தினமலர் விமர்சனம்
நல்லபாம்பின் விஷத்தை விட கொடூரமானது நம்மிடையே உள்ள ஜாதிபாகுபாடு... எனும் நஞ்சு! என்பதை வலியுறுத்தி வெளிவந்திருக்கும் படம்தான் "நஞ்சுபுரம்!"
விஷப்பாம்புகளுக்கும், அதன் விஷத்தை முறிக்கும் வீரியமான மருந்துகளுக்கும் புகழ்வாய்ந்த கிராமம் நஞ்சுபுரம்! பாம்பென்றால் படையே நடுங்கும் எனும் பழமொழிக்கேற்ப.. ஊரே பாம்புகளுக்கு படையல் செய்து பயந்து வணங்கி வரும் சூழ்நிலையில், ஊர் பெரியவரின் மகன் ராகவ் மட்டும் பாம்பை கண்டால் பாய்ந்து அடித்து கொல்கிறான். அப்படி ஒருமுறை ராகவ் அடித்த பாம்பு ஒன்று தப்பித்து சென்று ராகவை பழிவாங்க துடிக்கிறது. மற்றொருபக்கம் கீழ்ஜாதி பெண்ணான மோனிகாவை காதலிக்கும் ராகவ், அவரை கரம்பிடிக்க முடியாமல் ஜாதி எனும் பாம்பால் பயந்து நிற்கிறார். ஹீரோ ராகவை பழிவாங்கியது, அவர் அடித்து தப்பித்த நல்ல பாம்பா? அல்லது அவர் சார்ந்த ஜாதி எனும் கெட்ட பாம்பா...? இதுதான் "நஞ்சுபுரம்" படத்தின் மீதிக்கதை!
சின்னத்திரை பிரபலம் ராகவ், "நஞ்சுபுரம்" ஹீரோவாக கிராம வாசியாக பெரியதிரைக்கு பெரிய அளவில் பிரமாதமாக புரமோஷன் ஆகி இருக்கிறார். பேஷ்... பேஷ... எனும் அளவில் இருக்கிறது அவரது நடிப்பு மட்டுமல்ல அவரது பின்னணி இசையும் பாடல்கள் இசையும் கூடத்தான். இதுநாள் வரை ராகவ், இந்த திறமைகளை எங்கு ஒளித்து வைத்து இருந்தாராம்...?
ராகவ்வின் காதலியாக கிராமத்து பெண் பாத்திரத்தில் மோனிகா நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார். ராகவ்-மோனிகா மாதிரியே தம்பிராமையா, நரேன் உள்ளிட்ட நட்சத்திரங்களும் பயமுறுத்தும் பாம்புகளும், நஞ்சுபுரம் படத்தின் பலம்! அதிலும் தம்பி ராமையா படமெடுத்து ஆடும் நல்ல பாம்புகளையே தனது கெட்ட வில்லத்தனத்தால் பின்னுக்கு தள்ளிவிடுவது படத்தின் கூடுதல் பலம்!
பாம்பின் விஷத்தை விட அதுபற்றிய பயம்தான் மனிதனை கொல்லும் வீரியமுடையது எனும் கருத்தையும், ஜாதிபாம்பின் விஷத்தையும் வீரியத்தையும், ராகவின் இசை, ஆண்டனியின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்டுகளுடன் அழகாக சொல்லியிருக்கும் புதியவர் சார்லஸ், இயக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில் "நஞ்சுபுரம்" ஏற்படுத்துகிறது "நல்ல(பாம்பு)பயம்!"
-----------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்