காதலியை கரம்பிடிக்கும் நரேஷ் | நீண்ட இடைவேளைக்குப் பின் சின்னத்திரையில் மீண்டும் களமிறங்கும் சாதனா | சுரேஷ்கோபி படம் மூலம் மீண்டும் மலையாளத்திற்கு திரும்பிய அனுபமா பரமேஸ்வரன் | நேஹா சக்சேனாவும் பரபரப்பு வளையத்தில் சிக்குவாரா? | இறுதிக்கட்டத்தை எட்டிய அர்ஜுன் - நிக்கி கல்ராணியின் மலையாள படம் | 35 வருடங்களுக்குப் பிறகு வைரலான மோகன்லால் - மம்முட்டி தம்பதி | ஆதிபுருஷ் படத்திற்காக 10 ஆயிரம் டிக்கெட்டுகளை கொடுக்கும் ரன்பீர் கபூர்! | லியோ படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் டென்சில் ஸ்மித் | சாண்டி படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா | விக்ரம் படத்தை வெளியிடும் விஜய் பட தயாரிப்பாளர்! |
விநாயகர் சதுர்த்தி தினமான நாளை மறுநாள் ஆகஸ்ட் 31ம் தேதி விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' படமும், பா ரஞ்சித் இயக்கியுள்ள 'நட்சத்திரம் நகர்கிறது' படமும் வெளியாக உள்ளது. இந்தப் படங்கள்தான் இந்த வார வெளியீட்டில் போட்டி போடப் போகின்றன. இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் விக்ரம், பா ரஞ்சித் இருவரும் ஒன்றாக இணைந்துதான் தங்களது அடுத்த படத்தைக் கொடுக்கப் போகிறார்கள்.
'கோப்ரா' படத்தை பெரிய வெற்றிப் படமாக மாற்ற வேண்டும் என படத்தின் கதாநாயகன் விக்ரம், படத்தில் நடித்துள்ள நடிகைகளுடன் திருச்சி, மதுரை, கோவை, சென்னை என தமிழகத்தின் சில முக்கிய ஊர்களுக்கும், கொச்சி, பெங்களூரு, ஐதராபாத் என வெளிமாநில முக்கிய ஊர்களுக்கும் சென்று படத்தை பெரிய அளவில் விளம்பரப்படுத்தி வருகிறார்.
இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் வெளிவர உள்ள மூன்றாவது படம் இது. அவரது முந்தைய படங்களான 'டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள்' வெற்றிப் படங்கள். எனவே, 'கோப்ரா' படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என இப்படத்தை வித்தியாசமான கதையுடன் பிரம்மாண்டமாக உருவாக்கி இருக்கிறார்.
பல விதத் தோற்றங்களில் கதாநாயகனாக நடித்துள்ள விக்ரம், 'கேஜிஎப்' என்ற மாபெரும் வசூல் படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ள முதல் தமிழ்ப் படம், ஏஆர் ரகுமான் இசை என இப்படத்திற்கு சில அடையாளங்கள் இருக்கிறது. வேறு எந்த முன்னணி நடிகர்களின் படங்களும் போட்டிக்கு இல்லாததால் 'கோப்ரா' படம் தரமாக அமைந்து ரசிகர்களைக் கவர்ந்துவிட்டால் பெரிய வெற்றியையும், வசூலையும் பெற்றுவிடும்.
படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் படத்தை வெளியிடுகிறது. அந்நிறுவனம் வெளியிட்டால் மட்டுமே அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி கிடைக்கிறது என்றும் திரையுலகில் ஒரு பேச்சு உள்ளது. இதற்கு முன்பு வெளியான 'திருச்சிற்றம்பலம், விருமன்' படங்களுக்கு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி தரப்படவில்லை.
'கோப்ரா' படத்தின் அதிகாலை காட்சிகளும் பல ஊர்களில் இப்போதே ஹவுஸ்புல்லாகி உள்ளது. கடந்த ஐந்தாறு வருடங்களாக பெரிய வெற்றிக்கு ஏங்கிக் கொண்டிருக்கும் விக்ரமிற்கு இந்தப் படம் எப்படி அமையப் போகிறது என்பதை திரையுலகினரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விக்ரம் நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் 'பொன்னியின் செல்வன்'. இன்னும் ஒரு மாதத்தில் வெளியாக உள்ளது. அது மல்டிஸ்டார் என்பதால் அப்படம் வெற்றி பெற்றால் விக்ரமிற்கு மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் பெயர் சேரும். ஆனால், 'கோப்ரா' வெற்றி பெற்றால் அது விக்ரமை மட்டுமே சேரும். அதனால்தான், அவர் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருக்கிறார். அதன் பல கைமேல் கிடைக்குமா என்பது இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.
விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளிவர உள்ள மற்றுமொரு திரைப்படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. பா ரஞ்சித் இயக்கத்தில் கலையரசன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் மற்றும் பல புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். ஓடிடியில் வெளியான சார்பட்டா பரம்பரை' படம் மூலம் மீண்டும் பேசப்பட்டவர் பா ரஞ்சித். அந்தப் படத்திற்குப் பின் அவரது இயக்கத்தில் வெளிவர உள்ள படம் இது.
இந்தப் படத்தை ஒரு இயக்குனரின் படம் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படத்திற்கான அடையாளம் பா ரஞ்சித் மட்டுமே. இசையமைப்பாளர் தென்மா மற்றும் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் வளரும் நட்சத்திரங்கள் அல்லது புதுமுக நட்சத்திரங்கள்தான். ரஞ்சித் படம் என்பதால் மட்டும்தான் ரசிகர்களும் தியேட்டர்களுக்குச் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள்.
பல்வேறு விதமான காதலைச் சொல்லும் படம் இது என்கிறார் இயக்குனர் ரஞ்சித். ஆண், பெண் காதல் மட்டுமல்லாது ஒரே பாலின காதல், திருநங்கை காதல் ஆகியவற்றைப் பற்றியும் இந்தப் படத்தின் கதை நகரப் போகிறது.
'கோப்ரா' போன்ற பெரிய நட்சத்திரங்களின் படத்திற்கு முன்பாக, அதிக பிரபலமில்லாத நட்சத்திரங்கள் கொண்ட தன்னுடைய 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தைத் தன்னுடைய திறமையை மட்டுமே நம்பி போட்டியில் இறக்குகிறார் ரஞ்சித்.
'கோப்ரா, நட்சத்திரம் நகர்கிறது', எது கொத்தப் போகிறது, எது ஒளிரப் போகிறது என்பது இரண்டு நாளில் தெரிந்துவிடும்.