ஹாலிவுட்டில் வெளியான செப் படத்தை அப்படியே இந்திய ரசிகர்கள் ஏற்றபடி ஹிந்தியில் ரீ-மேக் செய்து, அதில் சைப் அலிகான், நம்ம ஊரு பத்மபிரியா நடிக்க வெளிவந்திருக்கும் படம் செப். இப்படம் ரசிகர்களுக்கு விருந்து படைத்ததா... இல்லையா... என்று இனி பார்ப்போம்.
கதைப்படி, அமெரிக்காவில் ஹோட்டல் ஒன்றில் செப்பாக பணியாற்றுகிறார் ரோஷன் கல்ரா எனும் சைப் அலிகான். ஒருநாள் கஸ்டமர் ஒருவரை கோபத்தில் அடித்து விட வேலையை இழக்கிறார். ஏற்கனவே மனைவி ராதா எனும் பத்மபிரியாவுடன் விவாகரத்து பெற்று தனிமையில் வாழும் சைப்பிற்கு வேலையை இழந்தது மேலும் சோகத்தை கொடுக்கிறது.
மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றாலும் தன் மகன் அர்மான் எனும் ஸ்வார் காம்பிளிக்காக மனைவியோடு டச்சில் உள்ளார். தன் மகனை பார்க்க இந்தியா வரும் சைப், மகனின் பாசத்தால் இந்தியாவிலேயே தங்கிவிடுகிறார். கூடவே மனைவி ராதா கொடுத்த ஐடியாவில் டபுள் டக்கர் பஸ் ஒன்றில் புதிய ஹோட்டல் திறக்க களமிறங்குகிறார். அதில் வெற்றி சைப் பெற்றாரா..., மகனுக்காக மீண்டும் மனைவியுடன் இணைந்தாரா...? என்பது செப் படத்தின் உணர்வுப்பூர்வமான மீதிக்கதை.
சைப் அலிகான், செப் கதாபாத்திரத்தை விட பாசமிகு தந்தை கதாபாத்திரத்தில் அவ்வளவு அருமையாக நடித்திருக்கிறார். அவருக்கு உறுதுணையாக பத்மபிரியாவும் தன் ரோலை சிறப்பாக செய்திருக்கிறார். இவர்கள் இருவரை போன்று மகனாக வரும் ஸ்வார் காம்ளேவும் நடிப்பில் சிறப்பு.
"ஏர் லிப்ட்" எனும் வெற்றி படத்தை கொடுத்த ராஜா கிருஷ்ணா மேனன், செப் படத்தை மிக நேர்த்தியாக சிறப்பாக இயக்கியுள்ளார். ஆங்கில படத்தின் ரீ-மேக் என்றாலும் அதை இந்திய ரசிகர்களுக்கு ஏற்றபடி ஒரு சென்ட்டிமென்ட், உணர்ச்சிகரமான காட்சிகள் என விருந்து படைத்திருக்கிறார். இயக்குநரின் விருந்து தனது ஒளிப்பதிவால் மெருகேற்றிருக்கிறார் பிரியா செத். பாடல்கள் இசை மனதில் பெரிய அளவில் ஒட்டவில்லை என்றாலும் பின்னணியில் உறவாடுகிறது.
மொத்தத்தில், "செப் - அப்பா, மகனின் பாசமும், உணர்வுப்போராட்டமும் கலந்த, அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய அருமையான படம்.