ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் | கதாசிரியர் ஆன தமன் | பிளாஷ்பேக் : தமிழில் ஹீரோவாக நடித்த விஷ்ணுவர்தன் | பிளாஷ்பேக் : சிவாஜி பட தலைப்பில் நடித்த எம்.ஜி.ஆர் | குறுக்கு வழியில் முன்னேறும்போது 4 வருடம் போராடி ஜெயித்துள்ளேன் : புதுமுக நடிகை அதிரடி | ஹரிஹர வீரமல்லு - எந்த 'கட்'டும் இல்லாமல் ‛யு/ஏ' சான்று | ‛புதிய பயணம்...' : ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன் | ‛இந்தியன் 3' : மீண்டும் உருவாக ரஜினிகாந்த் தலையீடு | ஜெனிலியா எதிர்பார்க்கும் வேடம்... : மீண்டும் தமிழில் நடிக்க வருவாரா? | சினிமா டிக்கெட் கட்டணம் : கர்நாடகாவில் புதிய அறிவிப்பு |
இந்திப் பாடல்களின் ஆதிக்கம் தமிழ் திரையிசை ரசிகர்களிடையே ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த 1970களில், வெள்ளித்திரைக்கு தமிழ் திரையிசையை மீண்டும் சொல்லித்தர வந்தவர்தான் 'இசைஞானி' இளையராஜா. 1976ம் ஆண்டு வெளிவந்த “அன்னக்கிளி” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். பாரம்பரிய மேற்கத்திய இசையை, தமிழர்களின் நாட்டுப்புற இசையோடு கலந்து, அதுவரை கேட்டறியாத ஒரு புதிய ஒலி வடிவத்தில் மெல்லிசையாக்கித் தந்து, முதல் படத்திலேயே திரையிசையின் உச்சம் தொட்டவர்தான் 'இசைஞானி' இளையராஜா.
படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. படத்தில் இடம் பெற்ற அத்தனைப் பாடல்களையும் படத்தின் தயாரிப்பாளரான பஞ்சு அருணாச்சலம் எழுத, எஸ் ஜானகி, பி சுசீலா, டி எம் சவுந்தரராஜன் ஆகியோர் பாடியிருந்தனர். படத்தில் இரண்டு முறை இடம்பெறும் “அன்னக்கிளி உன்ன தேடுதே” என்ற பாடல் எஸ் ஜானகியின் குரலில் ஒரு முறையும், ஆண் குரலில் வரும் சோக பதிவான இதே பாடலை டி எம் சவுந்தரராஜன் ஒரு முறையும் பாடியிருப்பர். இந்த சோகப் பதிவிற்கான பாடலைப் பாட இளையராஜாவின் முதல் தேர்வாக இருந்தவர் எஸ் பி பாலசுப்ரமணியம். அந்த நேரத்தில் அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் பின்னணிப் பாடகர் டி எம் சவுந்தரராஜனை பாட வைத்திருந்தனர்.
இளையராஜாவின் முதல் திரைப்படத்தை இயக்கியிருந்த இயக்குநர் தேவராஜ் மோகன்தான் அவரது இரண்டாவது திரைப்படமான “பாலூட்டி வளர்த்த கிளி” என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில்தான் 'கவியரசர்' கண்ணதாசனின் பாடல்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிட்டியது இளையராஜாவிற்கு. படத்தில் இடம்பெற்ற “கொல கொலயா முந்திரிக்கா” என்று ஆரம்பமாகும் “கண்ணோடு கண்ணு” என்ற பாடலில் “கண்ணா ஓடோடி வா ராசா வா” என்று இளையராஜாவின் இயற்பெயரான ராசய்யா என்ற பெயரைக் குறிப்பிட்டு, திரையிசையில் சாதிக்க வா என்ற பொருள்படும்படியாக வெகு யதார்த்தமாக 'கவியரசர்' கண்ணதாசன் எழுதியிருந்தது இந்தப் பாடலுக்குரிய ஒரு தனிச்சிறப்பு.
இதே திரைப்படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடலான “நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை” என்ற பாடலை எஸ் ஜானகியுடன் இணைந்து எஸ் பி பாலசுப்ரமணியம் பாடியதுதான் இளையராஜாவின் இசையில் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய முதல் திரையிசைப் பாடலாக அமைந்திருந்தது. அந்த வகையில் இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பாலசுப்ரமணியம் என்ற இந்த மூன்று முத்துக்களையும் முதன் முதலாக இணைத்துப் பார்த்த பெருமை இந்த “பாலூட்டி வளர்த்த கிளி” திரைப்படத்திற்கு உண்டு என்பதே இந்தப் படத்திற்கான ஒரு தனி அங்கீகாரம் என்றால் அது மிகையல்ல.