தினமலர் விமர்சனம்
தற்போது தமிழ் சினிமாவில் குழந்தைகளையும், அவர்களது பிரச்சினைகளையும் மைய கருவாக கொண்டு வெளிவரும் திரைப்படங்கள் குதூகலமான வெற்றி வாகை சூடுகின்றன. அந்த வகையில் வெற்றிப் படமாக வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் அழகு குட்டி செல்லம்.
ஊடகத்துறையில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவரும், விஜய் டிவியில் வெற்றிகரமாக நீயா நானா டாக் ஷோவை பல வருடங்களாக இயக்கி, தயாரித்தும் வருபவருமான ஆண்டனி, திருநெல்வேலியின் "மெர்குரி நெட் ஓர்க்ஸ் தயாரிப்பில், சார்லஸ் என்பவரது எழுத்து, இயக்கத்தில் வருடத்தின் தொடக்க நாளான்று வெளி வந்திருக்கும் அழகு குட்டி செல்லம் படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம் முழுக்க, முழுக்க சுட்டிகளை சுற்றியே பின்னப்பட்டிருப்பது தான் ஹைலைட்!
அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த படி அருகில் பாரின் பன்ட் உதவியில் இயங்கும் கிறிஸ்தவ பள்ளியில் படிக்கும் சிறுவன்., தன் சக நண்பர்களை பகைத்துக் கொண்டு ஜுனியர் மாணவர்கள் சிலருடன் சேர்ந்து பள்ளி விழாவில் ஏசு பிறப்பு நாடகத்தை சிறப்பாக நடத்த திட்டமிடுகிறான். அதற்கு ஒரு கைக்குழந்தை தேவைபடுகிறது, அந்த ஏசு பிறப்பு நாடகத்தின் வெற்றியில் தான் பள்ளிக்கு கிடைத்து வரும் வெளிநாட்டு உதவிகள் தொடர்ந்து கிடைக்கும் எனும் நிலை...
கைக்குழந்தைக்காக அந்த ஆசிர மாணவனும் அவனது ஜூனியர் தோழன், தோழிகளும் படும் பாட்டுடன், தனிக்குடித்தன தகராறில் பிரிந்திருக்கும் ஒரு ஸ்ரீரங்கத்து பிராமண தம்பதியின் வரட்டு கவுரவத்தையும், செஸ் விளையாட்டில் சாம்பியனாக போய், செக்ஸ் விளையாட்டால் கருவுற்ற ஒரு மேல் தட்டு இளம் பெண்ணின் கையறு நிலையையும், ஈழப் போரில் தங்களது செல்ல மகனை கண்ணெதிரே இழந்து கனடாவில் செட்டிலான இளம் தம்பதியின் கண்ணீர் கதையையும், குழந்தைக்காக ஏங்கும் டீச்சர் வினோதினி - சேத்தன் தம்பதியினரின் சோகத்தையும், மகனின் எதிர்காலம் குறித்த கவலையின்றி ஈகோவால் டாக்டர் மனைவிக்கு டாடா காட்ட துடிக்கும் ஆடுகளம் நரேன் தம்பதியினரின் குரோதம், விரோதத்தையும்., நான்காவதாக பிறக்கும் குழந்தையாவது ஆண் குழந்தையாக பிறக்காதா? எனும் ஆவலில் அடுத்தடுத்து முயற்சித்து தோல்வியுடன் காத்திருக்கும் ஒரு ஆட்டோ டிரைவரின் ஆசாபாசங்களையும், அழகாக கலந்து கட்டி, ஏசுபிறப்பு பள்ளி நாடகத்தையும் முற்றிலும் புதிதாக திரையில் காட்டி., திரையரங்கம் அதிர காண்போரை கைதட்ட விட்டிருக்கும், ஹாஸ்யமும், சுவாரஸ்யமும் நிரம்பிய கதையம்சமுடைய அமர்க்களமான படம்தான் 'அழகு குட்டி செல்லம்' மொத்த படமும்!
மூன்று பெண் குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தும் ஆண் குழந்தைக்கு ஏங்கும் ஆட்டோ டிரைவராக கருணாஸ், அனாதை ஆசிரம அப்பாவாக தம்பி ராமையா, டாக்டர் மனைவியை டைவர்ஸ் கொடுத்து பிரியத் துடிக்கும் ஆடுகளம் நரேன், ஈழப் போரில் மகனை பறிகொடுத்து கனடாவில் செட்டில் ஆன இளைஞராக கல்லூரி அகில் , அவரது சோகமே உருவான இளம் மனைவியாக மெட்ராஸ் ரித்விகா, ஏ டூ இசட் சினிமா மானேஜராக ஜான் விஜய், பள்ளி முதல்வராக சுரேஷ், தேஜஸ்வினி, டீச்சர் வினோதினி, ஆசிரம சிறுவனாக வரும் நடிகர் கருணாஸின் மகன் கென், யாழினி, சாணக்யா, செஸ் நாயகி கிரிஷா உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பக்காவாக பளிச்சிட்டிருக்கின்றனர்.
விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒவிய ஒளிப்பதிவு, வேத்சங்கர் சுகவனத்தின் இசையில் அந்த கர்நாடக சங்கீத தேவார, திருவாசக சிவபுராண பாடல் உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் சார்லஸின் எழுத்து, இயக்கத்தில் அழகு குட்டி செல்லம் படத்தை அசாத்தியமான ஒரு திரைப்படமாக உயர்த்திப் பிடிக்கின்றன.
ஜான் விஜய் பாத்திரம் உள்ளிட்ட ஒரு சில தேவையில்லாத கேரக்டர்களை இயக்குனர் தவிர்த்திருந்தால், "அழகு குட்டி செல்லம் இன்னும் அழகான பெரிய செல்லமாகவே மிளிர்ந்திருக்குமென்பது நம் கருத்து! ஆனாலும்., இத்தனை சிறிய படத்தில் அத்தனை பெரிய பாத்திரங்களையும், ஏகப்பட்ட கிளைக்கதைகளையும் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் அழகாகவும், அம்சமாகவும் கோர்த்து வாங்கி சேர்த்து படம் பண்ணியிருப்பதில் இயக்குனர் சார்லஸ் சபாஷ் வாங்கி விடுகிறார்.
ஆக மொத்தத்தில், 'அழகு குட்டி செல்லம் - படு சுட்டி, கெட்டி! எல்லா தரப்பு ரசிகனின் நிறைவான மனசுடன், நிச்சயம் நிறையும் தயாரிப்பாளரின் கல்லாபெட்டி!!