மலையாள திரையுலகின் பிரபல சீனியர் நடிகர் சீனிவாசன். இவரது மூத்த மகன் வினித் சீனிவாசன் முன்னணி இயக்குனராகவும், முன்னணி நடிகராகவும் மலையாள திரையுலகில் வெற்றிகரமாக வலம் வருகிறார். இளைய மகன் தயன் சீனிவாசன் நடிகராக அறிமுகமாகி சில படங்களில் நடித்த பின் இயக்குனராகவும் மாறினார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா, நிவின்பாலி நடிப்பில் வெளியான லவ் ஆக்சன் டிராமா படத்தை இயக்கியது இவர்தான்.
இந்த நிலையில் அடுத்ததாக இவரது நடிப்பில் ‛நடிகளில் சுந்தரி யமுனா' என்கிற படம் வெளியாக இருக்கிறது. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் தயன் சீனிவாசன் தனது கடந்த கால மோசமான வாழ்க்கை குறித்து ஓப்பனாகவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அவர் கூறும்போது, “சில வருடங்களுக்கு முன்பு வரை நான் ஆல்கஹால் மற்றும் சில போதை வஸ்துகளுக்கு அடிமையாக இருந்தேன். இதனால் எங்கள் வீட்டிலேயே குழப்பம் ஏற்பட்டு என் தந்தைக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு கூட ஏற்பட்டது. நான் இயக்கிய லவ் ஆக்சன் டிராமா திரைப்படத்தில் கதாநாயகன் நிவின்பாலியின் கதாபாத்திரம் கூட என் நிஜமான கேரக்டரை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது தான். அந்த படத்தில் நிவின்பாலி பேசுகின்ற நம் தந்தை சேர்த்து வைத்திருக்கும் சொத்தை நாம் அனுபவித்து மகிழாமல் வேறு என்ன செய்வது என்கிற மனநிலையுடன் கேட்கும் கேள்வியைத்தான் நான் என்னுடைய கேர்ள் பிரண்டிடம் அந்த சமயத்தில் கேட்டேன்.
திருமணமாகி எனக்கென ஒரு குழந்தை பிறந்ததும் தான் என்னுடைய வாழ்க்கையில் மாற்றம் உருவானது. அதன்பிறகு போதைப் பொருள்களை அறவே ஒதுக்கிவிட்டு சினிமாவில் முழுக்கவனம் செலுத்தி துவங்கினேன். தற்போது எனது படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. தினசரி ஏதோ ஒரு விதத்தில் சினிமாவுடன் தொடர்புபடுத்திக் கொள்வதால் இப்போது சினிமாவிற்கு தான் நான் அடிக்ட் ஆகி இருக்கிறேன்” என கூறியுள்ளார்.