டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில், இயக்குநர் கொரடலா சிவா இயக்கத்தில் வெளிவந்துள்ளது ஸ்ரீமந்துடு திரைப்படம். தமிழில் ''செல்வந்தன்'' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இப்படம் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த ஸ்ரீமந்துடு திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எந்த அளவிற்கு பூர்த்தி செய்துள்ளது என பார்க்கலாம்.
ஸ்ரீமந்துடு படத்தின் கதைப்படி ஹர்ஷா(மகேஷ் பாபு) பெரும் பணக்காரராண ஜெகபதி பாபுவின் மகன். சாதாரணமாக வாழ்ந்துவரும் நபர் மற்றும் அவ்வப்போது தனது கருத்துக்களை தனது தந்தையுடனும் பகிர்ந்துகொள்ளக் கூடியவர். இவ்வாறு தன் வாழ்க்கையை கழித்து வரும் ஹர்ஷா, ஒரு நன்நாளில் சாருஷீலா (ஸ்ருதிஹசனை) வை பார்க்கிறார், இயல்பாக அவர் மீது காதல் வயப்படுகிறார்.
இப்போது பிரச்சனை வந்தாகவேண்டுமே, ஹர்ஷாவின் காதலை ஏற்க மறுக்கும் சாருஷீலா, அவனின் சொந்த கிராமத்தின் நிலையை மற்றும் அங்கு நிலவும் பிரச்சனைகளையும் சொல்கிறாள். கலக்கம் கொள்ளும் ஹர்ஷா, கிராமத்திற்கு உதவ நினைத்து அங்கே செல்கிறார், பிரச்சனைக்கு சசி(சம்பத்) மற்றும் அவனது ஆட்கள் தான் காரணாம் என்று கண்டு பிடிக்கிறார். அப்புறம் என்ன ஹர்ஷா நினைத்ததை முடித்தாரா?? கிராமம் நிம்மதி அடைந்ததா?? ஹர்ஷா சாருவை கைபிடித்தாரா?? என்பது தான் படத்தின் மீதி கதை.
மகேஷ்பாபுவின் பட வெளியீடு என்றாள் எப்போதுமே தெலுங்கு தேசத்தில் திருவிழா தான் அதுவும் ஸ்ரீமந்துடு, இதுவரை வெளியான மகேஷ்பாபு படங்களிலேயே பெரியபடம். அப்புறம் என்ன டோலிவுட்டில் திருவிழாதான். சமூகத்திற்கு மிகத்தேவையான கருத்தை படம் பலமாக சொல்கிறது. ஒரு இயக்குனராக எடுத்த கருத்தில் நிலையாக நின்று சமரசம் செய்யாமல் அதை கதாநாயகன் வழியாக சொன்ன விதத்தில் நிச்சயமாக கொரடலா சிவாவை பாராட்டியாக வேண்டும்.
அடுத்தாக மகேஷ் பாபு அழகாக அதுவும் கல்லூரி மாணவனாக வசீகரீக்கிறார். மொத்த படத்தின் சுமையை ஒற்றை ஆளாக தாங்கி நடித்திருக்கிறார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இரண்டாம் பாதியில் உணர்ச்சிகளை மிக அழகாக வெளிப்படுத்துகிறார். ஜெகபதி பாபு உடனான காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். அந்த காட்சிகள் படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறன.
ஸ்ருதிஹாசனுக்கு படத்தில் குறிப்பிடும் படியான கதாபாத்திரம், இந்த ஜோடி புதிது என்பதால் பார்க்க புதிதாகவும் இளமை துள்ளலோடும் இருக்கிறது. தனது நடிகர்களிடம் நல்ல நடிப்பை வரவழைத்து அதை ரசிக்கும்படி காட்சியும் படுத்தியிருக்கிறார் இயக்குநர். இது இரண்டாம் பாதிக்கு இன்னும் வலு சேர்ப்பதாக அமைகிறது.
படத்தின் பிரச்சனை என சொல்லவேண்டுமானால் அதன் வேகம் மட்டுமே, அதுபோக சில இடங்களில் காட்சிகளை யூகிக்க முடிகிறது. கிரமத்து காட்சிகளின் நீளத்தை சற்றே குறைத்திருந்தால் இன்னும் படம் வேகம் எடுத்திருக்கும். இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை எல்லாவற்றையும் மகேஷ்பாபு என்கிற ஒற்றை மனிதர் பார்த்துக் கொள்வார்.
படத்தில் இடம் பெறும் சண்டை காட்சிகளே இது வரை பார்த்திராத வகையில் நேர்த்தியாக அமைத்திருக்கிறார் அனல் அரசு. மதியின் கேமிரா படத்தின் தரத்தை உயர்த்திப்பிடிக்க உதவியிருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்களும் நன்றாகவே வந்திருக்கின்றன. பின்னனி இசையிலும் தேவி ஸ்ரீ பிரசாத் பிரமாத படுத்தியிருக்கிறார்.
வசனங்கள் மிக எளிமையாக அதே நேரத்தில் கதைக்கு உயிரூட்டுவதாகவும் அமைந்திருக்கிறது. சிவா, மகேஷ்பாபுவை புதிதாக காட்டியிருக்கிறார். எந்த கமர்ஷியல் அம்சங்களையும் படத்தில் வலுக்கட்டாயமாக சேர்த்துக்கொள்ளாமல் தெளிவாக எடுத்த கருத்தை முன்வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் சிவா.எது எப்படியோ மகேஷ்பாபு மீண்டும் தனது ரசிகர்களை திருப்தி படுத்துகிறார். மகேஷ் பாபுவின் திரை பயணத்தில் அவருக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்கும்.
''ஸ்ரீமந்துடு- வெற்றிச்செல்வன்''