நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
நம் தமிழ் திரையுலகில் நல்ல குரல் வளத்தோடு பின்னணிப் பாடத் தெரிந்திருந்த திரைக் கலைஞர்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட கதாநாயக நடிகர்களாக அறியப்பட்டிருந்த காலம் என்று ஒன்று இருந்து வந்தது. அதன் பின்பு வந்த எம்ஜிஆர், சிவாஜி காலங்களில் திரைப்படத்திற்குத் தேவையான நடிப்புப் பயிற்சி, சண்டைப் பயிற்சி, நடனப் பயிற்சி ஆகியவற்றுடன், சிவந்த மேனியுடன் கவர்ச்சிகரமான முகத் தோற்றம் கொண்டவர்களுக்கே அந்த கதாநாயகன் அந்தஸ்தை வழங்கி வந்தது நம் தமிழ் திரையுலகம்.
1970களின் மத்தியில் கதாநாயகனுக்கான இந்த அத்தனை வரையறைகளையும் உடைத்தெறிந்து, ஒரு சாதாரண தோற்றம் உடையவர் கூட, திறமையும், முயற்சியும் இருந்தால் கலையுலகின் உச்சம் தொட்டு, ஒரு உச்ச நடிகராகலாம் என்ற பிம்பத்தை கட்டமைத்தவர்தான் நடிகர் ரஜினிகாந்த். ஆரம்ப காலங்களில் வில்லனாக அறிமுகமாகி பின்பு தனது பிரத்யேக நடை, உடை, பாவனைகளாலும், அசாத்திய நடிப்பாலும் கதாநாயகன் என்ற அந்தஸ்தை எட்டிப் பிடித்து, தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமானார் நடிகர் ரஜினிகாந்த். அப்படி அவரை உச்ச நட்சத்திரம் என்ற இடத்திற்கு கொண்டு செல்ல அச்சாரமிட்ட திரைப்படம்தான் இந்த “பைரவி”.
திரைப்படக் கதாசிரியர், தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் என்ற பன்முகத் தன்மைக்கு சொந்தக்காரரான கலைஞானம் தயாரித்த திரைப்படம்தான் இந்த “பைரவி”. “ஆறு புஷ்பங்கள்”, “அல்லி தர்பார்” போன்ற படங்களை கே.எம் பாலகிருஷ்ணன் என்ற தனது இயற்பெயரில் இயக்கியிருந்ததும் இவரே.
அண்ணன் தங்கை பாசத்தை கருப்பொருளாக வைத்து இவர் எழுதிய “விஸ்வரூபம்” என்ற கதையை திரைப்படமாக எடுக்க முயற்சித்தபோது அதற்காக இவர் வைத்த பெயர்தான் “பைரவி”. அந்த காலகட்டங்களில் தொடர்ந்து எதிர்மறை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்தின் வித்தியாசமான நடிப்பு கலைஞானத்தை கவர்ந்திழுக்க, அவரையே நாயகனாக நடிக்க வைக்க ஆசைபட்டு, அவருக்கு முன் பணமும் கொடுக்கப்பட்டது.
இதைக் கேள்விப்பட்ட சாண்டோ எம்எம்ஏ சின்னப்ப தேவர், ரஜினியை நாயகனாக நடிக்க வைக்க அவரிடம் மறுப்பு தெரிவிக்க, தான் எடுத்த முடிவில் எவ்வித மாற்றமுமின்றி ரஜினிகாந்தையே நாயகனாக நடிக்க வைத்து படப்பிடிப்பையும் ஆரம்பித்தார் கலைஞானம். எம் பாஸ்கர் படத்தை இயக்க, இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்த இத்திரைப்படம் 1978ஆம் ஆண்டு ஜுன் 8 அன்று வெளியானது.
ரஜினியின் தங்கையாக நடிகை கீதா அறிமுகமான முதல் திரைப்படமும் இதுவே. படத்தின் விநியோகஸ்தரான 'கலைப்புலி' எஸ் தாணு, படத்தின் விளம்பரத்திற்காக சென்னை 'பிளாசா' திரையரங்கில் 35 அடி உயர கட்-அவுட் ரஜினிகாந்திற்கு வைத்ததோடு, சுவரொட்டிகளிலும் முதன் முதலில் 'சூப்பர் ஸ்டார்' என்ற அடைமொழியும் இடம்பெறச் செய்திருந்தார். 'சூப்பர் ஸ்டார்' என்ற அடைமொழியோடு நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடித்த முதல் திரைப்படமாக வெளிவந்து வெற்றி வாகையும் சூடியது இந்த “பைரவி”.