மாலிக் (மலையாளம்),Malik

மாலிக் (மலையாளம்) - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

நடிகர்கள் ; பஹத் பாசில், நிமிஷா சஜயன் வினய் போர்ட், திலீஷ் போத்தன் மற்றும் பலர்

இசை ; சுஷின் ஷியாம்

ஒளிப்பதிவு ; ஷானு வர்கீஸ்

டைரக்சன் ; மகேஷ் நாராயணன்

நேரம் ; 2 மணி 42 நிமிடங்கள்

ரிலீஸ் தேதி ; ஜூலை 15 2021

ரேட்டிங் ; 2.5 / 5

ரமடப்பள்ளி ஏரியாவின் காட்பாதரான சுலைமான் மாலிக், ஹஜ் யாத்திரை கிளம்பும் சமயத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சிறையிலேயே அவரை தீர்த்துக்கட்டவும் முயற்சி நடக்கிறது. மாலிக்கை எதற்காக கைது செய்தார்கள்? எதற்காக கொல்ல முயற்சிக்கிறார்கள் என்பதற்கு விடையாக, அவரது இளமைக்காலத்தில் இருந்து நம் கண் முன்னே விரிகிறது படம்.

நண்பர்களுடன் சேர்ந்து கப்பலிலிருந்து கடத்தல் பொருட்களை படகில் கொண்டுவந்து கொடுத்து, அதன்மூலம் வருமானம் சம்பாதிப்பவர் மாலிக். ஒரு கட்டத்தில் அப்படி கடத்தும் பொருட்களை தாங்களே நேரடியாக விற்க முடிவு செய்து, தனியாக கடை துவங்கி, ரமடப்பள்ளி பகுதியிலேயே பெரிய ஆளாக மாறுகிறார் மாலிக். ஒருபக்கம் அவருக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்க, இன்னொரு பக்கம் அரசியல்வாதிகள் மற்றும் போலீஸ்காரர்களின் பகையையும் சம்பாதிக்கிறார் மாலிக்.

சம்பாதித்த பணத்தில் பள்ளிவாசல் பகுதியில் ஒரு பள்ளிக்கூடம் கட்டி தனது தந்தையின் பெயரை வைக்கிறார் மாலிக். ஆனால் அவரது கிறிஸ்தவ நண்பரான டேவிட்டுக்கு இதில் அதிருப்தி ஏற்பட்டு, அவர்களது நட்பில் விரிசல் விழுகிறது. இதனை கவனித்த காவல்துறை, டேவிட்டை மூளைச்சலவை செய்து மத ரீதியான உணர்வுகளை தூண்டிவிட்டு, அதன் மூலம் பிரச்சனையை ஏற்படுத்தி மாலிக்கை நெருங்க முயற்சிக்கிறது. ஆனால் டேவிட்டே எதிர்பாராத வகையில் அவரது தந்தை மற்றும் மாலிக்கின் சிறுவயது மகன் ஆகியோரின் மரணங்கள் உட்பட சில அசம்பாவித நிகழ்வுகள் நடந்து விடுகின்றன.

வருடங்கள் சில உருண்டோட. மாலிக்கின் குணநலன்கள் பிடிக்காத அவரது தாயாரே, அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்க, வருடங்கள் பல கடந்த நிலையில் ஹஜ் யாத்திரை செல்லும் சமயத்தில் தான் அவரை கைது செய்கின்றனர் போலீசார் வெடிகுண்டு கேஸில் சிக்கிய டேவிட்டின் மகனையே பகடைக்காயாக பயன்படுத்தி சிறைக்குள்ளேயே மாலிக்கை கொல்லும் முயற்சி நடக்கிறது. அதிலிருந்து மாலிக் தப்பித்தாரா என்பது கிளைமாக்ஸ்.

கிட்டத்தட்ட நாற்பது வருடத்திய கதை, அதை ஒவ்வொரு காலகட்டமாக அழகாக நகர்த்திக் கொண்டு செல்கிறார்கள்.. மாலிக்காக பஹத் பாசில். அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றமாதிரி உடல் மெலிந்து, இளைஞனாக, வயதானவராக என உருவ தோற்றத்திலும் அதற்கேற்ற நடிப்பிலும் வழக்கம்போலவே நம்மை ஆச்சரியப்படுத்துகிறார் ஆனால் நாயகன் படம் பார்த்தவர்களுக்கு, இதில் பஹத் பாசில் கதாபாத்திரத்தை பார்க்கும்போது வேலு நாயக்கர் கதாபாத்திரம் ஞாபகத்திற்கு வந்தால் அதில் ஆச்சரியம் இல்லை.

கதாநாயகி நிமிஷா சஜயனும் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ற மாதிரி முக தோற்றத்திலும் உடல் மொழியிலும் வேறுபாடு காட்டி, தன் பங்கிற்கு ஆச்சரியப்பட வைக்கிறார் குறிப்பாக வயதான தோற்றத்தில் அவர் மிடுக்காக நடந்துகொள்ளும் காட்சிகள் கம்பீரம்.

பஹத் பாசிலின் நண்பன் டேவிட் ஆக நடித்திருக்கும் வினய் போர்ட்டுக்கு நாயகனுக்கு சமமான வேடம்.. கிடைத்த வாய்ப்பை நூறு சதவீதம் பயன்படுத்தியுள்ளார் வினய் போர்ட்.. குறிப்பாக நட்பில் மதம் குறுக்கிட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இவரது கதாபாத்திரம் ஒரு நல்ல உதாரணம். பஹத் பாசில் உள்ளிட்ட நண்பர்களின் இளமைக்காலம் தொட்டே உதவிகரமாக இருந்து, பின்னர் அரசியல்வாதியாக மாறியதும் தன்னுடைய சுயரூபத்தை காட்டும் திலீஷ் போத்தனுக்கு அந்த விசுவாச துரோகி கதாபாத்திரம் ஏக பொருத்தம். கலெக்டராக வரும் ஜோஜு ஜார்ஜ் பெரிதாக ஏதோ செய்யப்போகிறார் என எதிர்பார்க்க வைத்து ஏமாற்றுகிறார்.

டேவிட்டின் மகனாக நடித்துள்ள சனல் அமன் விரைவில் கதாநாயகனாக நடிக்க தொடங்கி விடுவார் என்பது நன்றாகவே தெரிகிறது. சிறைச்சாலை டாக்டராக வரும் பார்வதி கிருஷ்ணா, யார் என்கிற உண்மையும் கடைசியில் அவர் செய்யும் காரியமும் பகீர் அதிர்ச்சியை கொடுக்கின்றது. மகன் என்றாலும் தப்பு செய்தாலும் சட்டப்படி தண்டனை அனுபவிக்க வேண்டும் என பிடிவாதம் காட்டும் பஹத் பாசிலின் அம்மாவான ஜலஜாவின் கதாபாத்திரம் ஆச்சர்யப்பட வைக்கிறது.

வெவ்வேறு காலகட்டத்தில் நகரும் படம் என்பதால் ஒளிப்பதிவாளர் ஷானு வர்கீஸுக்கு இந்தப்படத்தில் சுமை அதிகம் என்றாலும் அதை சுகமாவே ஏற்றுக்கொண்டு சிறப்பாக செய்திருக்கிறார். சுஷின் ஷியாமின் இசையும் கூட காட்சிகளின் தீவிரத்திற்கு துணை நிற்கிறது.

இயக்குனர் மகேஷ் நாராயணன் கமலின் விஸ்வரூபம் படத்திற்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியவர்.. அப்படிப்பட்டவருக்கு நாயகன் பாணியில் படம் எடுக்க ஆசை ஏற்பட்டதிலும் ஆச்சர்யம் இல்லை. பஹத் பாசிலுக்கு அப்படி ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வந்ததிலும் வியப்பில்லை.. ஆனால் ஏற்கனவே வந்த நாயகன் உள்ளிட்ட பல காட்பாதர் படங்களின் சாயல் நிறையவே இருப்பதால் படம் பார்க்கும் நம் மனதிற்குள் தானாகவே ஒப்பீடு எழுவதை தவிர்க்க முடியவில்லை.

மாலிக் : ஜெராக்ஸ் நாயகன்

 

பட குழுவினர்

மாலிக் (மலையாளம்)

  • நடிகர்
  • இயக்குனர்

பஹத் பாசில்

கேரள மாநிலம் ஆலப்புழாவில், 8ம் தேதி ஆகஸ்ட் மாதம் 1982ம் ஆண்டு பிறந்தவர் பஹத் பாசில். பிரபல மலையாள இயக்குநர் பாசிலின் மகனான இவர், காயிதம் தூரத் என்ற படத்தின் மூலம் தனது சினிமா கேரியரை துவங்கிய பஹத், தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். தற்போது மலையாள சினிமாவின் இளம் முன்னணி நடிகராக விளங்குகிறார். நடிகை நஸ்ரியா நஸீமை காதலித்து மணந்து கொண்டார்.

மேலும் விமர்சனம் ↓