் நகர்கிறது. வேறு எதைப் பற்றியும் நமது கவனம் சிதறாத அளவிற்கு அவை அமைந்திருக்கிறது. சின்னச் சின்னக் குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் லாக்அப்பைத் தாரளமாகத் திறந்து பார்க்கலாம்.

லாக்அப் - தம்ஸ் அப்

 

லாக்கப் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

லாக்கப்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓