தேவரா 1
விமர்சனம்
தயாரிப்பு - யுவசுதா ஆர்ட்ஸ், என்டிஆர் ஆர்ட்ஸ்
இயக்கம் - கொரட்டலா சிவா
இசை - அனிருத்
நடிப்பு - ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சைப் அலிகான்
வெளியான தேதி - 27 செப்டம்பர் 2024
நேரம் - 2 மணி நேரம் 57 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
ஒரே ஒரு கதை, ஆனால், அந்தக் கதையை வைத்து எத்னை எத்தனை படங்களை எடுப்பார்கள் எனத் தெரியவில்லை. கதைக்களத்தை மட்டும் மாற்றிவிட்டு பான் இந்தியா படம் என 'படம்' காட்டுகிறார்கள் பலர். அப்படியான ஒரு படம்தான் இந்த 'தேவரா'.
'கேஜிஎப்' படத்தில் சுரங்கம் கதைக்களம், 'புஷ்பா' படத்தில் காடு கதைக்களம், 'சலார்' நாடு கதைக்களம், இந்த 'தேவரா'வில் கடல் தான் கதைக்களம். எந்தக் கதையை எந்தக் களத்தில் வேண்டுமானாலும் நீங்கள் மாற்றி எழுதிக் கொள்ளலாம். அனைத்து மொழிகளிலும் ஓரளவிற்குத் தெரிந்த முகங்களை நடித்து வைத்துவிட்டால் ஒரு பான் இந்தியா படம் ரெடி.
செங்கடல் என்ற கடல் பகுதிக்கு அருகே, நான்கு கிராமங்களை உள்ளடக்கிய ரத்னகிரி என்ற மலைப் பிரதேசம் உண்டு. அந்த கிராமத்தில் இருந்த முன்னோர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய வீரர்கள். சுதந்திரம் கிடைத்த பின் அந்த கிராமங்கள் கண்டு கொள்ளாமல் விடப்பட்டன. பத்து வருடங்களுக்கு முன்பு அந்த கிராமத்தில் உள்ளவர்கள் கடத்தல் தொழில் செய்பவர்களுக்கு உதவியாக கடலில் வரும் கப்பல்களிலிருந்து கடத்தல் பொருட்களை எடுத்துத் தர உதவியாக இருந்தனர்.
ஜுனியர் என்டிஆர் தலைமையேற்க சைப் அலிகான், கலையரசன், ஸ்ரீகாந்த் ஆகியோரது தலைமையில் நான்கு கிராமத்தைச் சேர்ந்தவர்களும் அதில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சிறுவனது மரணம் ஜுனியர் என்டிஆர் மனதை மாற்றுகிறது. தங்களது முன்னோர்கள் போல நாட்டைக் காக்க வேண்டும் என உறுதி ஏற்கிறார். அதனால், மற்றவர்களையும் கடத்தல் தொழிலுக்கு உதவ வேண்டாம் எனச் சொல்லி அவர்களைத் தடுக்கிறார். ஜுனியர் என்டிஆரைக் கொல்ல மற்ற ஊர் தலைவர்கள் திட்டமிடுகிறார்கள். இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.
மேலே சொன்ன கதை அப்பா 'தேவரா' பற்றிய கதை. இடைவேளைக்குப் பின் 'தேவரா'வின் மகன் 'வரா' வருகிறார். 'தேவரா, வரா' என அப்பா, மகன் கதாபாத்திரங்களில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் ஜுனியர் என்டிஆர். தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்தமான ஆக்ஷன் கதை, ஆக்ஷன் ஹீரோ என 'தேவரா, வரா' என அவதாரம் எடுத்திருக்கிறார். வித்தியாசமான ஆயுதத்துடன் எதிரிகளைப் பந்தாடுகிறார். ஆரம்பம் முதல் கடைசி வரை ரத்தம் தெறிக்க வைக்கிறார். கொஞ்சம் அமைதி, அதிக ஆக்ஷன் இதுதான் தேவரா + வரா. தெலுங்கு வாடை இல்லாமல் சொந்தக் குரலில் பேசியிருக்கிறார் ஜுனியர் என்டிஆர், அதற்கு பாராட்டுக்கள்.
ஜுனியர் என்டிஆருடன் சரிக்கு சமமாக போட்டி போடும் மற்றொரு கதாநாயகனாக சைப் அலிகான் கதாபாத்திரமான பைரா-வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பிரபாஸ் நடித்து வெளிவந்த 'ஆதி புருஷ்' படத்தில் கிடைக்காத பெயர் சைப் அலிகானுக்கு இந்தப் படத்தில் கிடைக்கும்.
மற்ற ஊர் தலைவர்களாக கலையரசன், ஸ்ரீகாந்த் நடித்திருக்கிறார்கள். கலையரசனுக்குக் குறைவான நேரம்தான். ஸ்ரீகாந்த் தான் படத்தின் கதாநாயகியான ஜான்வி கபூர் அப்பா.
கதாநாயகி ஜான்விக்கென நாம் கூட நான்கு வரிகள் எழுத முடியாத அளவிற்கு நான்கே காட்சிகளை மட்டுமே வைத்திருக்கிறார் இயக்குனர். கொஞ்சம் கிளாமர் வேண்டும் என்பதற்காக அவரது கதாபாத்திரம். எக்ஸ்டிராவாக ஒரு பாடல் பாடி நடித்துவிட்டுப் போகிறார். தெலுங்கில் கலக்கிய ஸ்ரீதேவியின் மகளுக்கு இப்படி ஒரு அறிமுகத்தைக் கொடுத்திருக்க வேண்டாம் இயக்குனரே.
'கேஜிஎப்' போலவே பிரகாஷ் ராஜை 'தேவரா'வின் கதையைச் சொல்லப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அவரும் அதைச் சரியாகச் செய்திருக்கிறார். ஆனால், டப்பிங்கில் தெலுங்கு வாடை அடிக்கிறது.
படத்தை அதிக ஆக்ஷன் மோடில் கொண்டு சென்றவர் அனிருத் தான். 'விக்ரம், ஜெயிலர்' படங்களில் கூட இப்படி பின்னணி இசை அமைக்கவில்லை என்று சொல்லலாம். தமிழில் பாடல்கள் எடுபடவில்லை. ரத்னவேலு ஒளிப்பதிவு கடலையும், மலையையும் பிரம்மாண்டமாய் காட்டியுள்ளது. பல காட்சிகள் 'க்ரீன்மேட்' என்று தெரிந்தாலும் முயற்சிக்குப் பாராட்டுக்கள். விதவிதமான ஆயுதங்களை செய்வதற்கே கலை இயக்குனர் சாபு சிரிலுக்கு நேரம் போய் இருக்கும். கென்னி பேட்ஸ் அமைத்த சண்டைக் காட்சிகளில் ரத்தம் தெறித்தாலும் அதிரடியாய் உள்ளன.
கெட்டவனாக இருந்து திருந்திய கதாநாயகன், தன்னுடன் கெட்டவர்களாக இருந்தவர்களையும் நல்லவர்களாக மாற்ற முயற்சிப்பதுதான் கதை. எந்த 'டிவிஸ்ட்' என திருப்பங்களையும் கிளைமாக்ஸ் வரை சொல்லவில்லை. இடைவேளை வரையே ஒரு முழு படத்தைப் பார்த்த திருப்தி ஏற்பட்டு விடுகிறது. அதன்பின் வரும் காட்சிகள் எல்லாம் பொறுமையை சோதிப்பவை. இடைவேளைக்குப் பிறகே இப்படி என்றால் இரண்டாம் பாகத்தில் என்ன சொல்லப் போகிறார்களோ ?. ஆஆஆ…ஒன்று சொல்ல மறந்துவிட்டோம். 'சுறா'வுடன் ஸ்விம்மிங் செய்யும் ஹீரோ காட்சிகள் படத்தில் உண்டு.
தேவரா - இங்கு தேறுவாரா ?...
தேவரா 1 தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
தேவரா 1
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்