அக்கட தேசம் அதிகம் எதிர்பார்த்த என்.டி.ஆரின் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் ஜனதா கேரேஜ். அதீத எதிர்பார்ப்பிற்கு மற்றொரு காரணம் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஜனதா கேரேஜ் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பது.
சத்யம் எனும் கதாபாத்திரத்தில் வரும் மோகன்லால், எல்லாருக்கும் உதவும் ஒரு நல்ல மனிதர். அந்த உதவியை ஜனதா கேரேஜ் என்கிற பெயரில் செய்து வருகிறார். மற்றொருபுறம் ஜூனியர் என்.டி.ஆர்(ஆனந்த்) இயற்கையை நேசிப்பவராக, சுற்றுச்சூழலை பாதுகாக்க என்ன வேண்டுமோ அதை செய்பவராக இளமை துள்ளலுடன் திகழ்கிறார்.
ஒரு சுபயோக சுப தினத்தில் ஜனதா கேரேஜை சேர்ந்த ஒருவனுடன் ஜூனியர் என்.டி.ஆருக்கும் சிறு முட்டல் மோதல் நிகழ்கிறது. இந்த நிகழ்வுகளின் போது இதை கவனிக்கும் மோகன்லால், ஜூனியர் என்.டி.ஆரின் நேர்மை குணத்தால் ஈர்க்கப்பட்டு அவனை தன்னுடன் வந்து சேர்ந்து கொள்ள சொல்கிறார். தன்னை எதிர்த்த ஜூனியர் என்.டி.ஆரை மோகன்லால் தன்னுடன் சேர்த்துக் கொள்ள வேறு காரணம் உண்டா?? ஜூனியர் என்.டி.ஆர் ஜனதா கேரேஜில் இணைந்தாரா?? படத்தில் நாயகிகளுக்கான வேலை என்ன? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒற்றை ஆளாக படத்தை தாங்குகிறார், அவரது கதாபாத்திரத்தை சுற்றித்தான் திரைக்கதையின் முக்கிய நிகழ்வுகள் நிகழ்கின்றன. இதை தனது தேர்ந்த நடிப்பால் அருமையாக கையாண்டு அப்ளாஸ் அள்ளுகிறார் மோகன்லால். மோகன்லாலை சத்யம் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தமைக்கு நிச்சயம் இயக்குனரை பாராட்டியாக வேண்டும்.
ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்களுக்கான பிரத்யேகமான ஹீரோயிச சமாச்சாரங்கள் இல்லாத போதும், ஸ்டார் அந்தஸ்த்தை விட்டு விட்டு கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது ஜூனியர் என்.டி.ஆரிடம் வரவேற்க வேண்டிய மாற்றம். வில்லனாக சச்சின் கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்.
படத்தில் இரு நாயகிகளின் வேலை என்ன என்பது தான் பெரிய கேள்விக்குறி. நாயகிகள் இருவரும் வருகிறார்கள் ஆடுகிறார்கள் செல்கிறார்கள். அவர்களின் கால்ஷீட்டை வீணடித்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். சமந்தா, நித்யா மேனனைக் காட்டிலும் ஒரு பாடலுக்கு நடனமாடிய காஜல் அகர்வால் ரசிகர்கள் நினைவில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்.
இயக்குனர் கொரட்டாலா சிவா, மைய கதையை தொடங்க அதிக நேரம் எடுத்து கொண்டிருக்கிறார். மிக மெதுவான திரைக்கதை அவ்வப்போது சோர்வடைய வைக்கிறது. ஒளிப்பதிவு குறிப்பிட்டுச்சொல்லும் படி அமைந்துள்ளது ஆறுதலான விசயம். ஐதராபாத், மும்பை பகுதிகளை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். எடிட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை படத்தை ஒரு பங்கு உயர்த்திக்காட்ட பயன்பட்டிருக்கிறது, மேலும் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. முதல் பாதியில் மெதுவாக தொடங்கும் கதை பின்பாதியில் வேகம் எடுத்து கிளைமேக்ஸை நோக்கி நகர்கிறது. ஆனால் பழக்கப்பட்ட கிளைமேக்ஸ் மீண்டும் சலிப்பை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில், மோகன்லால் ரசிகர்களை ஓரளவு திருப்திபடுத்தும் ‛ஜனதா கேரேஜ்', ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களை கண்டிப்பாக திருப்திப்படுத்தாது. வழக்கமான பழக்கப்பட்ட கதை தடையில்லை என்றால் ‛ஜனதா கேரேஜ்' படத்தை தாரளமாக பார்க்கலாம்.