சீ யூ சூன் (மலையாளம்),C U Soon (Malayalam)

சீ யூ சூன் (மலையாளம்) - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

நடிகர்கள் : பஹத் பாசில், ரோஷன் மேத்யூ, ஷைஜு குறூப், தர்ஷனா ராஜேந்திரன், மாலா பார்வதி மற்றும் வெகு சிலர்
இசை : கோபிசுந்தர்
படத்தொகுப்பு, கதை, டைரக்சன் : மகேஷ் நாராயணன்
தயாரிப்பு : பஹத் பாசில் & நஸ்ரியா
ரேட்டிங் : 3/5

டேக்-ஆப், மாலிக் என ஏற்கனவே இரண்டு படங்களில் இணைந்துள்ள பஹத் பாசில்-மகேஷ் நாராயணன் கூட்டணி, மூன்றாவது முறையாக இந்தப்படம் மூலம் ஒரு பரிசோதனை முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த ஊரடங்கு சமயத்திலேயே உருவாக்கப்பட்டு, புதிய முயற்சியாக ஐ-போனில் உள்ள கேமரா மூலமாகவே மொத்தப்படமும் எடுக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் ஓடிடியில் ரிலீஸ் செய்துள்ளனர்.

கதை அரபுநாட்டில் நிகழ்வது போல உருவாக்கப்பட்டுள்ளது. ஐடி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ரோஷன் மேத்யூவுக்கு ஆன்லைன் சாட்டிங் மூலம் அறிமுகமாகும் தர்ஷனா ராஜேந்திரன் மீது காதல் ஏற்படுகிறது. ரோஷனின் அம்மா, இவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கும் முன்பாக ரோஷனின் நண்பனான பஹத் பாசிலிடம், தர்ஷனா பற்றி விசாரித்து கூறும்படி சொல்கிறார். ஹேக்கரான பஹத் பாசிலும் தர்ஷான குறித்து செக் செய்து காதலை தொடர தடையில்லை என கிரீன் சிக்னல் கொடுக்கிறார்.

ஆனால் அடுத்தடுத்து வரும் நாட்களில், தர்ஷனா தனது தந்தையால் கொடுமைப்படுத்தப்படுவதாக தெரிய வந்ததும் அவரை காப்பாற்றி தன் வீட்டிற்கே அழைத்து வந்து அடைக்கலம் கொடுக்கிறார் ரோஷன். திருமணம் செய்யாமல் ஆண், பெண் இருவரும் குடும்பம் நடத்துவது குற்றம் என்பதால், அதற்கான வேலைகளில் இறங்கும் ரோஷன், தர்ஷனாவுக்கு பாஸ்போர்ட் முதற்கொண்டு அனைத்திற்கும் ஏற்பாடு செய்கிறார். இதற்கிடையே தர்ஷனாவின் பேச்சையும் மீறி, அவர் அவரது தந்தையை சந்தித்து தன்னிடம் இருப்பதாக கூற, தர்ஷனாவின் தந்தையும் ரோஷனிடம் மன்னிப்பு கேட்கிறார்.

ஆனால் அடுத்த நாளே, தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக ஒரு வீடியோ மெசேஜ் அனுப்பிவிட்டு காணாமல் போகிறார் தர்ஷனா. இதையடுத்து தன்னை போலீஸ் தேடுவதாக பஹத் பாசிலிடம் கூறும் ரோஷன், தன்னை காப்பாற்றும்படி கதறுகிறார். அதற்குள் போலீசும் ரோஷனை கைது செய்துவிட, என்ன நடந்தது என ஆன்லைன் மூலமாகவே தர்ஷனா குறித்த விபரங்களை திரட்டும் பஹத் பாசிலுக்கு தர்ஷனா குறித்த பல அதிர்ச்சிகரமான செய்திகள் கிடைக்கின்றன.

உண்மையில் தர்ஷனா யார்..? அவர் நிஜமாகவே ராகுலை காதலித்தாரா..? எதற்காக தற்கொலை முடிவை எடுத்தார்..? நிஜமாகவே தற்கொலை செய்து கொண்டாரா என்கிற பல கேள்விகளுக்கு பஹத் பாசிலுக்கு விடை கிடைக்கிறது.. ரோஷன் போலீஸில் இருந்து விடுதலை ஆனாரா..? இந்த அதிர்ச்சி உண்மைகளை தெரிந்து கொண்ட ரோஷன் என்ன முடிவெடுத்தார் என்பது க்ளைமாக்ஸ்.

மொத்தமே ஒன்றரை மணி நேர படம் தான்.. படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரையுமே ஆளுக்கொரு லொக்கேசன் என்கிற கணக்கில் ஒரு அறையிலோ, அல்லது ஒரு ஹாலிலோ வைத்தே காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக மொத்த படமும் ஆன்லைன் சாட்டிங், மற்றும் வீடியோ கால், சோஷியல் மீடியா மற்றும் கூகுள் தேடல் ஆகியவற்றின் மூலமே நகர்வதாக காட்டப்பட்டிருந்தாலும் இவை அனைத்தையுமே தனது திறமையான படத்தொகுப்பால் ஒரே பிரேமில் அழகாக கோர்த்திருக்கிறார் இயக்குனர் மகேஷ் நாராயணன்.. ஆரம்ப சில நிமிடங்களில் நாம் சற்றே குழம்பினாலும் போகப்போக தெளிவான கதையோட்டத்தில் நம்மால் எளிதாக இணைந்துகொள்ள முடிகிறது. படத்தில் இருப்பவர்களிடம் காணப்படும் பரபரப்பு நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

படத்தில் வெகு சில நடிகர்களே நடித்திருந்தாலும், அத்தனை பேருக்குமே பெரும்பாலும் குளோசப் காட்சிகள் தான் என்பதால், ரசிகர்களுக்கு சலிப்பு தட்டிவிட கூடாது என பிரேம் பை பிரேம் மெனக்கெட்டுள்ளார்கள்.

ஹேக்கரான பஹத் பாசில் கிட்டத்தட்ட ஒரு தனியார் துப்பறியும் நிறுவன அதிகாரி போல செயல்பட்டு படத்திற்கு விறுவிறுப்பை கூட்டுகிறார். குளோசப் காட்சி என்றாலும், பஹத் பாசிலின் முகபாவங்கள் அத்தனையும் கொள்ளை அழகு. இன்னொரு நாயகன் ரோஷன் திடீர் காதலில் விழுந்த ஒரு காதலனின் மனநிலையை, தவிப்பை படம் முழுக்க சரியாக பிரதிபலித்துள்ளார்.

கவண், இரும்புத்திரை என தமிழில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ள தர்ஷனா, இந்தப்படத்தில் கதாநாயகியாக காதல், தவிப்பு, குற்ற உணர்ச்சி, பாதுகாப்பின்மை, பயம் என கலவையான உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். அவரது காட்சிகளில் எல்லாமே பின்னணியில் ஒரு மர்மம் கலந்த உணர்வை ஏற்படுத்தவும் அவர் தவறவில்லை.. கோபிசுந்தரின் பின்னணி இசையும் அதற்கு வலு சேர்க்கிறது

ரோஷனின் நண்பராக வரும் ஷைஜு குறூப் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் தனது பங்கிற்கு பரபரப்பை கூட்டுகிறார். மகனின் காதலி முன்பாக திருமணத்துக்கு ஒகே சொல்லிவிட்டு, மகனின் நண்பனிடம் அவளைப்பற்றி விசாரித்து சொல் என கூறும் வித்தியாச அம்மாவாக மாலா பார்வதி நம்மை கவர்கிறார்.

வீடியோ காலில் பேசுவது போன்றே காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதால் ஒளிப்பதிவில் எந்த ஒரு புதுமையையும் காண முடியவில்லை.. வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் இளம்பெண்கள் எப்படியெல்லாம் இன்னல்களை அனுபவிக்கிறார்கள் என்பதை கதையின் மைய இழையாக எடுத்துக்கொண்டாலும், அதில் காதல், மிஸ்ட்ரி, த்ரில் அனைத்தையும் கலந்து ஒரு பரபரப்பை உருவாக்கி நம்மை ஒன்றரை மணி நேரம் அசையவிடாமல் செய்து விடுகிறார் மகேஷ் நாராயணன். அதுவே இந்தப்படத்தின் வெற்றி.

மொத்தத்தில் சீ யூ சூன்.. ப்ளீஸ் வாட்ச் சூன்

 

பட குழுவினர்

சீ யூ சூன் (மலையாளம்)

  • நடிகர்
  • இயக்குனர்

பஹத் பாசில்

கேரள மாநிலம் ஆலப்புழாவில், 8ம் தேதி ஆகஸ்ட் மாதம் 1982ம் ஆண்டு பிறந்தவர் பஹத் பாசில். பிரபல மலையாள இயக்குநர் பாசிலின் மகனான இவர், காயிதம் தூரத் என்ற படத்தின் மூலம் தனது சினிமா கேரியரை துவங்கிய பஹத், தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். தற்போது மலையாள சினிமாவின் இளம் முன்னணி நடிகராக விளங்குகிறார். நடிகை நஸ்ரியா நஸீமை காதலித்து மணந்து கொண்டார்.

மேலும் விமர்சனம் ↓