சூப்பர் டீலக்ஸ்,Super Deluxe

சூப்பர் டீலக்ஸ் - பட காட்சிகள் ↓

Advertisement
4

விமர்சனம்

Advertisement


சூப்பர் டீலக்ஸ் - விமர்சனம்

ஏ சான்று பெற்ற படம்

நடிப்பு - விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, மிஷ்கின் ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர்
தயாரிப்பு - டைலர் டுர்டன் மற்றும் கினோ பிஸ்ட்
இயக்கம் - தியாகராஜன் குமாரராஜா
இசை - யுவன்ஷங்கர் ராஜா
வெளியான தேதி - 29 மார்ச் 2019
நேரம் - 2 மணி நேரம் 56 நிமிடம்

ரேட்டிங் - 4/5

சூப்பர் டீலக்ஸ் படத்தின் அந்த வித்தியாசமான கதை சொல்லல் டிரைலரைப் பார்த்துவிட்டு பலரும் பலவிதமாக படத்தைப் பற்றி யோசித்திருப்பார்கள். இது என்ன மாதிரியான படம், க்ரைம் படமா, த்ரில்லர் படமா, காதல் படமா, குடும்பப் படமா என என்னென்னமோ கற்பனை செய்து பார்த்திருப்பார்கள்.

சினிமா என்பதே கற்பனைக்கும் மீறிய ஒரு விஷயம்தான். அந்தக் கற்பனையில் அதீத கற்பனையாக சினிமாவில் மட்டுமே நடக்கும் மாதிரியான காட்சிகள் படத்தில் இருந்தாலும், அதில் ஒரு உண்மை இருக்கிறது, ஒரு உயிர்ப்பு இருக்கிறது, அட...ஆமாம்.., என அதை நம் மனம் ஏற்க வைக்கிறது. இந்த சூப்பர் டீலக்ஸ் இன்று எப்படி கொண்டாடப்படுகிறேதா இல்லையோ, எதிர்காலத்தில் சினிமாவுக்கு வரத் துடிக்கும் பலருக்கும், இன்னும் 100 வருடம் கழித்தும் கூட அந்தக் காலத்தில் அப்படி ஒரு படம் வந்தது என்று கொண்டாடப்படும் ஒரு படமாக இருக்கும்.

இந்த உலகம், இந்த வாழ்க்கை, இந்த மனிதர்கள், இந்த நல்லது, கெட்டது என படத்தில் உள்ள கதாபாத்திரங்களின் வழியாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையை நம் கண்முன் ஒரு படமாக, பாடமாகக் காட்டியிருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா.

படம் பற்றி ஒவ்வொரு விஷயத்தையும் அக்கு வேறு ஆணி வேராகச் சொல்ல வேண்டுமென்றால் ஒன்று படத்தை இன்னும் சில முறை பார்க்க வேண்டும். அல்லது, இயக்குனரிடமிருந்து படத்தின் திரைக்கதை, வசனம் எழுதப்பட்ட அந்த பைன்டிங் புத்தகத்தை வாங்கி பக்கத்துப் பக்கம் கவனித்துப் படித்து எழுத வேண்டும். இது மிகையில்லை, உண்மை.

சில கதாபாத்திரங்களின் தனித்தனி கதை, எப்படி ஒன்று சேர்கிறது என்பதுதான் இப்படத்தின் மொத்தக் கதை.

சமந்தா, பகத் பாசில் கணவன், மனைவி. கணவன் பகத் வீட்டில் இல்லாத சமயத்தில் தன் முன்னாள் காதலனை வீட்டுக்கு வரவழைக்கிறார் சமந்தா. அங்கு வந்த முன்னாள் காதலன் கட்டிலில் இறந்துவிடுகிறார். வீட்டுக்கு வந்த கணவனிடம் உண்மையைச் சொல்லி, அந்த இறந்து போன காதலனின் பிணத்தை எங்கோ சென்று போட்டுவிட இருவரும் கிளம்புகிறார்கள்.

பள்ளியில் படிக்கும் நண்பர்கள் சிலர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த மாதிரியான படத்தைப் பார்க்க உட்காருகிறார்கள். அதில் நடித்தது தன் அம்மா ரம்யா கிருஷ்ணன் எனத் தெரிந்து அவரைக் கொலை செய்யும் ஆவேசத்துடன் புறப்படும் ஒரு பையன், அம்மா அருகில் வயிற்றில் அடிபட்டு விழுந்து உயிருக்குப் போராடுகிறான். மகனைக் காப்பாற்ற அவனைத் தூக்கிக் கொண்டு ஆஸ்பிட்டல் ஓடுகிறார் அம்மா ரம்யா கிருஷ்ணன். ரம்யாவை விட்டுப் பிரிந்து மத போதகராக இருக்கும் மிஷ்கின், மகனை தன் பிரார்த்தனை மூலம் குணப்படுத்த முயல்கிறார். இதனால், இருவருக்கும் சண்டை நடக்கிறது.

சில வருடங்கள் கழித்து தன் மனைவி, மகனைப் பார்க்க திருநங்கையாக வந்து குடும்பத்தினருக்கு அதிர்ச்சி தருகிறார் விஜய் சேதுபதி. இருப்பினும் அப்பாவை ஆசையாக பள்ளிக்கு அழைத்துச் சென்று இவர்தான் என் அப்பா என நண்பர்களுக்கு காட்டத் துடித்து கிளம்புகிறார் அந்த சிறு மகன். அங்கு அவமானப்படுகிறார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதியை தன் ஆசைக்கு பயன்படுத்தும் சப் இன்ஸ்பெக்டர் பக்ஸ், பிணத்தை மறைக்கத் துடிக்கும் சமந்தா, பகத் பாசிலைப் பின் தொடர்ந்து பிளாக் மெயில் செய்கிறார்.

இந்த உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு நல்லதுக்கும், ஒவ்வொரு கெட்டதுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்று சமந்தா, பகத் பாசில், அந்தப் பையன்கள், விஜய் சேதுபதி ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பக்ஸ் ஆகியோர் வாழ்க்கையில் என்ன நடந்து முடிகிறது என்பதுதான் சூப்பர் டீலக்ஸ் கதை.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான நடிகர், வித்தியாசமான படங்களில் தொடர்ந்து நடிப்பவர் என்று பெயரெடுத்த விஜய் சேதுபதி, மற்ற ஹீரோக்கள் ஏற்று நடிக்கத் தயங்கும் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து அவர்களின் வலிகளை தன் நடிப்பின் மூலம் வெளிக்காட்டியிருக்கிறார். ஷில்பா என்கிற மாணிக்கம் தமிழ் சினிமா நடிகர்களில் நிச்சயம் ஒரு மாணிக்கம்தான்.

சமந்தாவிற்கு இவ்வளவு சிறப்பாக நடிக்கத் தெரியுமா என்பது இந்தப் படத்தைப் பார்த்த பிறகுதான் புரிகிறது. இவ்வளவு திறமை வாய்ந்தவர்களை கிளாமருக்காகவும், டூயட் பாடல்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளும் இயக்குனர்களை நினைத்தால் சிரிப்பாகத்தான் வருகிறது. கட்டிய கணவனுக்கு துரோகம் செய்தாலும் அதை வெளிப்படையாகச் சொல்லி, அதற்கான பிராயச்சித்தம் தேடிக் கொள்ளும் சமந்தாவின் வேம்பு என்கிற கதாபாத்திரப் பெயர் கூட ஒரு காரணப் பெயர்தான் போலிருக்கிறது.

மலையாள நடிகர்கள், மலையாள நடிகர்கள் தான் என சொல்ல வைத்துவிட்டார் பகத் பாசில். ஒரு படம் எப்படிப்பட்ட படம், அதில் நம் கதாபாத்திரம் என்ன என்பதை மிகச் சரியாகக் கணித்து தேர்ந்தெடுப்பது அங்குள்ள முன்னணி நடிகர்களின் ஸ்டைல். அது பகத் பாசிலுக்கு கைவந்த கலையாக இருக்கிறது. இந்தக் கதாபாத்திரத்தில் இவரைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இந்த அளவிற்கு நடித்திருக்க முடியாது. அதிலும், ஜீப்பில் குடித்தவர் போன்று சமந்தாவிடம் நடித்துக் காட்டும் காட்சியிலும், கிளைமாக்சில் பக்சுக்கு ஏற்பட்ட நிலைமையைப் பார்த்து சார்...சார்... என அழைத்து சிரிப்பதாகட்டும், பகத்துக்கு இப்போதே பதக்கம் கொடுத்துவிடலாம்.

அந்த பள்ளிப் பையன்களை எங்கிருந்து பிடித்தார் இயக்குனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்கள். நடிக்கத் தெரிந்த ஐந்து புதுமுகங்கள் தமிழ் சினிமாவுக்கு. அதிலும் அந்த குண்டுப் பையனை இனி பல படங்களில் பார்க்கலாம்.

மத போதகர் மிஷ்கின். சில காட்சிகள் அதிலும் போதனை செய்யும் காட்சிகள் தான் என்றாலும் வசன உச்சரிப்பிலும், கடவுள் மீதான தன் தீவிரத்தைக் காட்டுவதிலும் தனசேகர், ஒரு அற்புதம்.

ரம்யா கிருஷ்ணன், அந்த மாதிரியான படத்தில் நடிக்கும் நடிகை. தன்னைப் பற்றி மகன் தெரிந்து கொண்டாலும், உயிருக்குப் போராடும் அவனைக் காப்பாற்றத் துடிப்பதில் தாய்மையின் வலியை உணர வைக்கிறார். கிளைமாக்சில் மகனிடம் தன் தொழில் பற்றி அவர் பேசும் வசனத்திற்கு தியேட்டரில் கைத்தட்டல்.

பக்ஸ் என்கிற பகவதி பெருமாள். விஜய் சேதுபதியின் படங்களில் நடிக்கும் போது மட்டும் அவருக்கு அப்படி ஒரு பெயர் கிடைத்து விடுகிறது. மோசமான ஒரு சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறார். சீரியஸ் காமெடி செய்பவரை இந்தப் படத்தில் வில்லனிக் காமெடி செய்ய வைத்திருக்கிறார்கள். விஜய் சேதுபதியின் மனைவியாக காயத்ரி, அவர்களின் மகனாக அந்தக் குட்டிப் பையன் சரியான தேர்வு.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பின்னணி இசை மிகச் சிறப்பு. இளையராஜாவுக்குப் பிறகு படத்தின் தன்மை அறிந்து இசையைக் கொடுப்பவர் யுவன் என்பது உண்மைதான். அதிலும் அந்தக் குண்டுப் பையனை, அந்த தாதா செருப்பால் அடிக்க ஓடும் போது வரும் அந்த பிஜிஎம் அதற்கு எடுத்துக்காட்டு. பாடல் இல்லாத குறையை ஆரம்பத்தில் பின்ணியில் ஒலிக்கும் அந்தக் காலப் பாடல்கள் ரசனையாக அமைந்துள்ளன.

பி.எஸ்.வினோத், நீரவ் ஷா ஒளிப்பதிவு, காட்சிகளின் காம்போசிஷன் எப்படி இருக்க வேண்டும் என வளரும் ஒளிப்பதிவாளர்களுக்கு ஒரு எக்சாம்பிள். சத்யராஜ் நடராஜன் படத் தொகுப்பு, விஜய் ஆதிநாதன் கலை இயக்கம், தபஸ் நாயக் ஒலி வடிவம் இயக்குனரின் மனதில் உள்ளதை திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

சில பல கெட்ட வார்த்தைகள், கெட்ட காட்சிகள், கெட்ட விஷயங்கள் படத்தில் உள்ளன. அவற்றோடு கலந்ததுதான் இந்தப் படம். அவை இல்லாமல் இந்தப் படம் இல்லை. ஆரம்பத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு அறிமுகம், கூடவே கொஞ்சம் கலகலப்பு என நகரும் படம், இடைவேளைக்குப் பின் மிக மிக மெதுவாக நகர்கிறது. சில காட்சிகள் போய்க் கொண்டேயிருக்கின்றன. அவற்றைக் கடந்துவிட்டால் கிளைமாக்சுக்கு முன்பாக ஆரம்பித்து படம் முடிவதற்குள் நமக்கு பல விஷயங்களை உணர வைக்கிறார் இயக்குனர்.

இந்த உலகில் ஆண், பெண் அனைவரும் ஒன்றுதான். அவரவர் அவர் வாழ்க்கையை வாழ்வதில் தவறில்லை. இன்று தவறு என நினைப்பது நாளை சரியாக மாறலாம் என பலவற்றை சூப்பராகச் சொல்லி முடிக்கிறார். அவற்றை மீண்டும் பார்க்க வேண்டும், கேட்க வேண்டும், அப்போதுதான் சூப்பர் டீலக்ஸ் படத்தின் ரகசியம் புரியும்.

சூப்பர் டீலக்ஸ் - வாழ்வின் ரகசியம்

 

சூப்பர் டீலக்ஸ் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

சூப்பர் டீலக்ஸ்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓