இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் |
சினிமா என்ற ஊடகத்தை முறையாக பயன்படுத்தி, முயற்சி என்ற ஒன்றையே மூலதனமாக்கி, அரசியல் களத்தில் முழுமையான வெற்றியை சுவைத்தவர் என்றால் அது எம் ஜி ஆர் மட்டுமே. தன் அரசியல் பயணம் குறித்து, முன் உணர்ந்தவராக அவரது படங்களில் இடம் பெறும் பாடல்கள் மற்றும் வசனங்களில் அதிக கவனம் செலுத்தி, பிறர் மனம் நோகா வண்ணம், மக்களின் நாடித் துடிப்பறிந்து, நேர்மறையான கருத்துக்களை எடுத்துரைத்ததன் மூலம்தான் கலையுலகிலும், அரசியல் உலகிலும் அசைக்க முடியாத ஒரு ஆளுமையாக இருந்து வந்தார்.
“எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே”, “உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்”, “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே”, “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்”, “நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்” போன்ற எண்ணற்ற இவரது பாடல்கள் உணர்த்தும் இவரது அரசியல் வெற்றியின் சூட்சுமத்தை. அந்த வகையில் எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டினை உறுதி படுத்தும் வண்ணமாக வந்த திரைப்படம்தான் “நம் நாடு”.
“விஜயா இண்டர்நேஷனல்” என்ற தயாரிப்பு நிறுவனத்தால், பி நாகிரெட்டி மற்றும் சக்கரபாணி தயாரித்து, 1969ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான் “நம் நாடு”. இந்த தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே எம் ஜி ஆரை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்து “எங்க வீட்டுப் பிள்ளை” என்ற ஒரு மாபெரும் வெற்றித் திரைக் காவியத்தை தந்ததன் தொடர்ச்சியாக எம் ஜி ஆரை வைத்து தங்களது இரண்டாவது தயாரிப்பாக இத்திரைப்படத்தைத் தந்திருந்தது.
திரையில் தன்னை ஒரு அரசியல்வாதியாக பார்க்க ஆசைப்பட்டு, அதைப் பார்க்கும் பார்வையாளர்களின் வரவேற்பு எத்தகையது என்பதை அறியும் வண்ணம், ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தை தயாரிப்பாளர் பி நாகிரெட்டியிடம் எம் ஜி ஆர் கூற, தெலுங்கில் என் டி ராமாராவ் மற்றும் ஜெயலலிதா நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படமான “கதாநாயகுடு” என்ற திரைப்படத்தினை ரீமேக் செய்ய எம் ஜி ஆரிடம் அவர் பரிந்துரை செய்ய, பின் எம் ஜி ஆரின் ஒப்புதலோடு “நம் நாடு” என பெயரிட்டதோடு, தெலுங்கு திரைப்படத்திலிருந்து சற்று மாறுபட்டு, எம் ஜி ஆருக்காக அரசியல் ரீதியான வசனங்கள் இடம்பெறச் செய்து, “நம் நாடு” திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டனர். படத்தின் வசனத்தை கே சொர்ணம் எழுத, படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் ஜம்பு.
படம் வெளிவந்தபோது, படத்தைக் கண்டுகளிக்கும் பார்வையாளர்களின் மனநிலையையும், அவர்களது வரவேற்பினையும் நேரிடையாக அறியும் பொருட்டு, எம் ஜி ஆரும், தயாரிப்பாளர் பி நாகிரெட்டியும் சென்னை 'மேகலா' திரையரங்கிற்குச் சென்று, திரையரங்க மேலாளரைத் தவிர வேறு யாரும் அறியா வண்ணம் திரையரங்க கதவுகளின் ஓரமாக மறைந்திருந்து படத்தைப் பார்த்தனர்.
படத்தில் ஒரு கட்டத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற எம் ஜி ஆரை வரவேற்பதுபோல் படத்தின் நாயகியான ஜெயலலிதா “வாங்கய்யா வாத்தியாரய்யா வரவேற்க வந்தோமய்யா, ஏழைகள் உங்களை நம்பி எதிர்பார்த்து நின்றோமய்யா” என்று பாடி நடித்திருக்கும் ஒரு பாடல் காட்சியில் பார்வையாளர்கள் எழுந்து நின்று கை தட்டி, விசில் அடித்து, ஆரவாரம் செய்ததோடு, 'ஒன்ஸ் மோர்' என மீண்டும் அந்தப் பாடல் காட்சியை திரையிடுமாறு கூக்குரல் எழுப்ப, இதனைக் கண்ட எம் ஜி ஆரும், பி நாகிரெட்டியும் பார்வையாளர்களைக் கட்டுப்படுத்தும்படி திரையரங்க மேலாளரிடம் கூறியதோடு, அந்தப் பாடல் காட்சியை மீண்டும் ஒருமுறை திரையிடச் செய்தனர்.
இதனைக் கண்ட எம் ஜி ஆரின் கண்கள் ஆனந்தக் கண்ணீரால் குளமாகி, தயாரிப்பாளர் பி நாகிரெட்டியை கட்டியணைத்து, நான் மக்களின் வரவேற்பினைப் பெற்றுவிட்டேன் என்று கூறி மகிழ்ந்திருக்கின்றார். இத்தகைய பெருமைக்குரிய “நம் நாடு” திரைப்படம் எம் ஜி ஆர் மற்றும் பி நாகிரெட்டி கூட்டணியில் வெளிவந்து, 'விஜயா இண்டர்நேஷனல்' தயாரிப்பு நிறுவனத்திற்கு மேலும் ஒரு மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.