3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - 2 டி என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - முத்தையா
இசை - யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு - கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், சூரி
வெளியான தேதி - 12 ஆகஸ்ட் 2022
நேரம் - 2 மணி நேரம் 31 நிமிடம்
ரேட்டிங் - 3/5

தமிழ் சினிமாவில் உறவுகளின் முக்கியத்துவத்தை சொல்லும் படங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன. பாண்டிராஜ், முத்தையா போன்ற ஒரு சில இயக்குனர்கள் மட்டும்தான் இன்னும் தாங்கள் பிறந்து வளர்ந்த மண்ணைப் பற்றியும், மக்களைப் பற்றியும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அவசர யுகத்தில் உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் அனைவரையும் திருமணம் போன்ற விழாக்களில் மட்டுமே கொஞ்ச நேரமாவது பார்த்துப் பேச முடிகிறது. பலருக்கும் தனித்து வாழ்வதுதான் பிடித்திருக்கிறது. உறவுகளால் நாம் எவ்வளவு உன்னதமாக இருப்போம் என்பதை இந்தப் படம் உரக்கவே சொல்கிறது. இயக்குனர் முத்தையா தனது முந்தையப் படங்களில் ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் தூக்கிப் பிடிக்கும் கதைகளைத்தான் கொடுத்திருந்தார். இந்தப் படத்தில் அதைக் கொஞ்சம் கைவிட்டிருப்பது ஆச்சரியம்தான்.

தன் அம்மா சரண்யாவின் மரணத்திற்குக் காரணமான அப்பா பிரகாஷ்ராஜ் மீது கொலை வெறி கோபம் கொண்டிருப்பவர் கார்த்தி. தன் அம்மாவின் இறுதிச் சடங்கிற்குக் கூட வராத அப்பா பிரகாஷ்ராஜையும், அண்ணன்கள் மூன்று பேரையும் தனது அம்மா மறைந்த வீட்டிற்கு வரவழைப்பேன் என்ற சபதத்தில் இருக்கிறார். பணத்தைப் பெரிதென நினைக்கும் பிரகாஷ்ராஜ், அப்பா பெயரைத் தட்டாத மூன்று மகன்கள் கார்த்தியின் பாசத்தைப் புரிந்து கொள்கிறார்களா, கார்த்தி தன் சபதத்தை நிறைவேற்றினாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அப்பா என்பது நம்பிக்கை என்று சொல்லியிருக்கும் படம். தமிழ் சினிமாவில் இதுவரையிலும் ஒரு மோசமான அப்பாவை இப்படி காட்டியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். அதே சமயம் ஒரு மகனை எப்படி வளர்க்க வேண்டும் என படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு வசனத்தை வைத்து ஒரு சிறந்த அம்மாவின் பாசம் எப்படியிருக்கும் என்பதையும் காட்டியிருக்கிறார்கள்.

தனது முதல் படமான 'பருத்தி வீரன்' படத்திலேயே கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் முத்திரை பதித்தவர் கார்த்தி. அதன்பின் முத்தையா இயக்கத்தில் அவர் நடித்த 'கொம்பன்' படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார். அந்த இரண்டு படத்திலும் எப்படி பெயர் வாங்கினாரோ அதே போல இந்த படத்திலும் 'விருமன்' ஆக வீறு கொண்டு நிற்கிறார். அப்பாவாகவே இருந்தாலும் தப்பு தப்புதான் என்று சொல்லும் ஒரு கதாபாத்திரம். ஆக்ஷன், காதல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்து ஏரியாக்களிலும் புகுந்து விளையாடியிருக்கிறார். அதே சமயம் அவ்வப்போது 'பருத்தி வீரன், கொம்பன்' கதாபாத்திரங்களும் எட்டிப் பார்த்துவிட்டுப் போகின்றன.

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகியிருக்கும் படம். முதல் படம் என்று சொல்ல முடியாத நடிப்பு. நடனத்திலும், நடிப்பிலும் நன்றாகப் பயிற்சி பெற்றே களம் இறங்கியிருக்கிறார். அவருக்கான முத்திரை பதிக்கக் கூடிய காட்சிகள் குறைவுதான் என்றாலும் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

கார்த்தியின் அப்பாவாக பிரகாஷ்ராஜ். கிராமத்துப் பெரிய மனிதர் என்று காட்டினால் வழக்கமான கதாபாத்திரம் போல இருக்கும் என ஒரு தாசில்தார் என அடிக்கடி பேண்ட், சட்டையில் உலவ விட்டிருக்கிறார்கள். ஆணாதிக்க மனோபாவம் கொண்ட, தான் சொல்வதை மட்டுமே மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று நினைக்கக் கூடிய கதாபாத்திரம். ஆனாலும், ஒரு கொடுமைக்கார அப்பா நம் கண்முன் தெரியாமல் போவது பலவீனமாக உள்ளது.

கார்த்தியன் தாய்மாமனாக ராஜ்கிரண். ஒரு முக்கியமான கதாபாத்திரம் என்றாலும் இவருக்கான காட்சிகள் குறைவுதான். அந்தக் கொஞ்சக் காட்சிகளிலும் தாய்மாமனின் பாசத்தால் கலங்க வைக்கிறார்.

படத்தின் நகைச்சுவைக்கு சூரி. கிராமத்துப் படங்களும், கதாபாத்திரமும் கிடைத்துவிட்டால் மட்டுமே சூரி சுழன்றடிக்கிறார். பிரகாஷ்ராஜின் இரண்டாவது மருமகளாக நடித்திருக்கும் மைனா, பல குசும்புத்தனமான வசனங்களில் சிரிக்க வைக்கிறார். சரண்யா, வடிவுக்கரசி, மனோஜ் பாரதி, வசமித்ரா, ராஜ்குமார், அருந்ததி, இளவரசு என படத்தில் பல கதாபாத்திரங்கள். ஆர்கே சுரேஷ் கதாபாத்திரம் இரண்டாம் பாதியில் திணிக்கப்பட்டது போல இருக்கிறது.

முத்தையாவின் படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா முத்தான மூன்று பாடல்களைக் கொடுத்திருக்கிறார். கிராமத்துப் படங்களுக்கும் தன்னுடைய பின்னணி இசை பொருந்தும் என மீண்டும் நிரூபித்திருக்கிறார். செல்வகுமாரின் ஒளிப்பதிவு, ஜாக்கியின் கலை இயக்கம் படத்தில் குறிப்பிட வேண்டியவை.

இரண்டாம் பாதியில் சில காட்சிகள் நீட்டி முழக்கி சொல்லப்பட்டிருக்கிறது. அப்பா, மகனுக்குமான மோதல்தான் படத்தின் மையக்கரு என்றாலும் அனைத்து ரசிகர்களுக்குமான கமர்ஷியல் படமாகக் கொடுத்திருக்கிறார்கள். அண்ணன், தம்பி, மாமன், மச்சான் என உறவுகளுடன் நெருக்கமாக வாழ்ந்து பாருங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்று சொல்லும் படம்.

விருமன் - பாசக்காரன்

 

விருமன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

விருமன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

கார்த்தி

நடிகர் சிவக்குமாரின் இளைய வாரிசு கார்த்தி. 1977ம் ஆண்டு, மே 25ம் தேதி பிறந்த கார்த்தி, அமெரிக்காவில் இன்ஜினியரிங் படித்தவர். அப்படிப்பட்டவர் பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல்படத்திலேயே கிராமத்து முரட்டு இளைஞனாக அனைவரையும் கவர்ந்த கார்த்தி, தொடர்ந்து பையா, சிறுத்தை போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். 2011ம் ஆண்டு, ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.

மேலும் விமர்சனம் ↓